திருவனந்தபுரம்

தலபுராணம்: திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மனாபசுவாமி கோவில் இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஒரு புகழ்பெற்ற இந்துக்கள் வழிபடும் கோயிலாகும். திரு அனந்த பத்மனாபசுவாமி கோயில் என்பது இதன் மற்றொரு பெயராகும். மூலவர் பகவான் மகா விஷ்ணு வின் கோவிலாகும், இக்கோவில் கேரளாவில் திருவனந்தபுரம் நகரத்திலுள்ள கோட்டைக்குள் அமைந்துள்ளது. இக் கோயில் விஷ்ணுவுக்கு உரிய 108 திவ்ய தேசங்கள் எனப்படும் புனித வழிபாட்டிடங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இக்கோவிலில் மூல நாதரான பத்மனாபசுவாமி மகா விஷ்ணுவின் அவதாரமாக அனந்தசயனம் எனப்படும் யோகநித்திரையில் (முடிவற்ற உறக்கநிலை, துயிலும் நிலை)ஆழ்ந்திருக்கும் வண்ணம் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இது ஒரு பழைய கோயில் ஆகும். திருவனந்தபுரம் (திரு+அனந்த+புரம்) என்னும் பெயரும் இக்கோயிலில் உள்ள இறைவனின் பெயரைத் தழுவியே ஏற்பட்டது. திருவிதாங்கூர் அரசர்கள் காலத்தில் இக்கோயில் பெரும் புகழுடன் விளங்கியது.

அமைவிடம்

பெயர்: திருவனந்தபுரம் பத்மநாபசாமி திருக்கோயில் (ஸ்ரீ பத்மனாபசுவாமி கோவில்) அமைவிடம்:- கிழக்கு கோட்டை,
கேரளா - 695023 ஊர்: திருவனந்தபுரம் மாநிலம்: கேரளா நாடு: இந்தியா,

தாயார் : ஸ்ரீ ஸ்ரீஹரி லக்ஷ்மி
மூலவர் : அனந்தபத்மநாபன்
உட்சவர்: --
மண்டலம் : மலை நாடு
இடம் : கோவளம்
கடவுளர்கள்: அனந்தபத்மநாபன்,ஸ்ரீ ஸ்ரீஹரி லக்ஷ்மி


திவ்யதேச பாசுரங்கள்

    3794.   
    கெடும் இடர்ஆயஎல்லாம்*  கேசவா என்ன*  நாளும் 
    கொடுவினை செய்யும்*  கூற்றின் தமர்களும் குறுககில்லார்*
    விடம்உடை அரவில்பள்ளி*  விரும்பினான் சுரும்பலற்றும்* 
    தடம்உடை வயல்*  அனந்தபுரநகர் புகுதும்இன்றே     (2)

