திருவழுந்தூர்

சிவ பெருமானுக்குக் “கம்பன்” என்ற பெயர் உண்டு என்றும் சில தமிழ் அறிஞர்கள் கூறுவர். சுந்தரர் சிவ பெருமானைப் பாடும்போது ,”கண்ணும் மூன்றுடைக் கம்பன்”, “கங்கையாளின் கம்பன்”, ” கூத்தன் கம்பன்” என்று பாடுகிறார். சிவ பெருமானுக்கு ‘ஏகாம்பரன்” என்ற பெயர் உண்டு என்பதால் அது மருவி ‘ஏகம்பன்’ என்றும் “கம்பன்” என்றும் ஆனதாகக் கூறுகிறார் காலஞ்சென்ற தமிழ் அறிஞர் வையாபுரிப் பிள்ளை. கம்பர் இளமையில் கரும்புக் கொல்லையைக் கையில் கம்புடன் காத்ததால் கம்பர் என்று அழைக்கப்பட்டார் என்கிறார் செல்வ கேசவ ராய முதலியார் என்னும் தமிழ் அறிஞர். இப்படிப் பல கதைகள் , இலக்கியச்சான்றுகள் இருந்தாலும் இதுதான் உண்மை என்று அறியமுடியவில்லை.

அமைவிடம்

மயிலாடுதுறை - கும்பகோணம் இரயில் பாதையில் தேரழுந்தூர் நிலையத்திலிருந்து 3-கி.மீ. தூரத்தில் இத்திருக்கோயில் உள்ளது. அ/மி. ஸ்ரீ வேதபுரீஸ்வரர் திருக்கோயில்,
தேரழந்தூர் & அஞ்சல்,
மயிலாடுதுறை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் - 609 808. தொடர்பு : 04364-237952 ,

தாயார் : ஸ்ரீ செங்கமல வல்லி
மூலவர் : தேவாதிராஜன்
உட்சவர்: ஆமருவியப்பன்
மண்டலம் : சோழ நாடு
இடம் : மயிலாடுதுறை
கடவுளர்கள்: விஷ்னு,காவேரி


திவ்யதேச பாசுரங்கள்

    1588.   
    தந்தை காலில் பெரு விலங்கு*  தாள் அவிழ நள் இருட்கண்- 
    வந்த எந்தை பெருமானார்*  மருவி நின்ற ஊர்போலும்*
    முந்தி வானம் மழை பொழியும்*  மூவா உருவின் மறையாளர்* 
    அந்தி மூன்றும் அனல் ஓம்பும்*  அணி ஆர் வீதி அழுந்தூரே*.

        விளக்கம்  


    • இத்திருமொழியும் மேல்மூன்று திருமொழிகளுமாக நாற்பது பாசுரங்கள் திருவழுந்தூர்ப்பதி விஷயமாக அருளிச் செய்யப்படுமவை. தனது தவத்தின் வலிமையால் இரதத்துடன் வானத்திற் செல்லுந்தன்மையனான உபரிசரவஸுவென்னும் அரசன் தேவர்கட்கும் முனிவர்கட்கும் நேர்ந்தவிவாதத்தில் பக்ஷபாதமாய்த் தீர்ப்புச் சொன்னது காரணமாக முனிவர்களாற் சபிக்கப்பட்டுப் பூமியில் விழுகையில் அவனது தேர் அழுந்தப்பெற்ற இடமாதல்பற்றி இத்தலத்திற்கு அழுந்தூர் என்றுபெயர்வந்தது என்பர். ‘தேரழுந்தூர்’ எனவும் வழங்கப்பெறும். இத்தலத்திலெழுந்தருளியிருக்கு மெம்பெருமானுடைய திருநாமம் ‘ஆமருவியப்பன்’ என்பதாதலால் “தந்தைகாலில் பெருவிலங்கு தாளவிழ நள்ளிருட்கண்வந்த வெந்தை பெருமானார் மருவிநின்றவூர்” என்று தொடங்குகின்றார்.


    1589.   
    பாரித்து எழுந்த*  படை மன்னர் தம்மை மாள பாரதத்து- 
    தேரில் பாகன் ஆய் ஊர்ந்த*  தேவதேவன் ஊர்போலும்* 
    நீரில் பணைத்த நெடு வாளைக்கு*  அஞ்சிப் போன குருகு இனங்கள்* 
    ஆரல் கவுளோடு அருகு அணையும்*  அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே*.   

        விளக்கம்  


    • பின்னடிகளில் அவ்விடத்து வயல்வளஞ் சொல்லுகிறது. குருகுகளானவை திரள் திரளாக மீன்களைப் பிடிக்க நீர் நிலங்களில் வந்து இழிந்து தம் வாய்க்கு அடங்கக்கூடிய சிறுமீனைப் பிடித்துக் கதுப்பிலே அடக்கிகொண்டிருக்கச்செய்தே வேறேயொரு பெரியமீன் வந்து தோற்ற, அதைப்பிடிக்க அஞ்சி ஓடிப்போய், பின்னையும் ஆசையினால் வந்து கிட்டா நிற்குமென்கை. இந்த வர்ணனையின் உட்கருத்தைப் பெரியவாச்சான் பிள்ளை வெளியிடுகறார் காண்மின் :– “பாரத ஸமரத்தில் பீஷ்மாதிகள் ‘அதிரதர், மஹாரதர் என்றிங்ஙனே பேர்பெற்று ஜீவித்திருந்தோம், இப்போதாகப் பூசல்கோழைகளாக வொண்ணாது’ என்று சாரதி பக்கலிலே வந்து கிட்டுவது, தேர்க்காலிலே உழக்குண்டு போகவொண்ணாதென்று அகலுவதாய்க்கொண்டு அவர்கள் படுவனவற்றைப் படாநின்றனவாய்த்துக் குருகினங்களும்” என்று.


    1590.   
    செம் பொன் மதிள் சூழ் தென் இலங்கைக்கு இறைவன்*  சிரங்கள் ஐஇரண்டும்* 
    உம்பர் வாளிக்கு இலக்கு ஆக*  உதிர்த்த உரவோன் ஊர்போலும்*
    கொம்பில் ஆர்ந்த மாதவிமேல்*  கோதி மேய்ந்த வண்டு இனங்கள்*
    அம்பு அராவும் கண் மடவார்*  ஐம்பால் அணையும் அழுந்தூரே*.

        விளக்கம்  


    • திருவழுந்தூரிலுள்ள மாதர்கள் தேனொழுகுங் கூந்தலையுடையார் என்கிறது பின்னடிகளில், மதுமிக்க பூக்கள் எப்போதும் கூந்தலில் அணிந்திருப்பவர்களென்கை. இதுவும் நகர்ச் சிறப்புகளுள் ஒன்றாம். கொம்புகள் செறிநிதிருந்துள்ள குருக்கத்தியின் மேலே செருக்காலே தளிரையும் பூக்களையும் கோதி அவற்றில் நின்றும் மதுபானம் பண்ணின வண்டினங்கள், அவற்றிற் காட்டிலும் போக்யதையும் இருட்சியும் மிக்கதொரு இடந்தேடிப் போய் இராத் தங்கவேணும் என்று பார்த்து அங்குள்ள ஸ்த்ரீகளின் கூந்தற்கறையிலேறுகின்றனவாம். குருக்கத்தியி லிருப்பதிற் காட்டிலும் அங்குற்ற மாதர்களின் தலையிலிருப்பது போக்ய மென்னும் முகத்தால் அவர்களது சிறப்புச் சொல்லிற்றாயிற்று. ஐம்பால் = ஐவகைப் பான்மைகளை யுடையதென்று கூந்தலுக்குக் காரணப் பெயர். சுருண்டிருத்தல், அடர்ந்திருத்தல், கறுத்திருத்தல், நறுமணங் கொண்டிருத்தல் ஆகிய இவ்வைந்து தன்மைகள் உத்தம கேச லக்ஷணம் என்க.


    1591.   
    வெள்ளத்துள் ஓர் ஆல் இலைமேல் மேவி*  அடியேன் மனம் புகுந்து*  என்- 
    உள்ளத்துள்ளும் கண்ணுள்ளும்*  நின்றார் நின்ற ஊர்போலும்*
    புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடிப்*  போன காதல் பெடையோடும்* 
    அள்ளல் செறுவில் கயல் நாடும்*  அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே*.   

        விளக்கம்  



    1592.   
    பகலும் இரவும் தானே ஆய்*  பாரும் விண்ணும் தானே ஆய்*
    நிகரில் சுடர் ஆய் இருள் ஆகி*  நின்றார் நின்ற ஊர்போலும்*
    துகிலின் கொடியும் தேர்த் துகளும்*  துன்னி மாதர் கூந்தல்வாய்* 
    அகிலின் புகையால் முகில் ஏய்க்கும்*  அணி ஆர் வீதி அழுந்தூரே*.     

        விளக்கம்  


    • பகலுமிரவுந் தானேயாய் = என்ற உபநிஷத்தின்படியே பகற்போதுக்கு இறைவனான ஸூர்யணும் இராப்போதுக்கு இறைவனான சந்திரனும் தனது கட்டளைக்குக் கீழ்ப்பட்டு நடக்கும்படியான நிர்வாஹ சக்தி வாய்ந்தவன் திருமால் என்றபடி. தன் ஸங்கல்பத்தாலே பகலை இராவக்கவும் இரவைப் பகலாக்கவும் வல்லவன் என்றுமாம்; பாரதப்போரில் ஜயத்ரதவத வ்ருத்தாந்தத்தை நினைப்பது. பாரும் விண்ணும் தானேயாய் = உபயவிபூதிக்கும் நிர்வாஹகனென்கை. நிகரில் சுடராய் இருளாகி நின்றார் = நக்ஷத்ரம் முதலிய சுடர்ப் பொருள்களையம் அவற்றுக்கு எதிர்த்தட்டான இருட்டையும் வடிவாகவுடையவன். ஸாத்விகர்களாய் ஜாயமாநகால கடாக்ஷம் பெற்றவர்களுக்கு ப்ரகாசமாக ஸேவைஸாதிப்பவன்; ராஜஸர்க்கும் தாமஸர்க்கும் தோன்றாதே இருள்மூடிக் கிடப்பவன் என்றவாறு. ஆகவிப்படி ஜகத்ரூபியா யிருந்தாலும் அஸாதாரண திவ்யமங்கள விக்ரஹவிசிஷ்டனாய் ஸேவை ஸாதிக்குமிடம் திருவழுந்தூர்.


