திரு வித்துவக்கோடு

தலபுராணம்: இந்துத் தொன்மங்களின்படி துவாபர யுகத்தில் பஞ்ச பாண்டவர்கள் வனவாச காலத்தில் தென்னிந்தியாவில் பயணம் செய்கையில் இங்குள்ள நீளா நதிக்கரையோரம் ஒரு அழகான இடத்தைக் கண்டனர். அங்கு நிலவிய தெய்வீகம் கலந்த அமைதியைக் கண்டதும் சில காலம் அங்கேயே தங்கி இருக்க எண்ணினர். நாள்வழிபாட்டிற்காக சிலைகளையும், ஆலயத்தையும் நிர்மானித்தனர். முதலில் அர்ஜுனன் மஹாவிஷ்ணுவின் சிலையையும் அதற்கு வடக்கே தருமர் ஒரு சிலையையும் தென்புறத்தில் பீமன் ஒரு சிலையையும் அதற்கு பின்புறம் (தென்புறத்திலே) நகுலனும் சகாதேவனும் ஒரு சிலையையும் நிர்மானித்தனர். அவர்களது வெகு காலத்திற்குப் பின்னால் பாண்டியமன்னன் ஒருவனால் மிகப்பெரிய சுற்றுமதில் கட்டப்பட்டது. நெடுங்காலம் 4 மூர்த்திகளால் ஆனதாகவே இக்கோவில் இருந்தது. சுமார் 2000 (1800) ஆண்டுகட்கு முன்பு தென்னாட்டைச் சேர்ந்த முனிவர் ஒருவர் காசிக்குச் சென்றிருந்தார். அங்கேயே வெகு காலம் தங்கி வாழ்ந்திருந்தார். அவரது அன்னையார் மரணத் தறுவாயில் இருப்பதாக செய்தி வந்ததையடுத்து அவர் திரும்பிவரும்போது அவரது பக்தி ஈடுபாட்டினால் காசி விசுவநாதரும் அம்முனிவரது குடையில் மறைந்து வந்ததாக கூறுவர். வரும் வழியில் இந்தச் சன்னதிக்கு வந்த முனிவர் நீளா நதியில் நீராடச் செல்லும்போது நான்கு மூர்த்திகட்கு முன்புறம் இருந்த ஒரு பலி பீடத்தில் தமது குடையை வைத்துவிட்டுச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது அந்தப் பலி பீடம் நான்காக வெடித்து அவ்வெடிப்பிலிருந்து சுயம்புவாக சிவலிங்கம் ஒன்றும் தோன்றியிருந்ததாம். குடையும் மறைந்துவிட்டது. இவ்விதம் இது ஐந்து மூர்த்தி தலமாயிற்று. தற்போது இந்த சிவலிங்கத்தைச் சுற்றிலும் தனியே ஒரு கோவில் கட்டப்பட்டுவிட்டது.

அமைவிடம்

உய்ய வந்த பெருமாள் கோயில் திருவித்துவக்கோடு அமைவிடம் நாடு: இந்தியா மாநிலம்: கேரளா மாவட்டம்: பாலக்காடு,

தாயார் : ஸ்ரீ வித்துவக்கோட்டு வல்லி
மூலவர் : உய்ய வந்த பெருமாள்
உட்சவர்: --
மண்டலம் : மலை நாடு
இடம் : திருச்சூர்
கடவுளர்கள்: அபாயபிரதன் ,பத்மபாணி நாச்சியார்


திவ்யதேச பாசுரங்கள்

    688.   
    தரு துயரம் தடாயேல்*  உன் சரண் அல்லால் சரண் இல்லை* 
    விரை குழுவும் மலர்ப் பொழில் சூழ்*  வித்துவக்கோட்டு அம்மானே*
    அரி சினத்தால் ஈன்ற தாய்*  அகற்றிடினும்*  மற்று அவள்தன் 
    அருள் நினைந்தே அழும் குழவி*  அதுவே போன்று இருந்தேனே (2)    

        விளக்கம்  


    • வித்துவக்கோடு என்பதற்கு - வித்வான்கள் கூடிய இடம் என்று காரணப் பொருள் கூறுவர். பிள்ளைப் பெருமாளையங்கார் நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில் “ திருவிற்றுவக்கோடு சேர்ந்தார் பிறவி கருவிற்றுவக் கோடுங்காண் “ என்றிருப்பதனால், வித்துவக் கோடு அல்ல; விற்றுவக்கோடு என்பர் சிலர். அவ்விடத்திலும் “ திருவித்துவக்கோடு “ என்றே பாடமென்பர் பெரியோர்: இவ்வளவால் எதுகையின்பம் குன்றாது இத்திருமொழியின் ஈற்றுப் பாசுரத்திலும் இங்ஙனமே பாடமாம். இத்திவ்யதேசம் மலைநாட்டில் “ திருமிற்றக் கோடு “ என வழங்கப் படுகின்றது.