        விளக்கம்  


    • திருவனந்தபுரத்திலே சென்று சேருகைக்கு இடையூறுகள் பல உண்டே; அவையெல்லாம் திருநாமஸங்கீர்த்தனம் பண்ணின வளவிலேயே தொலையும்; அங்கே புக வாருங்கோள் என்று அநுகூலரையழைக்கிறார். கேசவாவெள்ள இடராய வெல்லாம் கெடும்... கேசவா வென்று மூன்றெழுத்தைச் சொன்ன வளவிலே இடரென்று பேர் பெற்றவையெயல்லாம் கெடும். * மேருமந்தர மாத்ரோபி ராசி, பாபஸ்ய கடாமண கேசவம் வைத்யமாஸாத்ய துர்வ்யாதிரிவ நச்யதி* என்ற ப்ரமாணம் இங்கு அநுஸந்திக்கதாகும். ’கேசவன்’ என்னுந் திருநாமத்திற்குப் பல பொருள்களுண்டானாலும் கம்ஸனது ஏவுதலால் தன்னை நலியக் குதிரை வடிவு கொண்டு திருவாய்ப்பாடியிலே வந்து கேசி என்னுமஸுரனை வதஞ் செய்தவனென்று பொருள் கொள்ளுதல் இங்கு ப்ரகரணத்திற்றுச் சேரும். “அவன் ஒரு விரோதியைப் போக்கினபடியைச் சொல்ல, விரோதி என்று பேர்பெற்றவை எல்லாம் நசிக்கும்’’ என்பது ஈடு. ப்ராரப்த கருமங்கள் ஸஞ்சித கருமங்கள் என்று பாகுபாடுற்றவை எல்லாம் கெடுமென்பது தோன்ற “இடராய எல்லாம்’’ எனப்பட்டதென்ப. நாளுங் கொடுவினை செய்யுங கூற்றின் தமர்களும் குறுககில்லார்..... நமன் தமராலுமாராயப்பட்டறியாரென்றபடி. எல்லாவிடரும் கெடுமென்ற போதே நரக வேதனைகளும் கெடுமென்று சொல்லிற்றாகத் தேறாதோ? * கூற்றின் தமர்களுங் குறுககில்லாரென்று தனிப்படச் சொல்லவேணுமோ என்று சங்கை தோன்றும்; பொதுவாகச் சொல்லுமதில் சேர்ந்தவற்றையும் தனிப்படச் சொல்லுவதானது ஒரு விசேஷத்தைக் காட்டி நிற்கும்; மிக்க கொடிய நரக வேதனைகளை அனுபவித்தே போக்க வேணுமென்று நினைக்க வேண்டர் கேசவா வென்ற வளவிலே அவையும் கெடுமென்றதாயிற்று. * நரதே பச்யமாநஸ்து யமேக பர்பாஷதா கிம் த்வயா நார்ச்சிதோ தேவ: கேசவ: க்லேச நாசந* என்ற ப்ரமாண வசனத்தை அடியொற்றி இரண்டாமடி அவதர்த்ததென்க. நரக வேதனைகளை அனுபவிக்க அங்கே சென்று யமபபடர்களால் பசனம் பண்ணப்படும் போது யமன் கேட்கிறானாம். ’ஸமஸ்த க்லேசங்களையும் நாசஞ்செய்யவல்ல கேசவனை நீ அர்ச்சிக்கவில்லையோ- என்று. அதனால் கேசவனை அர்ச்சித்தவர்களுக்கு நரக வேதனை நேராதென்பது காட்டப்பட்டதாம். கேசவ நாமத்தை ஸங்கீர்த்தனம் பண்ணுவதும் கேசவனை அர்ச்சித்தாகுமென்று ஆழ்வார் திருவுள்ளம். பின்னடிகளால் திருவனந்தபுரத்தின் பரம யோக்யதையைத் தொவித்து அத் திருப்பதியிலே சென்று புக நியமித்தருளுகிறார். முன்னடிகளிலே சொல்லப்பட்ட அதிகாரிகளுக்கு ப்ராப்யஸ்தானம் திருவனந்தபுரமென்றதாயிற்று. எம்பெபருமானது படுக்கையயமைந்த திருவனந்தாழ்வார்க்கு வடமுடமையை ஒரு சிறப்பாகச் சொல்ல வேணுமோவெனில்; * ஆங்காரவாரமது கேட்டு அழலுமிழும் பூங்காரரவு* என்ற திருமழிசைப் பிரான் பாசுரத்தின் படியே அஸ்தாநே கலங்கி (விரோதி வர்க்கங்கள் எம் பெருமாளுக்குத் தீங்கு செய்ய நெருங்கி வந்ததாக ப்ரமித்து) விஷாக்னியைக் கக்குகை பர்வின் மிகுதியைக் காட்டுமதாகையாலே சொல்லிற்றென்க.


    3795.   
    இன்றுபோய்ப் புகுதிராகில்*  எழுமையும் ஏதம்சாரா* 
    குன்றுநேர் மாடம்மாடே*  குருந்துசேர் செருந்திபுன்னை*
    மன்றலர் பொழில்*  அனந்தபுரநகர் மாயன்நாமம்*
    ஒன்றும்ஓர் ஆயிரமாம்*  உள்ளுவார்க்கு உம்பர்ஊரே

        விளக்கம்  


    • திருவனந்தபுரத் தெம்பெருமானுடைய திருநாமமொன்றே ஸஹஸ்ர முகமான ரக்ஷயைப் பண்ணுமென்றார். உலகில் கெட்ட காரியங்களைச் செய்ய நினைப்பவன் ஒரு கணப்பொழுதும் தாமதியாமல் உடனே செய்து முடிப்பதும், அவனே நல்ல காரியமொன்றைச் செய்ய நினைத்தால், பாரிப்போம் பாரிப்போமென்று தாமதித்தே நிற்பதும் இயல்பாதலால் “அனந்தபுர நகர் புகுதும் இன்றே’’ என்று கீழ்ப்பாட்டில் சொல்லியிருந்தும் மீண்டும் “ இன்று போய் புகுதிராகில்’’ என்று விரைவுறுத்துகின்றார். போவோமென்று விருப்பமுண்டான வின்றே போய்ப் புகுவீர்களாகில், ஒரு காலமும் பொல்லாங்கு வந்து கிட்டாது; “நம்மன் போலே வீழ்த்தமுக்கும் நாட்டிலுள்ள பரவமெல்லாம், சும்மெனாதே கைவிட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே’’ என்றபடியே ’நமக்கு இவ்விடம் ஆச்ரயமல்ல’ வென்று தீயவையெல்லாம் தன்னடையே விட்டகலுமென்கை. திருவனந்தபரம் சென்று புகத்தான் வேணுமோ-? அத்தலத்துப் பெருமானது திருநாமமொன்றைச் சொன்னால் போதுமே; ஒரு திருநாமமே அனேகமுகமாக ரக்ஷகமாம். * ஓராயிரமாயுலகேழளிக்கும் பேராயிரங்கொண்டதோர் பீடுடையன்* என்று கீழுமருளிச் செய்தாரே. “அனந்தபுர நகர் மாயன்னாம முள்ளுவார்க்கு ளும்பருரே’’ என்றதற்கு இரண்டு வகையாகக் கருத்துரைப்பர்; இத்திருநாமஞ் சொன்னால் திருநாடு கிடைக்குமென்றும் இத்தலமே திருநாடாகுமென்றும். இப்பாட்டில் மனோவாக் காயங்களாகின்ற மூன்று உறுப்புகட்கும் தொழில் சொல்லப்பட்டுள்ளமை காண்க; ’போய்ப் புகுதிரி’ எனறதனால் காயிகவ்யாபாரம்; ’மாபன்னாமம்’ என்றதனால் வாசிகவ்யாபாரம்; ’உள்உவார்க்கு’ என்றதனால் மாநஸிகவ்யாபாரம்.