    1593.   
    ஏடு இலங்கு தாமரைபோல்*  செவ்வாய் முறுவல் செய்தருளி* 
    மாடு வந்து என் மனம் புகுந்து*  நின்றார் நின்ற ஊர்போலும்*
    நீடு மாடத் தனிச் சூலம்*  போழக் கொண்டல் துளி தூவ* 
    ஆடல் அரவத்து ஆர்ப்பு ஓவா*  அணி ஆர் வீதி அழுந்தூரே*.         

        விளக்கம்  


    • என்னைப் பெறுதற்கு நெடுநாள் ஸமயம் பார்த்திருந்து பெறுகையால் அலப்ய லாபம் பெற்றவர்போல ஸந்தோஷித்து அந்த ஸந்தோஷம் விளங்குமாறு, தாமரைப்பூ மலர்ந்தாற்போல திருப்பவளத்தைத் திறந்து புன்முறுவல் செய்து அதிலே என்னை யீடுபடுத்தி ஹ்ருதயத்திலே வந்து புகுந்து ‘இனி இவர்க்கொரு போக்கில்லை’ என்று தோற்ற நின்றவர் கண்ணுக்கு இலக்காக வந்து நிற்கிற திவ்யதேசம் திருவழுந்தூர். அத்திருப்பதி எப்படிப்பட்டது? ; அங்குள்ள மாடமாளிகைகள் மேக மண்டலத்தளவும் ஓங்கியிருக்கின்றன. மாளிகைகளின் முனையிலே பாதுகாப்புக் குறுப்பாகச் சூலங்கள் நாட்டப்படும். (“சிலையிலங்கு மணிமாடத் துச்சிமிசைச் சூலம் செழுங்கொண்டலகடிரிய” (3-9-4) என்றார் வைகுந்த விண்ணகர திருப்பதிகத்திலும்.) அந்த சூலங்கள் மேகங்களினுடைய கீழ்வயிற்றை யிடித்துப் பிளக்க, மழை சொரிகின்றதாம். (இவ்வதிசயோக்தியினால் மாடமாளிகைகளின் ஓக்கம் உணர்த்தப்பட்டதாம்.) இன்னமும், மாதர்கள் ஆடுகிறபோதுண்டான ஆரவாரம் இடையறாதே செல்கின்றதாம்.


    1594.   
    மாலைப் புகுந்து மலர்அணைமேல்*  வைகி அடியேன் மனம் புகுந்து*  என்- 
    நீலக் கண்கள் பனி மல்க*  நின்றார் நின்ற ஊர்போலும்*
    வேலைக் கடல்போல் நெடு வீதி*  விண் தோய் சுதை வெண் மணி மாடத்து* 
    ஆலைப் புகையால் அழல் கதிரை மறைக்கும்*  வீதி அழுந்தூரே*    

        விளக்கம்  


    • இதுமுதல் மேல் மூன்று பாசுரங்களிலும் ஆழ்வார்க்கு நாயகி பாவனை நிகழ்வதாகக் கொள்ளத்தகும். என்னோடு கலவிசெய்ய விருப்பங்கொண்டு அதற்கு உரிய மாலைப் பொழுதிலே வந்து சேர்ந்து மென்மலர்ப் பள்ளியிலே தங்கி, அவ்விருப்பில் த்ருப்தி பெறாதே என்னுடைய ஹ்ருதயத்தினுள்ளே ஏகதத்துவமாகப் புகுந்து, கலவியானது பிரிவோடே சேர்ந்தல்லது இருக்கமாட்டாதாகையாலே உடனே பிரிந்து போவதாகப் பிரஸ்தாவித்து, அவ்வளவிலே எனது கண்களில் நின்றும் நீர் பெருக, அதைக்கண்டு ‘இவ்வளவு ஆற்றாமையிலே இந்த நாயகியை எங்ஙனம் விட்டுப் பிரிவது?’ என்று கலங்கிக் கால் பெயர்ந்து போக மாட்டாதே நின்றவர் நித்யவாஸம் பண்ணுகிற திவ்யதேசம் திருவழுந்தூர். அவ்விடத்தில் ஒவ்வொரு திருவீதியும் கடல்போன்று பெருமை பொருந்தியிருக்கும். சாந்திட்டு வெண்ணிறமா யிருக்கின்ற மணிமாடங்கள் விண்ணுலகத்தளவும் ஓங்கியிருக்கும். ஸூர்ய கிரணங்களைக் கரும்பாலைப்புகை வந்து மறைத்து எங்கும் நிழல் செய்யும். இது வாயிற்று அவ்வூர்ப் பெருமை.


    1595.   
    வஞ்சி மருங்குல் இடை நோவ*  மணந்து நின்ற கனவகத்து*  என்- 
    நெஞ்சு நிறையக் கைகூப்பி*  நின்றார் நின்ற ஊர்போலும்*
    பஞ்சி அன்ன மெல் அடி*  நல் பாவைமார்கள்*  ஆடகத்தின்- 
    அம் சிலம்பின் ஆர்ப்பு ஓவா*  அணி ஆர் வீதி அழுந்தூரே*.     

        விளக்கம்  


    • இதுவும் ஆழ்வார் நாயகி ஸமாதியால் பேசும் பாசுரம். கனவிலே வந்து கலந்து பிரிந்து போனவர் மற்றுள்ள அன்பரோடும் 1. நனவிலே கலவிசெய்ய வந்து நிற்கிறவிடம் திருவழுந்தூர். வஞ்சிமருங்குலிடைநோவ = பெண்டிருடைய இடைக்கு வஞ்சிக்கொடியை உவமை சொல்வது கவிமரபு. இடை நோவ மணந்து நின்றானென்றதனால் பூர்ணஸம்ச்லேஷம் நடந்தமை தோன்றும். ‘மருங்குல்’ என்றாலும் ‘இடை’ என்றாலும் இடுப்புக்கே பெயர்; இரண்டு சொற்களையும் சேரப் பிரயோகித்தது தமிழ் வழக்கு. கைகூப்பி – எச்சத்திரிபு. அங்குள்ள மாதர்கள் பொன்மயமான நூபுரங்களைக் காலிலணிந்து கொண்டு நர்த்தனம் பண்ணா நிற்பர்கள்; அதனாலுண்டான ஆரவாரம் ஓயாதிருக்கு மென்கிறது பின்னடிகளில். பஞ்சி – பஞ்சு! போலி. பாவைமார் – பதுமைபோல அழகியவர்கள்; உவமையாகுபெயர். ‘ஹாடகம்’ என்னும் வடசொல் ஆடகமெனத் திரிந்தது. 1. நனவு – கனவுக்கு எதிர்த்தட்டு; ப்ரத்யக்ஷம்.


    1596.   
    என் ஐம்புலனும் எழிலும் கொண்டு*  இங்கே நெருநல் எழுந்தருளி* 
    பொன் அம் கலைகள் மெலிவு எய்த*  போன புனிதர் ஊர்போலும்*
    மன்னும் முது நீர் அரவிந்த மலர்மேல்*  வரி வண்டு இசை பாட* 
    அன்னம் பெடையோடு உடன் ஆடும்*  அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே*.

        விளக்கம்  


    • இப்பாசுரமும் நாயகி ஸமாதியாற் பேசுவதாம். என்னடைய செவி வாய் கண் மூக்கு உடல் என்னும் பஞ்செந்திரியங்களினுடையவும் வ்ருத்திகளைத் தன்வசமாக்கிக் கொண்டவரும், எனது மேனியழகைக் கொள்ளை கொண்டவரும், அரையில் பரியட்டம் தங்காதபடி பண்ணிவிட்டுப் போனவருமான தலைவர் வாழுமிடம் திருவழுந்தூர். ஐம்புலனையுங் கொள்கையாவது – லௌகிக பதார்த்தங்களில் ஒரு உறுப்புஞ்செல்ல வொண்ணாமல் “ஜிஹ்வே! கீர்த்தய கேசவம் முரரிபும் சேதோ பஜ ஸ்ரீதரம் பாணித்வந்த்வ! ஸமர்ச்சயாச்புதகதா ச்ரோத்ரத்வய! த்வம் ச்ருணு-க்ருஷ்ணம் லோகய லோசநத்வய! ஹரே கச்சாங்க்ரியுக்மாலயம் ஜிக்ர க்ராண! முகுந்த பாத துலஸீம் மூர்த்தந்! நமாதோக்ஷஜம்” (முகுந்தமாலை) என்றச்லோகத்தின் படியே ஸகல கரணவ்ருத்திகளையும் தன்வசப் படுத்திக்கொள்ளுதலாம். எழில் கொள்ளுகை – பிரிவுத்துயரத்தினால் மேனிநிறமழியச் செய்கை. போன புனிதர் ஊர்போலும் = இங்கே ‘புனிதர்’ என்றது எதிர்மறையிலக்கணை யென்னலாம்; இப்படி என்னைப் படுகொலை செய்பவர் எங்ஙனே பரிசுத்தராவர்? பெண்கொலைப் பாதகியன்றோ இவர் என்று ப்ரணயரோஷந்தோற்றச் சொல்லுகிறதாகலாம்.


    1597.   
    நெல்லில் குவளை கண் காட்ட*  நீரில் குமுதம் வாய் காட்ட *
    அல்லிக் கமலம் முகம் காட்டும்*  கழனி அழுந்தூர் நின்றானை*
    வல்லிப் பொதும்பில் குயில் கூவும்*  மங்கை வேந்தன் பரகாலன்* 
    சொல்லில் பொலிந்த தமிழ்மாலை*  சொல்ல பாவம் நில்லாவே*. (2)

        விளக்கம்  


    • நெல்லுக்குக் களையாக முளைத்த குவளைப்பூக்கள் அவ்வூரிலுள்ள மாதர்களின் கண்போலவும், நீர்நிலங்களிலுண்டான அரக்காம்பல்கள் அவர்களின் அதரம் போலவும், தாமரைப்பூக்கள் அவர்களது முகமண்டலம் போலவும் தோன்றப்பெற்ற வயல்களாற் சூழப்பட்ட திருவழுந்தூரில் நித்யவாஸஞ்செய்தருளா நின்ற ஆமருவியப்பன் விஷயமாகத் திருமங்கையாழ்வா ரருளிச்செய்த இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்களுக்குப் பாவங்களெல்லாம் தொலைந்துபோமென்று பயனுரைத்தாராயிற்று.