    689.   
    கண்டார் இகழ்வனவே*  காதலன்தான் செய்திடினும்*
    கொண்டானை அல்லால்*  அறியாக் குலமகள் போல்*
    விண் தோய் மதில் புடை சூழ்*  வித்துவக்கோட்டு அம்மா*  நீ
    கொண்டாளாயாகிலும்*  உன் குரைகழலே கூறுவனே

        விளக்கம்  



    690.   
    மீன் நோக்கும் நீள் வயல் சூழ்*  வித்துவக்கோட்டு அம்மா*  என்-
    பால் நோக்காயாகிலும்*  உன் பற்று அல்லால் பற்று இலேன்*
    தான் நோக்காது*  எத்துயரம் செய்திடினும்*  தார்-வேந்தன்
    கோல் நோக்கி வாழும்*  குடி போன்று இருந்தேனே

        விளக்கம்  



    691.   
    வாளால் அறுத்துச் சுடினும்*  மருத்துவன்பால்*
    மாளாத காதல்*  நோயாளன் போல் மாயத்தால்*
    மீளாத் துயர் தரினும்*  வித்துவக்கோட்டு அம்மா*  நீ
    ஆளா உனது அருளே*  பார்ப்பன் அடியேனே

        விளக்கம்  


    • நீயே எனக்கு ஸர்வவிதாக்ஷகன் என்று நான் துணிந்த பின்பு, நீ எனக்கு எவ்வளவு துன்பங்களை இவ்விபூதியிலே தந்தருளினாலும் அவற்றையெல்லாம் நான் நன்மையாகவே கருதி மிக்க நன்றியறிவு பாராட்டி மேன்மேலும் அன்பு செய்து வருவேனேயன்றி உன்னைச் சிறிதும் குறை கூறமாட்டேன் என்பதை உபமாநத்தால் விளக்கினார்.


    692.   
    வெங்கண்-திண்களிறு அடர்த்தாய்*  வித்துவக்கோட்டு அம்மானே*
    எங்குப் போய் உய்கேன்?*  உன் இணையடியே அடையல் அல்லால்*
    எங்கும் போய்க் கரை காணாது*  எறிகடல்வாய் மீண்டு ஏயும்*
    வங்கத்தின் கூம்பு ஏறும்*  மாப் பறவை போன்றேனே

        விளக்கம்  



    693.   
    செந்தழலே வந்து*  அழலைச் செய்திடினும்*  செங்கமலம்
    அந்தரம் சேர்*  வெங்கதிரோற்கு அல்லால் அலராவால்*
    வெந்துயர் வீட்டாவிடினும்*  வித்துவக்கோட்டு அம்மா*  உன்
    அந்தமில் சீர்க்கு அல்லால்*  அகம் குழைய மாட்டேனே

        விளக்கம்  



    694.   
    எத்தனையும் வான் மறந்த*  காலத்தும் பைங்கூழ்கள்*
    மைத்து எழுந்த மா முகிலே*  பார்த்திருக்கும் மற்று அவை போல்*
    மெய்த் துயர் வீட்டாவிடினும்*  வித்துவக்கோட்டு அம்மா*  என்
    சித்தம் மிக உன்பாலே*  வைப்பன் அடியேனே

        விளக்கம்  



    695.   
    தொக்கு இலங்கி யாறெல்லாம்*  பரந்து ஓடித்* தொடுகடலே
    புக்கு அன்றிப் புறம்நிற்க*  மாட்டாத மற்று அவை போல்*
    மிக்கு இலங்கு முகில்-நிறத்தாய்*  வித்துவக்கோட்டு அம்மா*  உன்
    புக்கு இலங்கு சீர் அல்லால்*  புக்கிலன் காண் புண்ணியனே

        விளக்கம்  



    696.   
    நின்னையே தான் வேண்டி*  நீள் செல்வம் வேண்டாதான்*
    தன்னையே தான் வேண்டும்*  செல்வம்போல் மாயத்தால்*
    மின்னையே சேர் திகிரி*  வித்துவக்கோட்டு அம்மானே*
    நின்னையே தான் வேண்டி*  நிற்பன் அடியேனே

        விளக்கம்  


    • யாவனொருவன் எம்பெருமானிடத்திலே அன்பைச் செலுத்தி அதனால் ஐச்வர்யத்தை உபேக்ஷிக்கிறானோ, அவன் உபேக்ஷிக்க உபேக்ஷிக்க அவனது நல்வினைப்பயனால் அச்செல்வம் அவனை விடாது விரும்பி வலியத் தொடர்ந்து சேர்தல் இயல்பு. (அபேக்ஷிப்பவனுக்குக் கிடையாதொழிதலும், அபேக்ஷியாதவனுக்கு வலிவிலே கிடைத்தலும் பகவத் ஸங்கல்ப மஹிமையென்பது இங்கு அறியத்தக்கது). அது போலவே, நீ உன் உடைமையாகிய என்னை உபேக்ஷிக்க உபேக்ஷிக்க நான் உன்னையே விடாது நிற்பேன் என்றவாறு. அடியார்களுக்கு நேரும் துன்பங்களைப் போக்கி எங்களைக் காப்பதற்காகவே கையுந் திருவாழியுமாக இங்கே வந்துள்ளாய் நீ என்பது மூன்றாமடியின் உட்கருத்து. இப்பாட்டு விஷயத்தில் வேதாந்த தேசிகனுடைய கருத்து - செல்வத்தை வெறுத்து எம்பெருமானையே வேண்டி நிற்பவனுக்கு அச்செல்வம் தானே வந்து சேர்தல் பொருந்தாதாதலால், இப்பாட்டில் அங்ஙனம் கூறியுள்ளதை, முன்பு நெடுங்காலம் ஐச்வர்யத்துக்காக உபாஸகை பண்ணி அது பெறாமல் அதனை வெறுத்து எம்பெருமான் பக்கல் அன்பு பூண்ட ஒரு அதிகாரி விஷயமாகக் கொள்ளுதல் நலம் என்பதாம். செல்வம் என்பதற்கு ”மோக்ஷலக்ஷ்மி ” என்றுரைப்பாரும் உளர்.


    697.   
    வித்துவக்கோட்டு அம்மா*  நீ வேண்டாயே ஆயிடினும்* 
    மற்று ஆரும் பற்று இலேன் என்று*  அவனைத் தாள் நயந்து*
    கொற்ற வேல்-தானைக்*  குலசேகரன் சொன்ன* 
    நற்றமிழ் பத்தும் வல்லார்*  நண்ணார் நரகமே (2)

        விளக்கம்