    3796.   
    ஊரும்புள் கொடியும் அஃதே*  உலகுஎல்லாம் உண்டுஉமிழ்ந்தான்* 
    சேரும் தண்அனந்தபுரம்*  சிக்கெனப் புகுதிராகில்*
    தீரும்நோய் வினைகள்எல்லாம்*  திண்ணம்நாம் அறியச்சொன்னோம்* 
    பேரும் ஓர்ஆயிரத்துள்*  ஒன்றுநீர் பேசுமினே   

        விளக்கம்  


    • பிரதிபந்தங்கள் தொலைவதற்கு இன்ன திருநாமமென்று ஒரு நிர்ப்பந்தமில்லை; ஆயிரந்திருநாமங்களுள் ஏதேனுமொரு திருநாமத்தைச் சொல்லவமையும் என்கிறார். ஊரும் புள் கொடியும் அஃதே.... பெரிய திருவடியை வாஹனமாகக் கொண்டு நடத்துவதும் த்வஜமாகக் கொள்வதுமாயிருப்பன் எம்பெருமான். இங்குப் பெரிய திருவடியைச் சொன்னது திருவனந்தாழ்வான் முதலிய மற்றுமுள்ள நித்ய ஸூரிகளின் பணியும் சொன்னபடி; * சென்றாற் குடையதம் இருந்தால் சிங்காசனமாம், நின்றால் மரவடியாம் நீள்கடலுள், என்றும் புணையாமணி விளக்காம் பூம்பட்டோம் புல்குமணையாம் திருமாற்கரவு* என்ற பாசுரத்தன் படியே திருவனந்தாழ்வான் பக்கலில் பல பல சேஷ வ்ருதிகளையுங் கொள்வதுண்டே: அதுவும் இங்குச் சொல்லிற்றாக’ கொள்க. இன்று போய்க் கிட்டின ஒரு ஸம்ஸாரிக்கு நித்யஸூரிகளின் ஸாம்யாபத்தியைக் கொடுக்கவல்லவன் எம்பெருமான் என்கைக்காக இது சொல்லுகிறது. உலகெல்லா முண்டு உமிழ்ந்தான் சேருந்தண்ணனந்தபுரம்.... ’இப்பெருமாள் ஆபத்ஸகனன்றோ’ என்று அநுஸந்தானம செய்து கொண்டே அப்பெருமானுடைய திருப்பதியிலே சென்று புகுங்கோளென்கிறார். அப்படிச் சென்று புகுந்தால், புக்கவளவிலேயே துக்கங்களும் துக்க ஹேதுக்களும் எல்லாம் தீரும்; இது அநுபவஸித்தமாகையாலே ஸத்யமாய்ச் சொல்லுகிறபடி. திருவனந்தபுரம் செனறு புகுந்து நாங்கள் செய்ய வேண்டுவதென்? என்ன; (பேருமோராயிரத்து ளொன்று நீர் பேசுமினே) * ஓராயிரமா யுகேழளிக்கும் பேராயியரங்கொண்டதோர் பீடுடையன்* என்று முன்னமே சொன்னோமே; ஒரு திருநாமந்தானே ஆயிரமுகமாக ரக்ஷிக்கும்படியான ஆயிரந்திருநாமங்களை யுடையவனன்றோ அவன்: அவற்றுள் வாய்க்கு வந்தவொரு திருநாமத்தைச் சொல்லுங்கோளென்கிறார்.


    3797.   
    பேசுமின் கூசம்இன்றி*  பெரியநீர் வேலைசூழ்ந்து* 
    வாசமே கமழும் சோலை*  வயலணிஅனந்தபுரம்*
    நேசம்செய்து உறைகின்றானை*  நெறிமையால் மலர்கள்தூவி* 
    பூசனை செய்கின்றார்கள்*  புண்ணியம் செய்தவாறே.   