    1598.   
    சிங்கம் அது ஆய் அவுணன்*  திறல் ஆகம் முன் கீண்டு உகந்த* 
    சங்கம் இடத்தானை*  தழல்ஆழி வலத்தானை*
    செங்கமலத் தயனையார்*  தென்ணழுந்தையில் மன்னிநின்ற* 
    அம் கமலக் கண்ணனை*  அடியேன் கண்டு கொண்டேனே*.(2)     

        விளக்கம்  


    • “நரசிங்கமாய்” என்னாமல் ‘சிங்கமதாய்’ என்றது என்னென்னில்; முகமே முக்கிய மாதலால், அதுதான் சிங்கவுருவமாதலால் சொல்லிற்று. செங்கமலத்தயனனையார் = அவ்வூரிலுள்ளவர்கள் நான்முகனை யொத்திருக்கின்றார்கள் என்றால் ‘எந்த விஷயத்தில்? என்று கேள்வி; ஓயாது வேதமோதும் விஷயத்தில் என்றாவது, ஸ்ருஷ்டியை நடத்தும் விஷயத்தில் என்றாவது கொள்க. என்று ஸ்தோத்ரரத்ந ஸ்ரீஸூக்திகாண்க.


    1599.   
    கோவானார் மடியக்*  கொலையார் மழுக்கொண்டு அருளும்* 
    மூவா வானவனை*  முழுநீர் வண்ணனை*  அடியார்க்கு-
    ஆ! ஆ! என்று இரங்கித்*  தென்னழுந்தையில் மன்னிநின்ற* 
    தேவாதி தேவனை*  யான் கண்டுகொண்டு திளைத்தேனே*.

        விளக்கம்  



    1600.   
    உடையானை*  ஒலி நீர் உலகங்கள் படைத்தானை* 
    விடையான் ஓட அன்று*  விறல் ஆழி விசைத்தானை*
    அடையார் தென் இலங்கை அழித்தானை*  அணி அழுந்தூர்- 
    உடையானை*  அடியேன் அடைந்து உய்ந்துபோனேனே*.     

        விளக்கம்  



    1601.   
    குன்றால் மாரி தடுத்தவனை*  குல வேழம் அன்று- 
    பொன்றாமை*  அதனுக்கு அருள்செய்த போர் ஏற்றை*
    அன்று ஆவின்நறுநெய்*  அமர்ந்து உண்ட அணி அழுந்தூர்- 
    நின்றானை*  அடியேன் கண்டுகொண்டு நிறைந்தேனே*.

        விளக்கம்  


    • பொன்றாமை – பொன்றுதல் – அழித்தல். அதனக்கு அருள்செய்த – அதுதன் கையிற் பறித்து வைத்துக்கொண்டிருந்த தாமரைப்பூவைத் திருவடிகளிலே ஸமர்ப்பிக்கப் பெற்றுக் கொள்வதாகிற அருளைச் செய்தவனென்க. திருவாய்ப்பாடியின் ஸ்தானத்திலே திருவழுந்தூரைத் திருவுள்ளம் பற்றினானென்பது மூன்றாமடியின் கருத்து.


    1602.   
    கஞ்சனைக் காய்ந்தானை*  கண்ணமங்கையுள் நின்றானை* 
    வஞ்சனப் பேய் முலையூடு*  உயிர் வாய் மடுத்து உண்டானை* 
    செஞ்சொல் நான்மறையோர்*  தென் அழுந்தையில் மன்னி நின்ற* 
    அஞ்சனக் குன்றம் தன்னை*  அடியேன் கண்டுகொண்டேனே*.

        விளக்கம்  


    • ஆழ்வார் திருவழுந்தூ ரெம்பெருமான் திறத்தில் மிக்க ஈடுபாடு கொண்டிருப்பதைக் கண்ட திருகண்ணமங்கை யெம்பெருமான் ‘இவ்வாழ்வார் நம்மை மறந்தொழிவரோ என்னவோ’ என்று திடுக்கிட்டுச் சடக்கென ஓடிவந்து எதிரேநிற்க, கண்ணமங்கையுள் நின்றானை’ என்கிறார்.


    1603.   
    பெரியானை*  அமரர் தலைவற்கும் பிரமனுக்கும்* 
    உரி யானை உகந்தானவனுக்கும்*  உணர்வதனுக்கு
    அரியானை*  அழுந்தூர் மறையோர்கள்*  அடிபணியும் 
    கரியானை*  அடியேன் கண்டுகொண்டு களித்தேனே*.      

        விளக்கம்  


    • உரியானை – யானை உரி என்று மொழி மாற்றுக. சிவபிரான் நடன மாடும்போது யானையுரியைப் போர்த்துக்கொண்டு நடனமாடுவனென்ப. கரியான் – ‘கருமை’ என்னும் பண்படியாப் பிறந்த பெயர்.


    1604.   
    திருவாழ் மார்வன் தன்னை*  திசை மண்நீர் எரிமுதலா* 
    உருவாய் நின்றவனை*  ஒலிசேரும் மாருதத்தை*
    அருவாய் நின்றவனை*  தென்னழுந்தையில் மன்னிநின்ற* 
    கருவார் கற்பகத்தை*  கண்டுகொண்டு களித்தேனே*      

        விளக்கம்  


    • ஒலிசேரும் மாருதத்தை = என்ற உபநிஷத் க்ரமத்திலே வாயுவானது ஆகாசத்தில் நின்றும் பிறந்ததாதலால் பூர்வ பூர்வ பூதங்களின் குணமும் உத்தரோத்தர பூதங்களில் தொடர்ந்துவருங் கணக்கிலே வாயுவுக்குத் தன் குணமான ஸ்பர்சமும். தனக்குக் காரணமான ஆகாசத்தின் குணமாகிய சப்தமும் உண்டென்க. “பூநிலாய வைந்துமாய்” என்ற திருச்சந்த விருத்த முதற்பாசுரத்தில் “சிறந்தகாலிரண்டூமாய்” என்றதுங் காண்க. கருவார்கற்பகத்தை = ‘கரு’ என்று கர்ப்பத்தைச் சொல்லுகிறது; அடியுடைத்தான கல்பவ்ருக்ஷமென்கை. ஸ்வர்க்க லோகத்தில் ஆலம்பன மொன்றுமின்றியே நிற்கிற கற்பகத்தருபொ லல்லாமல் பூமியிலே வேர்ப்பற்றுடைத்தான கற்பகமாம் எம்பெருமான்.


    1605.   
    நிலையாளாக*  என்னை யுகந்தானை*  நிலமகள்தன்-
    முலையாள் வித்தகனை*  முதுநான்மறை வீதிதொறும்*
    அலையாரும் கடல்போல் முழங்கும்*  தென்னழுந்தையில் மன்னி நின்ற*
    கலையார் சொற்பொருளைக்*  கண்டு கொண்டு களித்தேனே*.

        விளக்கம்  


    • நிலையாளாக என்னை உகந்தானை ஐச்வரியம் முதலிய க்ஷுத்ரபலன்களை விரும்புமவர்கள் அப்பலன் கைபுகுமளவும் ஆட்பட்டிருந்து பலன் கைபுகுந்தவாறே அகன்று போவர்கள்; அடியேன் அப்படியன்றியே எம்பெருமானையே உபாயமும் உபேயமுமாகப் பற்றினவனாதலால் என்னுடைய அடிமைக்கு ஒருநாளும் குலைதல் இல்லை; ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலாவடிமை செய்யும் நித்யகிங்கரனாக என்னைத் திருவுள்ளம் பற்றினானென்கிறார். (முதுநான்மறை யித்யாதி) திருவழுந்தூர்த் திருவீதிகள்தோறும் வேதகோஷம் கடலோசைபோல் முழங்கமாம். இப்படிப்பட்ட திருப்பதியிலெழுந்தருளியிருக்கும் எமிபிரானைக் கண்டுகளித்தேனென்றாராயிற்று. கலையார்சொற்பொருளை ஸகலசாஸ்த்ரங்களிலுமுள்ள ஸகல சப்தங்களுக்கும் எம்பெருமானேயிறே பொருள். ஸகல கலைகளாலும் புருஷார்த்தமாகப் பிரதிபாதிகப்படுபவன் என்றுமாம். மூன்றாமடியில் “அலையார் கடல்” என்றும் பாடமுண்டு.


    1606.   
    பேரானை*  குடந்தைப் பெருமானை*  இலங்கு ஒளிசேர்- 
    வாரார் வனமுலையாள்*  மலர்மங்கை நாயகனை,*
    ஆரா இன்னமுதை*  தென்னழுந்தையில் மன்னிநின்ற* 
    காரார் கருமுகிலை*  கண்டு கொண்டு களித்தேனே*. (2)   

        விளக்கம்  



    1607.   
    திறல் முருகனனையார்*  தென்னழுந்தையில் மன்னிநின்ற*
    அறமுதல் வனவனை*  அணியாலியர் கோன் மருவார்*
    கறைநெடு வேல்வலவன்*  கலிகன்றி சொல் ஐயிரண்டும்*
    முறைவழுவாமை வல்லார்*  முழுது ஆள்வர் வானுலகே*.

        விளக்கம்  


    • கறை நெடுவேல் – பகைவர்களைக் கொன்று ஏறின ரத்தக்கறையோடு கூடின வேற்படை. “தானுகந்த வூரெல்லாம் தன்தாள்பாடி” என்கிறபடியே திவ்ய தேசாநுபவமே போதுபோக்கா யிருக்குமிவர்க்கு வேற்படையில் ரத்தக்கறை கழுவுவதற்கு அவகாசமில்லையாம்.


    1608.   
    திருவுக்கும் திருஆகிய செல்வா!*  தெய்வத்துக்குஅரசே! செய்ய கண்ணா* 
    உருவச் செஞ்சுடர்ஆழி வல்லானே!*  உலகுஉண்ட ஒருவா! திருமார்பா!*
    ஒருவற்குஆற்றிஉய்யும் வகைஇன்றால்*  உடன் நின்று ஐவர் என்னுள்புகுந்து*  ஒழியாது- 
    அருவித் தின்றிட அஞ்சி நின்அடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!*  (2)

        விளக்கம்  


    • பஞ்சேந்திரியங்களில் தனித்தனி ஒவ்வொரு இந்திரியத்திற்கே ஆடல் கொடுப்பது அரிது; அப்படியிருக்க ஐந்து இந்திரியங்களையும் உடனிருத்தினால், அவை தாம் ‘எனக்கு வேண்டிய விஷயத்தைக் காட்டு, எனக்கு வேண்டிய விஷயத்தைக் காட்டு’ என்று மூலையடியே இழுத்துக் கொலை செய்தால் நான் எங்ஙனே வாழ்வது? இவை இன்னமும் என்னை எவ்வாறு நலியத் தேடுகின்றனவோவென்று சாலவும் அஞ்சி, அஞ்சினார்க்குப் புகலிடமான உன் திருவடிகளை வந்து பற்றினேன்; நீயோ தெய்வத்துக்கரசு;­- இந்திரியங்களுக்கு வசப்படாத ஒரு நாட்டை ஆள்பவன்; என்னையும் அந்தநாட்டிலே புகுவிக்க வல்லையல்லையோ? செஞ்சுடராழி வல்லானான நீ இவ்வைவர் மேல் ஆழி விடுத்துக் காரியஞ் செய்ய மாட்டிற்றிலையோ? அன்றொருகால் உலகுண்டு நோக்னாயென்று ஏட்டுப் புறத்திலே கேட்டுப் போகாமே இன்று என்னைக் காத்தருள்வாய். திருமார்பனான நீ அத்திருவின் பரிகாரமான அடியேனுக்கு இத்தனை யருள் செய்கை மிகையோ என்றாராயிற்று. மூன்றாமடியில் “உய்யும் வகை யென்றால்” என்றே எங்கும் பாடம் வழங்கி வருகின்றது; இப்பாடத்திற்கு ஒரு பொருளும் சொல்லப் போகாது; வியாக்கியானத்திற்கும் இணங்காது : “ஒருவற்கு ஆடல் கொடுத்து உஜ்ஜீவிக்கும் படியாயிருக்கிறதில்லை” என்பது பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீஸூக்தி. ஆகவே, “ஒருவற்காற்றி உய்யும் வகை அன்றால்” என்னும் பாடமே பொருந்தத் தக்கது என்று அழகிய மணவாளச்சீய ரருளிச் செய்யும்படி. ‘அன்று ஆல்’ என்று பிரிக்க : ஆல் – ஐயோ வென்றபடி. ஐவர் – அஃறிணையான பஞ்சேந்திரியங்கைள ‘ஐவர்’ என்று உயர்த்திக் கூறியது, அவற்றின் மேல் தமக்குள்ள சீற்றமிகுதியையும், அவற்றின் கொடுமைக் கனத்தையும் காட்டுதற்கென்க : திணைவழுவமைதி.


    1609.   
    பந்தார் மெல்விரல் நல்வளைத் தோளி*  பாவை பூமகள் தன்னொடும் உடனே- 
    வந்தாய்*  என் மனத்தே மன்னி நின்றாய்*  மால்வண்ணா! மழை போல் ஒளி வண்ணா*
    சந்தோகா! பௌழியா! தைத்திரியா!*  சாமவேதியனே! நெடுமாலே* 
    அந்தோ! நின்னடியன்றி மற்றுஅறியேன்* அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!* 

        விளக்கம்  


    • உரை:1

      அரவத் தமளியினோடு மழகிய பாற்கடலோடும், அரவிந்தப் பாவயுந்தானு மகம்படி வந்து புகுந்து... பள்ளிகொள்கின்ற பிரானை” என்னுமா போலே பிராட்டியையும் உடனழைத்துக் கொண்டுவந்து அடியேனுடைய மனத்திலே மன்னி நிற்பவனே!, ஆர்த்தர்களை ரக்ஷிக்கைக்குப் பாங்கான ஸர்வஜ்ஞத்வத்தை யுடையவனே!, ஸர்வஸ்மாத்பரனே! அடியேன் உன்னுடைய திருவடிகளன்றி வேறொரு புகலிருப்பதாகக் கனவிலும் கருதுகின்றிலேன்; அடியேன் போல்வாரைக் காத்தருள்வதற்கென்றே திருவழுந்தூரில் நித்ய ஸந்நிதி பண்ணியிருக்கின்ற வுனக்கு, பஞ்சேந்திரியங்களின் கையிலே படுகொலைப் படாதபடி என்னைக் காத்தருள்கை மிகையன்றுகாண் என்றாராயிற்று. “பந்தார் மெல்விரல்” என்ற அடைமொழி மடந்தையர்க்கு இயற்கையாக இடுவதாம். சேலைகள் ஆபரணங்கள் முதலியவற்றை வருணித்துச் சொல்லுவதுபோல விளையாட்டுக் கருவிகளையிட்டு விசேஷிப்பதும் கவிமரபு.

      உரை:2

      மெல்லியவிரல்கள் பத்துடன், அழகிய வளையல்கள் அணிந்த தோள்களை உடையவளான பெரிய பிராட்டியுடன் எழுந்தருளியிருப்பவனே!. கருத்த நிறம் உடையவனே, மழைபோல் குளிர்ந்து ஒளிரும் வண்ணமுடையவனே!. சாந்தோக்கியம், பிருகதாரணியம், தைத்திரீயம், ஸாமவேதம் ஆகியவைகளில் வல்லவனே. திருவழுந்தூரில் மேல் திசையில் எழுந்தருளிய திருமாலே உன் திருவடிகளை அன்றி அடியேன் வேறு புகலிடம் அறியேன்.


    1610.   
    நெய்யார் ஆழியும் சங்கமும் ஏந்தும்*  நீண்ட தோள்உடையாய்*  அடியேனைச்- 
    செய்யாத உலகத்திடைச் செய்தாய்*  சிறுமைக்கும் பெருமைக்கும் உள் புகுந்து*
    பொய்யால் ஐவர் என் மெய்குடிஏறிப்*  போற்றி வாழ்வதற்கு அஞ்சி நின்அடைந்தேன்* 
    ஐயா நின்னடியன்றி மற்றுஅறியேன்*  அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*

        விளக்கம்  


    • இந்திரியங்களுடன் வைத்ததால் என்ன கெடுதி? நல்லகதைகளைக் கேட்கச் செவி வேண்டாவோ? நல்ல துதிகளை வாயாரச் சொல்ல வாய் வேண்டாவோ? ; “கண்டோங் கண்டோங் கண்டோங் கண்ணுக் கினியன கண்டோம்” என்று காண்பதற்குக் கண் வேண்டாவோ?, திவ்ய தேசங்களுக்கு நடந்து செல்லக் கரண களேபரங்கள் வேண்டாவோ? இவை யெல்லாம் நன்மைக்கு வேணுமென்று தானே உமக்கு இந்திரியங்களைத் தந்தது; என்றது அறியீரோ?” என்று எம்பெருமான் திருவுள்ளமாக, அதற்கு மறுமொழியாகக் கூறுகின்றார் சிறுமைக்கும் பெருமைக்கும் முள்புகுந்தென்று தொடங்கி. இந்திரியங்களோ வென்னில், சிற்றின்பத்தைப் பெறுத்துதற்கும் பேரின்பத்தைப் பெறுத்துதற்கும் பொதுவாயிரா நின்றன; (சிறுமைக்கும் பெருமைக்குமுள் புகு் என்றதன் உட்கருத்து இது.) இப்படிப்பட்ட இந்திரியங்கள் நல்லெண்ணமின்றியே வஞ்சகத்தோடு என்னுட் புகுந்திருப்பதனால், அவை இழுத்துக்கொண்டு போகும் வழிகளிலெல்லாஞ் சென்று அவற்றுக்கு வேண்டிய இரைகளைத் தந்து ஆராதிப்பதற்கு அடியேன் அசக்த னாதலால் அவற்றால் நலிவுபடா நின்றேன்; அந்நலிவு தீர உன்னை வந்து சரணம் புகுந்தேனென்றாராயிற்று.


    1611.   
    பரனே! பஞ்சவன் பூழியன் சோழன்*  பார்மன்னர் மன்னர் தாம் பணிந்துஏத்தும்- 
    வரனே! மாதவனே! மதுசூதா!*  மற்றுஓர் நல்துணை நின்னலால் இலேன்காண்*
    நரனே! நாரணனே! திருநறையூர்!*  நம்பீ எம்பெருமான் உம்பர் ஆளும்- 
    அரனே*  ஆதிவராகம் முன்ஆனாய்!*  அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*

        விளக்கம்  


    • ஒத்தாது மிக்காரை யுடையனாகாதவனே !, பஞ்சவ னென்றும் பௌழிய னென்றும் சோழனென்றும் சொல்லப்படுகிற ராஜாதி ராஜர்கள் பணிந்தேத்தும் படியாக வுள்ளவனே!, திருமாலே, வேதவிளக்கைக் கொள்ளை கொண்டு உலகமெங்கு மிருள்மூடச் செய்த மதுகைபடர்களைக் கொன்றொழித்தவனே!, ஸ்ரீ பதரிகாச்ரமத்தில் நரனென்னுஞ் சிஷ்யனாகவும் நாராயணனென்னும் ஆசார்யனாகவும் வடிவெடுத்து ஆசார்ய சிஷயக்ரமத்தை யுணர்த்தித் திருமந்திரத்தை வெளியிட்டருளினவனே! உன்னையன்றி மற்றொரு நற்றுணையுடையேனல்லே னென்கிறார்.


    1612.   
    விண்டான் விண்புக வெம்சமத்து அரியாய்ப்*  பரியோன் மார்வுகம் பற்றிப் பிளந்து* 
    பண்டு ஆன்உய்ய ஓர் மால்வரை ஏந்தும்*  பண்பாளா! பரனே! பவித்திரனே* 
    கண்டேன் நான் கலியுகத்ததன் தன்மை*  கருமம்ஆவதும் என்தனக்கு அறிந்தேன்* 
    அண்டா! நின்னடியன்றி மற்றுஅறியேன்* -அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*   

        விளக்கம்  


    • விண்டான் – தன்னை விட்டு நீங்கினவன் என்று பொருள் பட்டுப் பகைவனை உணர்த்தும் சொல் இது. அமர்க்களத்தில் மாண்டொழிந்தவர்கள் வீரஸ்வர்க்கம் புகுவர்களென்பது நூற்கொள்கை யாதலால் ‘விண்புக’ எனப்பட்டது. கண்டேன் நான் கலியுகத்ததன் தன்மை – மஹாபாரதத்தில் மேக்ஷதர்மத்தில் -?????????????? என்று சொல்லியிருக்கிறபடியே தலைகீழாக நடக்குங் கலியுகத் தன்மைகளைக் கண்டு கொண்டேன்; இப்படிப்பட்ட நிலைமையில் நமக்குச் செய்யத்தக்கதேது என்று ஆராய்ந்து பார்த்தவளவில் உன் திருவடிகளை ஆச்ரயிப்பதே கருமம் என்று துணிந்து கொண்டேன்; அத்துணிவுக்கீடாக உனது திருவடிகளை யன்றி வேறொன்றையு மறியாதவனா யிருக்கின்றே னென்றாராயிற்று. விண்டான், பரியோன் சொற்கள் இரணியனைக் குறிப்பன. கலியுகத்ததன் தன்மை கண்டேன் = பகவத் விஷயத்தில் வெறுப்பைப் பிறப்பித்து ஆத்மஹாநியை விளைப்பதே இக்கலியுகத்தின் தன்மையென்று தெரிந்து கொண்டேனென்க. கருமம் - வடசொல்; அண்டா = அண்டங்கட்கு அதிபதியே! என்றும், இடையனாகப் பிறந்தவனே! என்றும் பொருள்படும்.