        விளக்கம்  


    • திருவனந்தபுரத்திலே சென்று அடிமை செய்வா! என்ன பாக்கியம் செய்தவர்களோவென்று கொண்டாடுகிறார்; இங்ஙனே கொண்டாடுவது ஆச்ரயிப்பார்க்குருசியுண்டாவதற்காக வென்ப. பேசுமின் கூசமின்றி..... இதற்கு இரண்டடிடத்தில் அந்வயங் கொள்ளலாம், அனந்தபுரம் நேசஞ் செய்துறைகின்றானைப் பேசுமின் என்றோ, உறைகின்றானைப் பூசனை செய்கின்றார்கள் புண்ணியஞ்செய்தவாறு பேசுமின் என்றோ அந்வயிக்கலாம். அனந்தபுரம் எப்படிப்பட்டதென்னில், பெரிய நீர் வேலை சூழ்ந்து வாசமேகமழுஞ் சோலை. கடலில் நாற்றம் மேலிடாதபடி சோலையிற் பர்மளமே விஞ்சியிருக்கப் பெற்றதாம். அத்தகைய திருப்பதியிலே நேசஞ்செய்து உறைகின்றானை... பரமபதத்திலுங் காட்டில் சிறப்பாக ப்£திபண்ணி ஆர்த்தரக்ஷணத்திற்குப் பாங்கான தேமென்று விரும்பி வர்ததியா நின்றான். அவனை, நெறிமையால் மலர்கள் தூவிப் பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே.... * சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி விண்ணோர்கள் நன்னீராட்டி அந்தூபந்தரா நிற்கவே யங்கு* என்கிறபடியே திருநாட்டில் செய்யும் பூசனை ஒரு பூஜையோ? இந்தளத்தில் தாமரை பூத்தாற்போலே இங்குள்ளோர் செய்யும் பூசனையன்றோ புகழத்தக்கதாவது.


    3798.   
    புண்ணியம் செய்து*  நல்ல புனலொடு மலர்கள்தூவி* 
    எண்ணுமின் எந்தைநாமம்*  இப்பிறப்புஅறுக்கும் அப்பால்*
    திண்ணம்நாம் அறியச்சொன்னோம்*  செறிபொழில் அனந்தபுரத்து* 
    அண்ணலார் கமலபாதம்*  அணுகுவார் அமரர்ஆவார் 

        விளக்கம்  


    • திருவனந்தபுரத்தெம்பெருமானது திருவடிகளைக் கிட்டுமவர்கள் நித்யஸூரி துல்யராகவர்களென்பது திண்ணம்; ஆகவே அங்கு நீங்களும் ஆச்ரயிக்கப் பாருங்களென்றுரைக்கிறார். புண்ணியம் செய்து..... புண்யமென்கிற ஸாமாந்ய சப்தமானது இங்கு விசேஷத்திலே பரியவஸித்து பக்தியைச் சொல்லுகிறது. அல்லது ’ காரியே காரணோபசாரம்’ என்னும் வழக்கின்படி பக்தி புண்யபலமாகையாலே காரணமான புண்யத்தைச் சொன்னதும் அதன் பலனான பக்தியைச் சொல்லுகிறதென்று இவ்வழியாலும் பொருள் கொள்ளலாம். நல்ல புனலோடு மலர்கள தூவி..... நல்ல புனலென்று கங்கா தீர்த்தத்தையும் காவேரி தீர்த்தத்தையும் கொண்டுவரச் சொல்லுகிறதன்று; நல்ல புனலென்றது சுத்த ஜலம் என்றபடியாய், ’ சுத்த கங்கை’ என்றால் யமுனை ஸரஸ்வதி முதலிய இதர நதிகள் கலசாத வெறுங்கங்கை என்று பொருளாவது போல, ஏலம் லவங்கம் முதலிய இதர வஸ்துக்கள் சேராத வெறும் தீர்த்தம் என்று வாறாம். இதனால் ஆராதனையில் அருமையின்மை தோற்றும். கீதையில் * பத்ரம் புஷ்பம் பலம் தோயம்* என்று வெறும் தீர்த்தத்தையன்றோ அவன்றானும் விரும்பிற்று. புனலோடு என்றவிடத்து, ஓடு..... ளும்மைப் பொருளது; புனலையும் மலர்களையும் பணிமாறி என்ற படி எந்தை நாமம் எண்ணுமின்.... இஙகே ஈட்டு ஸ்ரீஸூக்தி; “ இன்றிவன் அம்மே யென்னுமாபோலே திருநாமம் சொல்லும் போது ஒரு அதிகார ஸம்பத்தி தேட வேண்டா. ஜீயர் பட்டரை ’திருநாமம் சொல்லும் போது ப்ரயதனாய்’ கொண்டு சொல்ல வேணுமோ? என்று கேட்க; க்கங்கையிலே முழுகப் போமவனுக்கு வேறோரு உவர்க்குழியிலே முழுகிப் போக வேணுமோ? மேலுண்டான நன்மையைத் தருகிற விது அதிகாரி ஸம்பத்தியையும் தரமாட்டாதோ?’ என்றருளிச் செய்தாராம். திருநாமம் சொல்லுகைக்கு ருசியேயாயிற்று வேண்டுவது; அவர்களே அதிகாரிகள்.’‘ எந்தை நாமம் எண்ணினால் அதனால் விளையும் பயன் சொல்லுகிறது இப்பிறப்பறுக்கும் என்று. * தீண்டாவழும்புஞ் செந்நீரும் சீயும் நரம்பும் செறிதசையும் வேண்டா நாற்றமிகுமுடல்* என்று பரமஹேயமாகச் சொல்லப்பட்ட தேஹஸம்பந்தத்தை அறுக்கும். அப்பால் என்றதற்கு அமரராவார் என்றதில் அந்வயம்.