    1613.   
    தோயாவின் தயிர் நெய்அமுது உண்ண- சொன்னார்*  சொல்லி நகும் பரிசே*  பெற்ற- 
    தாயால் ஆப்புண்டுஇருந்து அழுதுஏங்கும்-  தாடாளா!*  தரையோர்க்கும் விண்ணோர்க்கும்-
    சேயாய்*  கிரேத திரேத துவாபர-  கலியுகம்*  இவை நான்கும் முன்ஆனாய்* 
    ஆயா! நின்அடிஅன்றி மற்று அறியேன்*  அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*  

        விளக்கம்  


    • உன்மேல் ஏதாகிலும் பழிசொல்லியே பொழுதைப் போக்க நினைத்திருப்பாருடைய வாய்க்கு நல்ல இரை கிடைக்கும்படி தோயாத தயிரையும் நெய்யையும் களவாடியுண்டு யசோதை கையிலே பிடியுண்டு தாம்பினால் கட்டுண்டு ‘நம்முடைய ஸௌலப்ய குணம் நன்கு வெளியாகப் பெற்றது’ என்று நெஞ்சினுள்ளே பெருமகிழ்ச்சி கிடக்கச் செய்தேயும் வருந்தினவன்போல அபிநயித்து விக்கிவிக்கியழுத பெருமானே!, இந்நிலத்திலுள்ளா ராகவுமாம், வி்ண்ணுலகத்திலுள்ளாராகவுமாம், யாராயினும் தம்முயற்சியாலே உன்னைப்பெற நினைப்பாராயின் அவர்கட்கு எட்டாதபடி தூரஸ்தனாயுள்ளவனே! க்ருத த்ரேதா த்வாபர கலியுகங்களென்கிற நான்கு யுகங்களையும் தானிட்ட வழக்காக நிர்வஹிக்குமவனே! திருவழுந்தூர்ப் பெருமானே! உன் திருவடிகளை யன்றி மற்றொன்றும் நானறியேனென்றாராயிற்று. ‘தோயா இன் தயிர்’ என்றும், ‘தோய் ஆவின் தயிர்’ என்றும் பிரிக்கலாம்; இரட்டுற மொழிதலாகக் கொண்டு, சிலவிடங்களில் தோயாத பசுவின் தயிரை யுண்பனென்றும், சில விடங்களில் தோய்ந்த பசுவின் தயிரை யுண்பனென்றுங் கொள்ளலாம். சொன்னார் வாய்வந்தபடி சொல்லித் திரிகின்றவர்கள் என்றவாறு. யசோதைப் பிராட்டியைப் பெற்றதாயென்றது – பெற்ற தாய்போலப் பரிவுடன் வளர்த்தமை பற்றி’ யென்க. ‘க்ருத’ என்னும் வடசொல் ‘கிரேத’ என விகாரப்பட்டது. ‘யுகமிவை நான்கும் முன்னானாய்’ என்று விளிப்பதன் கருத்தாவது – கலியுகத்திலும் கிருதயுக ரீதியை நடைபெறுத்த வல்ல சக்தி உனக்கு இருக்கச் செய்தேயும் என்னைக் கலிநலிவுக்கு ஆளாக்கித் துன்பப்படுத்துவதேன்? என்பதாம்.


    1614.   
    கறுத்து கஞ்சனை அஞ்ச முனிந்தாய்!*  கார்வண்ணா! கடல் போல் ஒளி வண்ணா* 
    இறுத்திட்டு ஆன் விடை ஏழும் முன் வென்றாய்!*  எந்தாய்! அந்தரம் ஏழும் முன் ஆனாய்* 
    பொறுத்துக்கொண்டிருந்தால் பொறுக்கொணாப் போகமே நுகர்வான் புகுந்து*  ஐவர்- 
    அறுத்துத் தின்றிட அஞ்சி நின் அடைந்தேன்*  அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!* 

        விளக்கம்  


    • உன் பக்கலில் நல்லெண்ணங் கொண்டு வாழ்ந்து போகலாமாயிருக்க அது செய்யாதே தீய புத்தியைக் கொண்ட கம்ஸன் அஞ்சி யொழியும்படி அவனைச் சினந்து நிக்ரஹித்தவனே; நப்பின்னைப் பிராட்டியோடு கலவிசெய்ய இடையூறாயிருந்த ஏழு விருஷபங்களையும் வலியடக்கி அப்பிராட்டியைத் தழுவிக் கொண்டவனே!, பூலோகம் புவர் லோகம் ஸுவர்லோகம் மஹோலோகம் ஜநலோகம் தபோலோகம் ஸத்யலோகம் ஆகிய மேலேழுலகங்களையும் நிர்வஹித்து நடத்துமவனே! பல்லைக்கடித்துக் கொண்டு பொறுத்திருப்போ மென்றாலும் பொறுத்திருக்க முடியாத துக்காநுபவங்களை நான் அடைந்திடும்படி பஞ்சேந்திரியங்கள் என்னுள்புகுந்து ஹிம்ஸிக்க, அந்த ஹிம்ஸைகளுக்கு அஞ்சி உன் திருவடிகளிலே வந்து புகுந்தே னென்றாராயிற்று. போகம் – மென்ற வடசொல்விகாரம்; அநுபவம்; துன்பங்களின் அநுபவமென்பது அர்த்தாத் ஸித்தம். நுகர்வான் – நான் அநுபவிக்கும்படி செய்தவதற்காக.


    1615.   
    நெடியானே! கடிஆர் கலிநம்பீ!*  நின்னையே நினைந்து இங்கு இருப்பேனைக்* 
    கடிஆர் காளையர்ஐவர் புகுந்து*  காவல் செய்த அக்காவலைப் பிழைத்து*
    குடிபோந்து உன் அடிக்கீழ் வந்து புகுந்தேன்*   கூறைசோறு இவை தந்து எனக்குஅருளி* 
    அடியேனைப் பணிஆண்டு கொள் எந்தாய்!*   அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*

        விளக்கம்  


    • ஆர்கலி என்று கடலுக்குப் பெயர்; திருப்பாற்கடலை நினைக்கிறது. ஆர்த்தர்களுடைய கூக்குரல் கேட்டுப் பதறி யெழுந்து வந்து ரக்ஷிப்பதற்காக நீ திருப்பாற்கடலில் உறங்குவான்போல் யோகு செய்யும் பெருமானா யிருக்கிறபடியை அநுஸந்தித்து அத்திருக்குணத்தில் ஈடுபட்டிருக்கின்ற அடியேனைப் பஞ்சேந்திரியங்கள் சிறைப்படுத்தி நலிந்த நலிவுக்குத் தப்பிப் பிழைத்து உன் திருவடிகளிலே வந்து சேர்ந்தேன்; இனி அடியேனுக்கு வேண்டிய கூறை சோறுகளைக் கொடுத்தருளி நித்ய கைங்கரியங் கொண்டருள வேணுமென்கிறார். பஞ்சேந்திரயங்களுக்குக் கொடுத்த ‘காளையர்’ என்னும் விசேஷணத்தின் கருத்தைப் பெரியவாச்சான் பிள்ளை வெளிட்டருளுகிறார் காண்மின் :– “நெஞ்சில் நன்மையின்றிக்கே பிறரை நலியநலிய இளகிப்பதியாநின்ற பருவத்தையுடைய ஐவர்” என்பது வியாக்யான ஸ்ரீஸூக்தி. “காளையே எருது பாலைக்கதிபன் நல்லிளையோன் பேராம்” என்பது நிகண்டு; நல்லினையோனென்ற பொருள் இங்குக் கொள்ளப்பட்டது; ஹிம்ஸிக்குந்திறத்தில் மூப்பு இன்றியே யௌவனங்கொண்டிருக்கிற இந்திரயங்களென்றபடி. கூறை சோறிவைதந்தெனக்கருளி = 1. “உண்ணுஞ்சோறு பருகுநீர்த் தின்னம் வெற்றிலையுமெல்லாங்கண்ணன்” என்றும் 2. “கூறைசோறிவை வேண்டுவதில்லை” என்றும் சொல்லுமாபோலே கூறைசோறு முதலிய போக்ய போகோபகரணங்களில் விருப்பமற்றிருக்கின்ற இவ்வாழ்வார் கூறை சோறுகளை விரும்ப ப்ரஸக்தி யில்லாமையாலே ‘எனக்குக் கூறையும் சோறுமாயிருக்கிற இத்திருவடிகளைத் தந்தருளி’ என்று உரைக்கப்பட்டது.- வாஸுதேவஸ் ஸர்வமிதிஸ மஹாத்மா ஸுதுர்லப” (எல்லாப்பொருளும் எம்பெருமானே யென்றிருக்கும் மஹாத்மா கிடைப்பதரிது) என்ற கீதாசார்யனுடைய குறை தீரவிறே ஆழ்வார்கள் திருவவதரித்தருளிற்று. அடியேனைப் பணியாண்டுகொள் = ராஜகுமாரனாய்ப் பிறந்து முடியிழந்து போகும் தௌர்ப்பாக்யசாலிகளைப் போலாகாமே அடியேனான நான் அடிமைத் தொழில் செய்து ஸ்வரூபம் நிறம் பெறுமாறு செய்தருளாயென்கிறது. ஸ்ரீவிபீஷணாழ்வானுக்கு வந்து புகுரலாம்படி கடற்கரை வெளியிலே வந்து நின்றாப்போலே எனக்கு உறவு முறையார் கைவிட்டவன்று வந்து கிட்டலாம் படியன்றோ நீ திருவழுந்தூரில் வந்து.