    3799.   
    அமரராய்த் திரிகின்றார்கட்கு*  ஆதிசேர் அனந்தபுரத்து* 
    அமரர்கோன் அர்ச்சிக்கின்று*  அங்குஅகப்பணி செய்வர் விண்ணோர்*
    நமர்களோ! சொல்லக்கேள்மின்*  நாமும்போய் நணுகவேண்டும்* 
    குமரனார் தாதை*  துன்பம் துடைத்த கோவிந்தனாரே

        விளக்கம்  


    • அயர்வறுமமரர்களும் வந்து அடிமை செய்கிறது திருவனந்தபுரத்திலே யாதலால் திருநாட்டிலுங்காட்டில் பரமப்ராப்யம் திருவனந்தபுரம்; நாமும் இங்கே சென்று அடிமை செய்யத்தகுமென்கிறார். ஆசாரியஹ்ருதயத்தில்.... (183) “ஸஸைந்யபுத்ர சிஷ்ய ஸாரியஸித்த பூஸுரார்ச்சநத்துக்கு முகநாபி பாதங்களை த்வாரத்ரயத்தாலே காட்டும் ஸாம்யம் அநந்த சயனத்திலே வ்யக்தம்’’என்றருளிச் செய்த சூர்ணை பெரும்பாலும் இப்பாசுரத்தையே உட்கொண்டதாகும்; “அமரராய்த் திரிகின்றார்கட்கு ஆதி’’ என்கையாலே பிரமன் முதலான தேவர்கள் வந்து பணிகின்றமை தொவிக்கப்படுகிறது. * அமரர் கோன் அர்ச்சிக்கின்ற அங்ககப் பணி செய்பவர் விண்ணோர்* என்கையாலே நித்ய ஸூரிகளில் தலைவரான ஸேநாபதியாழ்வான் ஸபர்வாரராய வந்து அர்ச்சிகின்றமை தெரிவிக்கப்படுகிறது. * நமர்களோ! சொல்லக் கேண்மின் நாமும் போய் நணுக வேண்டும்* என்கையாலே நம் போலியர்களும் சென்று பணியத் தகுந்தமை தெரிவிக்கப்பட்டது. ஆக இங்னே மூவகைப்பட்ட அதிகாரிகளும் ஆச்ரயியப்பதற்குப் பாங்காக இத்தலத்தெம்பெருமான் மூன்றுத்வாரங்களை அமைத்துக் கொண்டு ஸேவை ஸாதியாநின்றான்; முக்கியர்களான நித்யஸூரிகளுக்கு ஸேவைஸாதிக்க முகத்வாரம்; திருநாபியினின்று தோன்றின பிரமன் முதலியோர்க்கு ஸேவைஸாதிக்க நாபித்வாரம்; திருவடியல்லது புகலற்ற நம்போல்வார்க்கு ஸேவைஸாதிக்க ஸ்ரீபாதத்வாரம். குமரனார் தாதை துன்பந்துடைத்த கோவிந்தனாரே..... ருத்ராதிகளுக்கு துக்கநிவர்த்தகனாயிருக்கும்; பசுக்களுக்கும் இடையர்க்கும் கையாளாயிருக்கும்; துர்மான்கிளுக்கும் துக்க நிவருத்தியைப் பண்ணிக் கொடுக்குமவன் அபிமாந சூந்யரான நமக்குத் தன்னைக் கிட்டுகையில் அருமைப்படுத்துவனோ? என்பது கருத்து.


    3800.   
    துடைத்த கோவிந்தனாரே*  உலகுஉயிர் தேவும்மற்றும்* 
    படைத்த எம்பரமமூர்த்தி*  பாம்பணைப் பள்ளிகொண்டான்*
    மடைத்தலை வாளைபாயும்*  வயல்அணிஅனந்தபுரம்* 
    கடைத்தலை சீய்க்கப்பெற்றால்*  கடுவினை களையலாமே  

        விளக்கம்  


    • ஸர்வேச்ரன் திருக்கண் வளர்ந்கருளுகிற திருவனந்தபுரத்தே சென்று அடிமை செய்யய்ப பெற்றால் எல்லாத் துக்கங்களும் தீருமென்கிறார். உலகங்களைப் படைப்பது முன்னும் துடைப்பது பின்னுமாகை ப்ராப்தமாயிருக்க, ’துடைத்த கோவிந்தனாரே’ என்று ஸம்ஹாரத்தை முன்னே சொல்லி ’படைத்த ªம்பரமூர்த்திக் என்று பின்னை ஸ்ருஷ்டியைச் சொல்லியிருப்பதேன்? என்று சங்கிக்க வேண்டர் வேதாந்தங்களில் ஸம்ஹாரந்தான் முந்துற முன்னம் சொல்லப்படுவது. ஸம்ஸாரம் அநாதியாகையாலே ஆதிஸ்ருஷ்டி காலம் தெரியாது. “ஸூரியா சந்த்ரமஸௌ தாதா யதாபூர்வ மகல்பயத்’’ என்ற உபநிஷத்தில் யதாபூர்வ மென்றது காண்க. உலகு உயிர் தேவும் மற்றும் படைத்த எம்பரமமூர்த்தி.......... லோகத்தையும் தேவர்களையும் மற்றமுண்டான ஆத்மாக்களையும் உண்டாக்கினவன். இஙகே ஈடு.....; “இவை அதிப்ரவ்ருத்தமானவன்று ஸம்ஹர்த்து, பின்னை புருஷாத்தோபயோகியான கரணங்களைக் கொடுத்து ரக்ஷித்த.’’ எம்பரம மூர்த்தி....... என்போல்வார்க்கு விதேயனாயிருக்குந் தன்மையையே தனக்குப் பெருமையாகக் கொண்ட ஸ்வாமி என்றபடி. பாம்பணைப் பள்ளி கொண்டான்... கீழே “உலகுயிர் தேவும் மற்றும் படைத்த’’ என்று நின்றது; அங்ஙனம் படைக்கப்பட்ட உலகங்களை ரக்ஷிப்பதற்கான உபாயத்தைச் சிந்தனை செய்வதற்காகத் திருவனந்தாழ்வான் மேலே கண் வளர்ந்தருளுகிறபடி. அப்படிக் கண் வளர்ந்தருளுமவனுடைய அனந்தபுரம் என்று அந்வயம். அத்திருப்பதியிலே; கடைத்தலை சீய்க்கப் பெற்றால்.... திருவாசலிலே திருவலகு திருப்பணி செய்யப் பெற்றால்; அதாவது பெருக்கி மெழுகிக் கோலமிடுகை. கீழே பண்டை நாளாலே* என்கிற பாட்டிலும் “உன் கோயில் சீய்த்துக்’ என்றாரே; இப்படிப்பட்ட அடிமையைச் செய்யப்பெற்றால், கடுவினைகளையலாம் அடிமை செய்யப் பெறாமையாலுண்டான கிலேசமெல்லாம் தொலையுமென்றபடி.


    3801.   
    கடுவினை களையலாகும்*  காமனைப் பயந்தகாளை* 
    இடவகை கொண்டதுஎன்பர்*  எழில்அணிஅனந்தபுரம்*
    படம்உடைஅரவில் பள்ளி*  பயின்றவன் பாதம்காண* 
    நடமினோ நமர்கள்உள்ளீர்!*  நாம் உமக்குஅறியச் சொன்னோம்.

        விளக்கம்  


    • திருவனந்தபுரத்திலே திருக்கண் வளர்ந்தருளுகிற ஸர்வேச்வரனுடைய திருவடிகளைக் காண நடவுங்கோளென்று ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு நியமித்தருளுகிறார். கடுவினை களையலாகு மென்று முந்துற முன்னமே பலனைச் சொல்லுகிறார் ப்ரரோசநார்த்தமாக. எழிலணியனந்தபுரத்தில் படமுடையரவில் பள்ளி பயின்றவன் பாதங் காண நடந்தால் (அந்த உத்யோகத்தளவிலே) கடுவினை களையலாகும்... நம்மால் போக்கவரிய பாபங்களை எல்லாம் போக்கலாம். காமனைப் பயந்த காளை என்று வடிவழகிலேற்றஞ் சொல்லுகிறது. காளை... நித்யயுவா. பின்னடிகளில் அநுஸந்திக்கு மோர் ஐதிஹ்யமுண்டு; ஆளவந்தார்க்கு ஸகலார்த்தங்களையும் உபதேசித்தருளின மணக்கால் நம்பி, யோகரஹஸ்யம் மாத்திரம் குருகை காவலப்பனிடத்திலே பெறக்கடவீர் என்று ஸாதித்திருந்தபடியாலே ஒரு யோகரஹஸ்யத்தை அருளிச் செய்ய வேணுமென்று வேண்ட, அவரும் ஒரு நாளிட்டுக் கொடுத்து அந்த நாளிலே வந்து உபதேசம் பெறும்படி சொல்லிப் போக விட, ஆளவந்தாரும் நம்பெருமாள் ஸன்னிதிக் கெழுந்தருள, அந்த ஸமயம் திருவத்யநோத்ஸவ ஸமயமாக இருக்கையில் அரையர் கோஷ்டியிலே அந்வயித்திருக்க,* கடுசினைகளையலாகு என்கிற இப்பாட்டளவிலே * எழிலணியனந்தபுரம் படமுடையரசிற் பள்ளி பயின்றவன் பாதங்காண நடமினோ நமர்களுள்ளீர் நாமுமக்கறியச் சொன்னோம்* என்பதை அரையர் ஆளவந்தார் திருமுகத்தைப் பார்த்து ஊன்றி யுறுத்திப்பாட, ஆளவந்தாரும் இதை கேட்டுக் ’ஆழ்வாருடைய தமர்களிலே நாம் அந்வயிக்க வேண்டில் திருவனந்தபுரஞ் சென்று ஸேவித்து வர ப்ராப்தம்’ என்று சொல்லிக்கொண்டே அப்போதே நம்பெருமாளிடம் விடைபெற்றுப் பயமாகித் திருவனந்தபுரத்திற் எழுந்தருளி அனந்த பத்மநாபனை மங்களாசாஸனம் செய்து அங்கே வாழ்ந்து போருகையில், முன்பு குருகை காவலப்பன் யோகரஹஸ்யோபதேசத்திற்காக நாளிட்டுக் கொடுத்திருந்த சிறுமுறியை எடுத்துப் பார்க்க நேர்ந்து அதுவே நாளாக இருந்தபடியாலே துணுக்கென்று அலமந்து ’ஒரு புஷ்பக விமானம் பெற்றிலோமே’ என்று சோகித் தெழுந்தருளியிருந்தார்.