    1616.   
    கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறி*  கூறை சோறு இவை தா என்று குமைத்து- 
    போகார்*  நான் அவரைப் பொறுக்ககிலேன்*  புனிதா! புள் கொடியாய்! நெடுமாலே* 
    தீவாய் நாகணையில் துயில்வானே!*  திருமாலே இனிச் செய்வது ஒன்று அறியேன்* 
    ஆ! ஆ! என்று அடியேற்கு இறை இரங்காய்*  அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!*

        விளக்கம்  


    • கீழ்ப்பாட்டில் “ஐவர் புகுந்து காவல்செய்தவக்காவலைப் பிழைத்துக் குடிபோந்துன்னடிகீழ் வந்து புகுந்தேன்” என்று இந்திரியங்களுக்கு ஒருவாறு தப்பிப்பிழைத்துத் திருவடிவாரத்திலே வந்து சேர்ந்ததாகச் சொன்னார்; அதுதான் இந்நிலத்திலேயாகையாலே இந்திரியங்களின் நலிவு தொடர்ந்தே வருவதாயிருக்கிறபடியைக் கண்டு மீண்டும் கதறுகிறார். அடியேன் உன்னொருவனையே ஸ்வாமியாகக் கொண்டவனே யன்றி ஐவரை ஸ்வாமியாகக் கொண்டவனல்லேன்; அப்படியிருந்தும் ஐவர் என்னை அடக்கியாள்பவராக நின்று என் உடலிலே குடிபுகுந்து தங்களுக்கு வேண்டிய இரைகளைப் பெற வேண்டிக் குமைத்து ஒரு நொடிப்பொழுதுங் கால்வாங்குகின்றிலர்; நான் அவர்களுடைய நலிவைப் பொறுக்க மாட்டுகின்றிலேன்; அழுந்தூர் மேற்றிசை நின்றவம்மானே! நீயோ விரோதிகளைப் போக்கி ஆச்ரிதரை ரக்ஷிப்பதைத் தன்பேறாக நினைக்கும்படியான பரிசுத்தியை யுடையையாயிருக்கின்றாய்; இந்த நிலைமைக்குக் கொடிகட்டி வாழ்கின்றாய்; அடியவர்களோடு நித்யஸம்ச்லேஷம் பண்ணியிருப்பதே உனக்குத் தொழில் என்பது விளங்க அடியவர்களோடு தலைவனான திருவனந்தாழ்வானை விட்டு பிரியாதிருக்கின்றாய்; அடியவர்கட்குப் புருஷகாரம் செய்யவல்ல பிராட்டியிடத்தில் மால்கொண்டிருக்கின்றாய்; நீ இப்படிப்பட்டவனான பின்பு என்னுடைய காரியம் நீ செய்யவேண்டு மத்தனையல்லது நான் செய்வ தொன்றறியேன்; நீ தானும் மிகையாகச் செய்யவேண்டுவ தொன்றுமில்லை; ஐயோவென்று திருவுள்ளத்திலே சிறிது இரங்கியருளினாற் போதுமானது என்கிறார்.


    1617.   
    அன்னம் மன்னு பைம்பூம்பொழில் சூழ்ந்த*  அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானைக்* 
    கன்னி மன்னு திண்தோள் கலிகன்றி-  ஆலி நாடன் மங்கைக் குலவேந்தன்*
    சொன்னஇன் தமிழ் நல்மணிக்கோவை*   தூய மாலை இவைபத்தும் வல்லார்* 
    மன்னி மன்னவராய் உலகுஆண்டு*  மான வெண்குடைக்கீழ் மகிழ்வாரே*  (2)

        விளக்கம்  



    1618.   
    செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன்*  திருவடியின்இணை வருட முனிவர்ஏத்த* 
    வங்கம்மலி தடங்கடலுள் அநந்தன்என்னும்*  வரிஅரவின்அணைத் துயின்ற மாயோன் காண்மின்*
    எங்கும்மலி நிறை புகழ்நால் வேதம்*  ஐந்து-  வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை* 
    அம்கமலத்து அயன்அனையார் பயிலும் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*   (2)

        விளக்கம்  


    • கேள்வியாவது – கேட்கப்படும் நூற்பொருள்களைக் கற்றறிந்தார் கூறக்கேட்டல்; இது, கற்றவர்க்கு அக்கற்றதனாலாகிய அறிவை உறுதிப்படுத்தவும் கல்லாதவர்க்கு அவ்வறிவை உண்டாக்கவும் வல்லது. வேதம் முதவியன அவ்வூரிலுள்ள அந்தணர்களிடம் இயற்கையில் நிறைந்திருத்தலால் அவர் ஒவ்வொருவரும் பிரமனை யொத்திருப்பரென்கிறது. அன்றியே, தமது தவ வலிமையால் அவ்வூரிலுள்ள அந்தணர் ஒவ்வொருவரும் பிரமனைப் போல ஸ்ருஷ்டிக்க வல்லவரெனினுமாம். பயிலுதல் – எப்பொழுதும் நெருங்கி வஸித்தல். அணி – இந்நிலவுலகத்திற்கு ஆபரணம் போன்ற, அழுந்தூர் எனினுமாம்.


    1619.   
    முன் இவ்உலகுஏழும் இருள் மண்டிஉண்ண*  முனிவரொடு தானவர்கள் திசைப்ப*  வந்து- 
    பன்னுகலை நால்வேதப் பொருளை எல்லாம்*  பரிமுகம்ஆய் அருளிய எம்பரமன் காண்மின்* 
    செந்நெல் மலிகதிர் கவரி வீச*  சங்கம் அவைமுரல செங்கமல மலரை ஏறி* 
    அன்னம் மலிபெடையோடும் அமரும் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர்கோவே*

        விளக்கம்  



    1620.   
    குலத்தலைய மதவேழம் பொய்கை புக்கு*  கோள்முதலை பிடிக்க அதற்கு அனுங்கிநின்று*  
    நிலத்திகழும் மலர்ச்சுடர்ஏய் சோதீ! என்ன*  நெஞ்சுஇடர் தீர்த்தருளிய என்நிமலன் காண்மின்*
    மலைத்திகழ் சந்துஅகில் கனகம்மணியும் கொண்டு*  வந்துஉந்தி வயல்கள்தொறும் மடைகள்பாய*  
    அலைத்துவரும் பொன்னிவளம் பெருகும் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*     

        விளக்கம்  


    • உரை:1

      நிலா - நிலா; “குறியதன் கீழ் ஆக்குறுகலும்” என்பது நன்னூல். (மலைத்திகழ் இத்யாதி.) ஸஹ்ய பர்வதத்தினின்று உத்பத்தியாகிப் பெருவெள்ளமாய்ப் பெருகிவரும் விசையில் குறிஞ்சி நிலக் கருப்பொருளாகிய சந்தனம் முதலியவற்றைப் புரட்டியடித்துக் கொண்டுவருங் காவேரி தான் கொண்ர்ந்துவரும் சந்தனம் முதலியவைகள் கழனிகளில் நீர்மடை வழியாகப் பாய்தலினால் மிக்க வளத்தை யுண்டாக்கிப் பெருஞ் சிறப்பை இத் திருவழுந்தூர்க்கு விளைக்குமென்க. “மலைத்தலைய கடற்காவிரி, புனல் பரந்து பொன் கொழிக்கும்” என்கிறபடியே தான் பெருகும் பொழுது பொன்னைக் கொழித்துக் கொண்டு வருதலால் காவேரிக்குப் பொன்னியென்று பெயர். இ -உடைமைப் பொருள் காட்டும் பெண்பால் விகுதி. எம்பெருமான் தான் பெருந்துயரத்தினால் வருந்துகின்ற அன்பருள்ள விடங்களிற் சென்று பாதுகாப்பது போலவே இக்காவேரியின் வெள்ளமும் வேண்டுமடங்களிலெல்லாம் வந்து பாயமென நயந்தோன்றுமாறு இங்கு அருளிச் செய்யப்பட்டுள்ளமை உய்த்துணரத்தக்கது.

      உரை:2

      உடற்கட்டும் மதமும் கொண்ட கஜேந்திரன் பொய்கையில் புகுந்ததும், முதலை அதன் காலைப் பிடிக்கவே. துன்புற்ற அது, "சந்திரனை ஒத்த ஒளிச்சுடரே!" என்று இறைவனைக் கூப்பிட்டது. அதன் துயரைப் போக்கிய தூயவன் ஆன நித்திய சூரிகள் தலைவன் திருவழுந்தூரில் எழுந்தருளியதைக் காணுங்கள். இவ்வூரில் ஓடும் காவிரி மலைச் சந்தனம், அகில், பொன், மணி ஆகியவற்றைத் தள்ளிக் கொண்டு மடைகளில் புகுந்து வயல்களில் பாய்ந்து வளம் பெருக்கும்.


    1621.   
    சிலம்புமுதல் கலன்அணிந்துஓர் செங்கல் குன்றம்*  திகழ்ந்ததுஎன திருஉருவம் பன்றி ஆகி* 
    இலங்குபுவி மடந்தைதனை இடந்து புல்கி*  எயிற்றிடை வைத்தருளிய எம்ஈசன் காண்மின்*
    புலம்புசிறை வண்டுஒலிப்ப பூகம் தொக்க*  பொழில்கள் தொறும் குயில்கூவ மயில்கள் ஆல* 
    அலம்புதிரைப் புனல்புடைசூழ்ந்து அழகுஆர் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*   

        விளக்கம்  


    • சிலம்பு முதற்கலனணிந்தோர் செங்கட் குன்றம்” என்றது மஹா வராஹத்துக்கு அபூதோபமை (இல்பொருளுவமை) யாம். “செங்கற்குன்றம்” ன்ற பாடமே வியாக்கியானத்திற்கு இணங்கியது. சிவந்த ரத்னங்களையுடைய மேருமலை யென்று பொருள். கலன் – கலம் என்பதன் ஈற்றுப்போலி. ஆலுதல் – ஆரவாரித்தலுமாம்.


    1622.   
    சினம்மேவும் அடல்அரியின் உருவம்ஆகி*  திறல்மேவும் இரணியனது ஆகம் கீண்டு* 
    மனம்மேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி-  மாள உயிர் வவ்விய எம்மாயோன் காண்மின்*
    இனம்மேவு வரிவளைக்கை ஏந்தும் கோவை*  ஏய்வாய மரகதம்போல் கிளியின்இன் சொல்* 
    அனம்மேவு நடைமடவார் பயிலும் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*   

        விளக்கம்  



    1623.   
    வானவர் தம்துயர் தீரவந்து தோன்றி*  மாண்உருஆய் மூவடி மாவலியை வேண்டி* 
    தான்அமர ஏழ்உலகும் அளந்த வென்றித்*  தனிமுதல் சக்கரப்படை என்தலைவன் காண்மின்*
    தேன்அமரும் பொழில்தழுவும் எழில்கொள் வீதி*  செழுமாட மாளிகைகள் கூடம்தோறும்* 
    ஆனதொல்சீர் மறையாளர் பயிலும் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே* 

        விளக்கம்  



    1624.   
    பந்துஅணைந்த மெல்விரலாள் சீதைக்கு ஆகி*  பகலவன் மீதுஇயங்காத இலங்கை வேந்தன்* 
    அந்தம்இல் திண் கரம்சிரங்கள் புரண்டு வீழ*  அடுகணையால் எய்துஉகந்த அம்மான் காண்மின்*
    செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர்*  திசைமுகனை அனையவர்கள் செம்மை மிக்க* 
    அந்தணர்தம் ஆகுதியின் புகைஆர் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*

        விளக்கம்  


    • ‘செந்தமிழும் வடகலையுந் திகழ்ந்த நாவர்’ எனறதனால் அத்திருப்பதியிலுள்ள அந்தணர் திராவிடவேதம் ஸம்ஸ்க்ருத வேதம் என்னும் இரண்டு வேதங்களிலும் வல்லவராவரென்பது தோன்றும். தமிழுக்கச் செம்மை – செவிக்கினிய செஞ்சொல்லா யிருத்தலோடு அர்த்தத்தை நேராகக் காட்டவல்லதாயிருத்தல். ஆதிகாலத்தில் ஸம்ஸ்க்ருதம் வடதிசையில் இமயமலைப் பிராந்தத்தில் கங்காதீரத்தில் காசி முதலிய இடங்களில் விசேஷமாய் வழங்கி வந்ததனால் வடமொழி யென்றும் வடகலையென்றும் வழங்கப்படுமென்ப.


    1625.   
    கும்பமிகு மதவேழம் குலைய கொம்பு- பறித்து மழவிடை அடர்த்து குரவை கோத்து* 
    வம்புஅவிழும் மலர்க்குழலாள்ஆய்ச்சி வைத்த- தயிர்வெண்ணெய் உண்டுஉகந்த மாயோன் காண்மின்*
    செம்பவளம் மரதகம் நல் முத்தம் காட்டத்*  திகழ்பூகம் கதலிபல வளம்மிக்கு எங்கும்*
    அம்பொன் மதிள்பொழில் புடைசூழ்ந்து அழகார் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*

        விளக்கம்  



    1626.   
    ஊடுஏறு கஞ்சனொடு மல்லும் வில்லும்*  ஒண்கரியும் உருள்சகடும் உடையச் செற்ற* 
    நீடுஏறு பெருவலித் தோள்உடைய வென்றி*  நிலவுபுகழ் நேமிஅங்கை நெடியோன் காண்மின்*
    சேடுஏறு பொழில்தழுவும் எழில்கொள் வீதி*  திருவிழவில் மணிஅணிந்த திண்ணை தோறும்* 
    ஆடுஏறு மலர்க்குழலார் பயிலும் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*      

        விளக்கம்  


    • சேடு – அழகு, இளமை, பெருமை. திருவழாக்காலங்களில் வீதியில் நடக்கும் அத்திருவிழாவைக் காணும் பொருட்டு வீதியின் இருபுறங்களிலுமுள்ள மாளிகைகளின் திண்ணைகளின் ஆடலில்வல்ல மடவார் ஏறியிருக்கப்பெற்ற திருவழுந்தூரென்பன பின்னடிகளில். “ஆடு ஏறும் மலர்க்குழலார்” – ‘நறுமணம் மிக்க மலர்களைச்சூடிய கூந்தலையுடைய மடவார்’ என்று வியாக்கியானத்தி லுரைக்கப் பட்டுள்ளது.


    1627.   
    பன்றிஆய் மீன்ஆகி அரிஆய்*  பாரைப்- படைத்து காத்துஉண்டு உமிழ்ந்த பரமன் தன்னை* 
    அன்று அமரர்க்குஅதிபதியும் அயனும் சேயும்- அடிபணிய அணிஅழுந்தூர் நின்ற கோவை*
    கன்றி நெடுவேல் வலவன் ஆலிநாடன்*  கலிகன்றி ஒலிசெய்த இன்பப் பாடல்* 
    ஒன்றினொடு நான்கும் ஓர்ஐந்தும் வல்லார்*  ஒலிகடல் சூழ்உலகுஆளும் உம்பர் தாமே* (2)

        விளக்கம்  


    • அவதாரங்கட்கு மூலமான பாற்கடலிற் பள்ளிகொள்ளும் வ்யூஹமூர்த்தியை ஒரு பாசுரத்திலும், அங்கு நின்று விலங்காகித் திருவவதரித்தமையை உ.ச.ரு.க0. (2, 4, 5, 10) ஆம் பாசுரங்களாகிய நான்கு பாடல்களிலும், கஜேந்திர ரக்ஷணத்தின் பொருட்டாகவும் வாமந ராம க்ருஷ்ண ரூபமாகவும் வந்து அவதரித்தமையை மற்றை ஐந்து பாடல்களிலுமாக இவ்வாறு தாம் பாடி அநுபவித்தமை தோற்ற ‘ஒன்றினொடு நான்கும் ஓரைந்தும்’ என்று பிரித்தருளிச் செய்தாரெனலாம்.


    2077.   
    தே மருவு பொழிலிடத்து மலர்ந்த போதைத்* தேன்-அதனை வாய்மடுத்து உன் பெடையும் நீயும்* 
    பூ மருவி இனிது அமர்ந்து பொறியில் ஆர்ந்த* அறு கால சிறு வண்டே! தொழுதேன் உன்னை* 
    ஆ மருவி நிரை மேய்த்த அமரர்-கோமான்* அணி அழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று* 
    நீ மருவி அஞ்சாதே நின்று ஓர் மாது* நின் நயந்தாள் என்று இறையே இயம்பிக் காணே 