    3802.   
    நாம் உமக்கு அறியச்சொன்ன*  நாள்களும் நணியஆன* 
    சேமம் நன்குஉடைத்துக்கண்டீர்*  செறிபொழில்அனந்தபுரம்*
    தூமநல் விரைமலர்கள்*  துவள்அற ஆய்ந்துகொண்டு* 
    வாமனன் அடிக்குஎன்று ஏத்த*  மாய்ந்துஅறும் வினைகள்தாமே.  

        விளக்கம்  


    • உமக்கு நாம் அறியச் சொன்ன நாள்களும் நணியவான.... ஆழ்வார் கீழே ஒன்பதாம் பத்தில் “நாயேலறியேன்’ என்ற பாசுரத்தில் ப்ராப்திகாலம் தெரியவில்லையே என்று தடுமாறினவர், பிறகு* மரணமானால் வைகுந்தங்கொடுக்கும் பிரான்* என்று ஒரு நாள் தெரிந்ததாகச் சொன்னார். அந்த நாளும் இப்போது ஸமீபித்து விட்டதனால் “நானேறப் பெறுகின்றேன்’’ என்றிருக்கிற நான் சரம ஸந்தேசமாக உங்களுக்குச் சொல்லுகின்றேன் கேளுங்கள்; * நான் பரமபதம் சென்றுவிட்டால் பிறகு உங்களுக்குச் சொல்லுவார்ல்லை; * சொன்னால் விரோதமிது வாகிலும் சொல்லுவன் கேண்மிணோ* என்று சொல்லுகிறேன் நானொருவனே யாயிற்று உங்களுக்கு; ஆகவே கடைசியாக நான் சொல்லும் வார்த்தையைச் செவி கொடுத்துக் கேளுங்கள் என்பது கருத்து, இவ்விடத்து ஈட்டில்* தஸ்ம்ந் அஸ்தமிதே பீஷ்மே கௌரவாணாம் துரநிதரே, ஜ்ஞாநாநி அல்பீவிஷ்யந்தி ததஸ் த்வாம் சோதயாம் யஹம்* என்கிற மஹாபாரத சலோகம் இன்சுவைமிக வியாக்யானம் செய்யப்பட்டுள்ளது. பீஷ்மாசாரியர் முமூர்ஷுவாயிருக்கிற காலத்தில் தருமபுத்திரரை நோக்கிக் கண்ணபிரான கூறுவது இது. பீஷ்மராகிற ஸூரியன் அஸ்தமித்து விட்டால் பிறகு சொல்லுவாரார்? கேட்பாரார்? சிலர் சொன்னாலும் அச் சொல்லுக்கு மதிப்புத்தானுண்டோ? ஆகவே அவர்ருக்கும் போதே அவர் பக்கலிலே சென்று தருமஸூக்ஷ்மங்களைக் கேட்டுக் கொள் என்று தருமபுத்திரரைத் தூண்டினன் கண்ணபிரான். * இங்கு பீஷ்மர் ஸ்தானத்திலே ஆழ்வார்ருந்து ஸம்ஸாரிகளைத் தாமே அழைக்கிறார் நலலது கேட்க. விவக்ஷிதமான விஷயத்தைமேல் மூன்றடிகளாலே, இருளிச் செய்கிறார்..... (செறி பொழில் அனந்தபுரம் சேமம் நன்குடைத்துக் கண்டீர்) பரமயோகயமான திருவனந்தபுரமானது நல்ல க்ஷேமத்தை விளைக்குமதான தலம். நரகயாதனை முதலாக மேல்வரு மனர்த்தங்களை எல்லாம் போக்கி ரக்ஷிக்கவல்ல திவ்யதேசமென்கை. அப்படிப்பட்ட தலத்திலே, தூமம் நல்விரை மலர்கள்... ’நல்வரை’ என்பது நடுநிலைத் தீபகமாய் முன்னும் பின்னும் அந்வயிக்கும்; நல்ல பர்மளத்தையுடைய தூபத்தையும், அப்படிப்பட்ட மலர்களையும் கொண்டு ஏத்த, வினைகள் தானே மாய்ந்தறும்.


    3803.   
    மாய்ந்துஅறும் வினைகள்தாமே*  மாதவா என்ன நாளும்- 
    ஏய்ந்தபொன் மதிள்*  அனந்தபுர நகர்எந்தைக்குஎன்று*
    சாந்தொடு விளக்கம்தூபம்*  தாமரை மலர்கள்நல்ல* 
    ஆய்ந்துகொண்டு ஏத்தவல்லார்*  அந்தம்இல் புகழினாரே. 