        விளக்கம்  


    • உரை:1

      தலைவியை ஒருமுகத்தாலே ஆர்றுவிக்க வேணுமென்று நினைத்த தோழி யானவள் சில கேள்விகள் கேட்க, அவற்றுக்கு மறுமாற்ற முரைக்கும் வகையாக * மைவண்ண நறுங்குஞ்சி தொடங்கி ஐந்துபாசுரங்கள் சென்றன. தோழி தான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் விடைவந்துவிட்டபடியால் அவள் வாளா கிடந்தாள்; தலைவிக்கோ ஆற்றாமை மீதூர்ந்தது. கண்ணிற் கண்டதொரு வண்டைத் தூதுவிடுகிறாள் இப்பாசுரத்தில். ஸ்ரீராமவதாரத்தில் திர்யக்குக்கள் தூதுசென்று காரியம் தலைக்கட்டிவைக்கக் காண்கையாலே வண்டுவிடுதூதிலே முயல்கிறாள் இப்பரகாலநாயகி. முன்னடிகளில் வண்டைவிளித்துத் தொழுது, பின்னடிகளில், அது செய்ய வேண்டிய காரியத்தை விதிக்கின்றாள். திருவழுந்தூர் ஆமருவியப்பன் திருவடிவாரத்திலே சென்று தனது நிலைமையைச் சொல்லுமாறு வேண்டுகின்றாள்; அந்த வண்டு தன் பேடையோடே கலந்து மலரிலே மதுபானம் பண்ணிக் கொண்டிருந்தமையால் ‘நான் துணைவனைப் பிரிந்து உணவும் உறக்கமுமற்று வருந்திக்கிடக்கும்போது நீ இப்படி உன்காரியமே கண்ணாக இருப்பது தகுதியோ? என்னுங்கருத்து முன்னடிகளில் வெளிவரும். நாம் வருந்தி யொடுங்கி * மென்மலர்ப்பள்ளி வெம்பள்ளியாலோ என்று கிடக்கும்போது இந்த வண்டு மாத்திரம் மலர்களிலே ஏறிக்கிடப்பதற்கு யாதுகாரணமென்று பார்த்தாள்; அது நம்மைப்போலே விரஹ வேதனைப்படாமல் துணை பிரியாதிருப்பதனால் மலரிலே கால் பாவவும் மதுவைப் பருகவும் மேனி நிறம் பெற்றிருக்கவும் பெறுகின்றதென்றுணர்ந்து அங்ஙனமே விளிக்கின்றாள். பூவைக் கண்டால் அருவருத்தும் போக்யவஸ்துக்களில் வெறுப்புற்றும் மேனி நிறமழிந்தும் இராநி்ன்ற என்னையும் உன்னைப்போலே யாக்க வேண்டாவோ? நானும் துணைவனோடு கலந்து வாழும்படி நீ காரியஞ் செய்யவேண்டாவோ? என்பது உள்ளூறை. “உளங்கனிந்திருக்குமடியவர் தங்களுள்ளத்துளூறிய தேன்“ என்னப்பட்ட பகவத் விஷயமாகிற மதுவை விரும்பியும், “போந்தெ தென்னெஞ் சென்னும் பொன்வண்டு உனதடிப்போதிலொண்சீராந் தெளிதேனுண்டமர்ந்திடவேண்டி“ என்கிறபடியே ஆசார்ய பாதாரவிந்த ஸேவையாகிற மதுவைப் பருகுதலையே விரதமாகவுடைத்தாகியும், உயர்கதிக்கு ஸாதனமாகிய இரண்டு சிறகுகள் போன்ற கர்ம ஜ்ஞானங்களையுடையராகியும் ஸாரக்ராஹிகளாயுமிருக்கின்ற ஸ்ரீவைஷ்ணவர்களை வண்டாகச் சொல்லுவது வழக்கம். அப்படிப்பட்ட ஸ்ரீவைஷ்ணர்களை நோக்கி ‘நீர் எம்பெருமான் திருவடிகளிலே புருஷகாரஞ்செய்து அடியேனையும் உம்மைப்போலே பகவதநுபவமே நித்தியமாய்ச் செல்லுமாறு ஆட்படுத்திக் கொள்ளவேணும்‘ என்று பிரார்த்தித்தல் இதற்கு உள்ளூறை பொருள். * வேதம் வல்லர்களைக்கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிவது ஸம்ப்ரதாயமென்க. போது + தேன், போதைத்தேன்; பூவிலுள்ள தேன் என்றபடி. (அறுகால சிறுவண்டே தொழுதேனுன்னை.) வண்டுக்கு ஆறுகால்கள் உள்ளமை இயல்வாதலால் இவ்விசேஷணம் இங்கு ஏதுக்கு? என்று கேட்கக்கூடும்; இரண்டு காலாகவும் நான்கு காலாகவுமின்றியே விரைந்து செல்லுகைக் குறுப்பாக ஆறுகால்கள் இருக்கப்பெற்ற பாக்கியம் என்னே! என்று வியந்து கூறுவதாகச் சில ஆசார்யர்கள் நிர்வஹித்தார்களாம். இந்த நிர்வாஹத்தில் ஸ்வாரஸ்யமில்லை; வண்டு செல்லுதற்குச் சாதனம் சிறகே யன்றிக் கால்கள் அல்லவே; ஆதலால் ‘அறுகால‘ என்னு மடைமொழிக்கு அங்ஙனே கருத்துரைத்தல் பொருந்தாதென்று, பட்டர் அருளிச்செய்ததாவது-“தொழுதேனுன்னை“ என்று மேலே யிருக்கையாலே, என்தலையிலே வைப்பதற்கு ஆறுகால்களுண்டாகப் பெற்றதே! என்று வியந்த சொல்லுகிறபடி என்பதாம். தூதுசென்று மீண்டுவந்தால் வண்டின் கால்களைத் தன்தலை நிறைய வைத்துக்கொண்டு கூத்தாடக் குதூஹலித்திருப்பதனால் அதற்குச் சேர இங்ஙனே கருத்துரைத்தல் மிகப்பொருந்தும். “எங்கானலகங்கழிவாயிரை தேர்ந்து இங்கினி தமருஞ், செங்காலமட நாராய்! திருமூழிக்களத்துறையுங், கொங்கார் பூந்துழாய் முடியென்குடக்கூத்தற்கென் தூதாய் நுங்கால்களென் தலைமேல் கெழுமீரோ நுமரோடே“ (9-7-1) என்ற திருவாய் மொழிப்பாசுரத்தின் ஈற்றடி இங்குக் குறிக்கொள்ளத்தக்கது. சிறுவண்டே! = ஏற்கனவே நீ சிறியையாயிருப்பதும் ஒரு பாக்கியம்; அனுமான் இலங்கைக்குத் தூதுசென்ற போது சிலவிடங்களில் தன்வடிவைச் சிறுக்கடித்துக் கொள்ளவேண்டி யிருந்தது; அங்ஙனே உனக்குத் தேவையில்லை; உருவமே சிறியையாயிராநி்ன்றாய்காண் என்று விசேஷார்த்தங்காண்க. ஹனுமானாகில் ‘இந்தக் குரங்கு இங்கே ஏதுக்கு வந்தது?, என்று ஆராய்ச்சிப்படவேண்டியிருக்கும்; நீ வண்டாகையாலே * தோளிணைமேலும் நன்மார்பின்மேலும் சுடர்முடிமேலும் தாளிணைமேலும் புனைந்த தண்ணந்துழாய் மாலையில் இஷ்டமானதோரிடத்திலேயிருந்து கொண்டு வார்த்தை சொல்லலாம்படியான ஜன்மமன்றோ உன்னது என்பதும் விவக்ஷிதம். பரஸ்வரஸம்ச்லேஷ ஸுகத்தாலே மயங்கி மதிகெட்டுக்கிடக்கிற வண்டின்செவியிலே உறுத்தும்படி ‘பூமருவியினதமர்ந்து பொறியிலார்ந்த அறுகால சிறுவண்டே!‘ என்று உரக்கக் கூவினவாறே வண்டு துணுக்கென்று எட்டிப்பார்க்க, தொழுதேனுன்னை என்கிறாள். தலைமகனுடைய திருவடிகள் எனக்கு ஏதுக்கு? உன்னைத் துதிப்பதும் உன்காலிலே விழுவதுமன்றோ எனக்குப்பணி என்றவாறு. எம்பெருமானைக் காட்டிலும் புருஷகாரபூதரான ஆசார்யர்கள் மிகவும் உத்தேச்யர் என்ற சாஸ்த்ரார்த்த முணர்க. என்னைத் தொழுவதேன்? வேண்டின காரியத்தைச் சொல்லலாகாதோவென்று வண்டு கேட்க; காரியத்தைக் கூறத் தொடங்குகிறாள் பின்னடிகளில். அமரர்கோமான் பக்கலிலே சென்று தூது சொல்லுங்கோள் என்றாள்; அந்தோ! அயர்வறுமமரர்களதிபதியன்றோ? அந்த மேன்மையிலே எங்களால் கிட்டப்போமோ? என்ன; ஆமருவிநிரைமேய்த்த அமரர் கோமான் என்றாள்; பரத்வம் ஒருபுறத்தே கிடக்கச்செய்தேயும் பசுக்களோடே பொருந்தி அவற்றோடே போதுபோக்குமவன் காண்; நித்யஸூரிகளுக்குத் தன்னையொழியச் செல்லாதாப்போலே பசுக்களையொழியத் தனக்குச் செல்லாதபடியான குடிப்பிறப்புடையவன்காண்; மேன்மையைக் கண்டு தியங்காதே செல்லலாமென்றாள்; ஆமாம்; அது ஒருகாலத்திலன்றோ? க்ருஷ்ணாவதாரங் கடந்து நெடுநாளாயிற்றே! என்ன; அணியழுந்தூர் நின்றனுக்கு என்கிறாள். அக்காலத்தில் பசுக்களை ரக்ஷித்தாற்போலே அக்காலத்திற்குப் பிற்பட்டவர்களாய்ப பசு ப்ராயராயிருப்பாரையும் ரக்ஷிக்கைக்காகப் * பின்னானார் வணங்குஞ் சோதியாகத் திருவழுந்தூரிலே நிற்கிறான் காண்; அங்கேபோய் அறிவிக்கவேணுமென்றாளாயிற்று. எம்பெருமான் பிரிந்துபோகிறபோது * சேலுகளுந் திருவரங்கம் நம்மூர் என்றும் * புனலரங்கமூர் என்றும் சொல்லிச் சென்று திருவரங்கத்திலே போயிருக்க. திருவழுந்தூரிலே தூதுவிடுகை பொருந்துமோ? என்னில்; கேண்மின்; ‘புனலரங்கமூரென்று போயினாரே‘ என்றது உண்மைதான்; ஆயினும், பிரிந்துபோனவர் முழுதும் போயிருக்க மாட்டார்; திருவழுந்தூரிலே பின் தங்கி நின்றிருக்கக்கூடும்; அங்கே சென்று அறிவிக்கலாமென்கிறாள் போலும் அன்றியே; புனலாங்கமூரென்று போயினார்; திருவரங்கத்தே போய்ப்பார்த்தார்; நீர்வாய்ப்பு் நிழல்வாய்ப்பும் கண்டவாறே தனிக்கிடை கிடப்பதற்குப் புறப்பட்டிருப்பர்; இப்போது திருவழுந்தூரளவிலே எழுந்தருளியிருக்கக்கூடும்; அங்கே சென்று அறிவிக்கவமையும் என்கிறாள் என்றுங் கொள்ளலாம். அணியழுந்தூர் நின்றானுக்கு = இத்தலத்தைக் கடந்து அப்பால் போகமாட்டாமை யாலே அங்கே ஸ்தாவர ப்ரதிஷ்டையாக நிற்கிளானென்கிறாள். திருவாலி திருநகரியிற் பரகாலநாயகி பக்கலில் நின்றும் ஆள்வருவது எப்போதோவென்று எதிர்பார்த்தபடியே நிற்கிறானென்கிறாள் என்னவுமாம். இன்றே சென்று = நாளைச் செய்கிறேனென்ன வொண்ணாது; நாளைக்கு நான் இருக்கப்போகிறேனோ? நானில்லையானால் அவன்தான் இருக்கப்போகிறானோ? இரண்டுதலையும் அழிந்தபின்பு நீ எங்குச் சென்று யார்பக்கலிலே என்ன சொல்லப் போகிறாய்? இரண்டு தலையும் அழிந்ததென்றால் பி்ன்னை உலகந்தானுண்டோ? நீயும் அழிந்தாயாவாய்; ஆக, நாங்களும், பிழைத்து நீயும் வாழ வேண்டியிருந்தாயாகில் இன்றே சென்று அறிவியாய் என்றாளாயிற்று. நீ மருவி = அவன் ஆமருவி நிரைமேய்த்தவனாகையாலே திர்யக்ஜாதியான உனக்கும் முகந்தரும்; நீ சென்று கிட்டலாம். அவனுடைய சீல குணத்தைக்கண்டு வைத்தும் “அவரை நாம் தேவரென்றஞ்சினோமே“ என்று மருண்டு பின்வாங்கின என்னைப் போலல்லாமல் அருகே பொருந்தி நிற்கலாம் நீ. (அஞசாதே நின்று.) வார்த்தை சொல்லும் விஷயத்தில் சிறிதும் அஞ்சவேண்டா; ‘நம்முடைய அந்த புறத்தில் நின்றும் வந்தவர்கள்‘ என்று தோற்றும்படி செருக்கி வார்த்தை சொல்லவேணும். அவர்க்கு அறிவிக்கவேண்டும் வார்த்தை ஏதென்ன; ஓர் மாதுநின் நயந்தாளென்று = என்பெயரைச் சொல்லவேண்டா; ஒருத்தி‘ என்னும்போதே அவர்தாமே தெரிந்துகொள்வர்; ‘ஒருகாட்டிலே ஒருமான் அம்புபட்டுக்கிடந்து துடிக்கின்றது‘ என்றால் உடனே எய்த வனககுத் தெரியுமன்றோ. (நின்நயந்தாள்.) ஓர்மாது‘ என்றாலே போதுமானது; அதற்கு மேலும் ஒருவார்த்தை சொல்லவேணுமென்றிருந்தாயாகில் “நின்நயந்தாள்“ உன்னை ஆசைப்பட்டிருக்கின்றாள்) என்று சொல்லு. படுகொலைப்பட்டாளென்று சொல்லு என்றபடி. ஒரு க்ஷுத்ரபுருஷனை ஆசைப்பட்டாளல்லள், பரமபுருஷனை உன்னை ஆசைபட்டாளென்று சொல்லு. பரத்வத்திலே ஆசைப்பட்டிலள், வியூகத்திலே ஆசைப்ட்டிலள், விபவாவதாரங்களிலே ஆசைப்ட்டிலள், அந்தர்யாமித்வத்திலே ஆசைப்பட்டிலள்; ஆசைப்படுதற்குரிய அர்ச்சவதாரத்திலே ஆசைப்பட்டாளென்று சொல்லு. இறையே இயம்பிக் காண் = முற்றமுடிய வார்த்தை சொல்லவேண்டுமோநீ; சிறிது வாயைத் திறக்கும்போதே உன்னை அவர் எங்ஙனம் கொண்டாடப்போகிறார் பார்; “ஏஷ ஸர்வஸ்வபூதஸ்து பரிஷ்வங்கோ ஹூமத;“ என்கிறபடியே அனுமான் பெற்ற பரிசும் ஏகதேசமென்னும்படியன்றோ நீ பஹுமாநம் பெறப்போகிறாய்; இது நான் சொல்ல வேணுமோ? அநுபவத்தில் பார்த்துக் கொள்ளாய் என்றாளாயிற்று.

      உரை:2

      சோலை மலர்களில் நிறைந்த தேனைப் பருகி, உன் பெடையுடன் இனிதே கலந்து மகிழும், ஆறு கால்களை உடைய சிறு வண்டே!. நான் உன்னை வணங்குகிறேன். பசுக்களை மேய்த்துக் காத்த எம் பெருமான் அழகிய திருவழுந்தூரில் உள்ளான். இன்றே, நீ அவனிடம் சென்று பயப்படாமல் நின்று, "ஒரு பெண் உன்னை ஆசைப்பட்டாள்" என்று சொல் என்கிறார்.