        விளக்கம்  


    • மாதாபிதாக்களின் பேரைச் சொல்ல, அல்லது மாதாபிதாக்களின் சேர்த்தியிலீடுபட்டுப் பேச, அநாதிகாலமாக ஆர்ஜித்த துக்கங்கள் தானே மாய்ந்து போம். அம்மா! அப்பா! என்ன உச்சி குளிருமென்கிறார் (நாளுமேய்ந்த இத்யாதி) தகுதியான பொன்மதிளையுடைய திருவனந்தபுரத்திலே ஸேவை ஸாதிக்கின்ற ஸ்வாமிக்கென்று மநோரதித்துத் திருவாராதனைக்குரிய உபகரணங் ளெல்லாவற்றையுங் கொண்டு பணிந்து ஏத்துமவர்கள், அந்தமில் புகழினார்.... நித்யஸூரிகளிற் காட்டிலும் மேம்பட்டவர்களென்கிற புகழைப் பெறுவர் என்றபடி. நித்ய ஸூரிகள் வாழுமிடம் இருள்தருமா ஞாலமன்று; பகவத நுபவத்திற்கு எவ்வகையான இடையூறும் ப்ரஸக்தமாகாத நலமந்தமில்லதோர் நாடாகையாலே அங்கிருந்து கொண்டு அவர்கள பகவானை யநுபவிப்பது வியப்பன்று; உண்டியே உடையே உகந்தோடு மிம்மண்டலம் பகவதநுபவத்திற்கு நேர் விரோதி யாதலால் அப்படிப்படட இவ்விருள் தருமா ஞாலத்திலிருந்து கொண்டு திவ்ய தேசாநுபவம் செய்யப் பெறுவார் சிலருண்டாகில், அவர்கள் விண்ணுளாரிஞ் சீரியர் என்னத் தட்டுண்டோ?


    3804.   
    அந்தம்இல் புகழ்*  அனந்தபுர நகர் ஆதிதன்னைக்* 
    கொந்துஅலர் பொழில்*  குருகூர் மாறன் சொல்ஆயிரத்துள்*
    ஐந்தினோடு ஐந்தும்வல்லார்*  அணைவர்போய் அமர்உலகில்* 
    பைந்தொடி மடந்தையர்தம்*  வேய்மரு தோள்இணையே.   (2)

        விளக்கம்  


    • இத்திருவாய் மொழி கற்கைக்குப் பலன் பரமபதத்தில் திவ்யாப்ஸரஸ்ஸுக்களாலே ப்ரஹ்மாலங்கார ப்ராப்தி பெறுவதென்கிறார். கீழ்ப்பாட்டில் திருவனந்தபுரத்தை யேத்துமவர்களை அந்தமில் புகழினாராக அருளிச் செய்தார்; இப்பாட்டில் திருவனந்தபுரத் தெந்தையை அந்தமில் புகழினானாக அருளிச் செய்கிறார்; இந்நிலத்தன்பர்கள நித்யஸூரிகளிற் காட்டிலும் மேம்பட்ட புகழையுடையரானது போல, இத்தலத்தெம்பெரும்மா எம்பரமபத நிலயனிற் காட்டிலும் மேம்பட்ட புகழையுடையனாயினன். தனக்கே அற்றுத் தீர்ந்தவர்களை அடிமை கொள்பவனான பரமபத நாதனிற் காட்டிலும் விமுகர்களையுமீடுபடுத்திக் கொள்ளுமிப்பெருமான் மிக்க புகழையுடையவனென்னத் தட்டில்லையே. அந்தமில் புகழென்னும் அடைமொழி அனந்தபுரநகர்க்கும் அந்வயிக்கும். ஆதிக்கும் அந்வயிக்கும். அமருலகில் போய் பைந்தொடி மடந்தையர் தம் வெய்மருதோளிதண யணைவர்... இதற்குச் சிலர், ஸ்வர்க்க லோகத்திற்சென்று ரம்பா பரிரம்பம் முதலிய இன்பங்களை அனுபவிக்கப் பெறுவர் என்று பொருள் கொள்ளலாகாதோ வென்பர்; கீழே* ஒரு நாயகமா யென்னுந் திருவாய்மொழியில் ஸ்வர்க்க போகத்தைமுட்படப் பழித்த விவ்வாழ்வார் அதனைப் பலனாகக் கூற ப்ரஸக்தியில்லை; மேலே* சூழ்விசும்பணி முகிற்பதிகத்தில் * நிதியும் நற்சுண்ணமும் நிறைகுட விளக்கமும் மதிமுகமடந்தையர் ஏந்தினர் வந்தே* என்று சொல்லப் போகிற ஸத்காரத்தையே இங்குப் பலனாக அருளிச் செய்கிறாராயிற்று. அப்படியாகில், அவர்களுடைய வேய் மரு தோளினையை அணைவர் என்று சொல்லலாமோ வென்னில், அவர்களுடைய ஆதரத்திற்கு இலக்காகப் பெறுவர்கள் என்பதகுப் பரியாயமாகச் சொன்னது இது. “ப்ரீயதமர்களுக்கு ப்ரீயதமைகள் போக்யமாமாப் போலே, திருநாட்டலுள்ளார்க்கு இத்திருவாய் மொழிவல்லார் போக்யராவரென்கிறார்’’ என்பது ஆறாயிரப்படி யருளிச் செயல்.