Posted on January 29, 2017 by admin ஆழ்வார்கள் பற்றி அறிந்து கொள்வோம் ஆழ்வார்கள் தம்முடைய தமிழ் பாசுரங்களால் வைணவ சமயக் கடவுளான திருமாலைப் போற்றி பாடி மகிழ்ந்தவர்கள். திருமாலின் அடியவர்களான இவர்கள் திருமாலின் பெருமையும், தமிழின் சிறப்பினையும் உலகுக்கு உணர்த்தியவர்கள். வடமொழியில் உள்ள வேதங்களுக்கு இணையாக இவர்களின் பாசுரங்கள் போற்றப்படுகின்றன. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிர திவ்ய பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது. ஆழ்வார்களின் காலம் ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை என்று கருதப்படுகிறது. ஆழ்வார்கள் மொத்தம் பன்னிரெண்டு பேர் ஆவார். 1. பொய்கையாழ்வார் 2. பூதத்தாழ்வார் 3. பேயாழ்வார் 4. திருமழிசை ஆழ்வார் 5. நம்மாழ்வார் 6. திருமங்கையாழ்வார் 7. குலசேகர ஆழ்வார் 8. பெரியாழ்வார் 9. ஆண்டாள் நாச்சியார் 10. தொண்டரடிப் பொடியாழ்வார் 11. மதுரகவி ஆழ்வார் 12. திருப்பாணாழ்வார் இவர்களில் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் முதல் ஆழ்வார்கள் என்று குறிப்பிடப்படுகின்றனர். இவர்கள் காலத்தால் மற்றைய ஆழ்வார்களுக்கு முந்தியோர் ஆதலால் முதல் ஆழ்வார்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் மூவரும் சமகாலத்தினர் ஆவர். முதல் ஆழ்வார்கள் மூவரும் தாயின் வயிற்றில் பிறக்காமல் தானே தோன்றி இறைவனால் ஒரே நேரத்தில் ஆட்கொள்ளப்பட்டவர்கள் என்ற சிறப்பினை உடையவர்கள. மதுரகவி ஆழ்வார் மட்டும் இறைவனைப் பாடாமல் மற்றொரு ஆழ்வாரான‌ நம்மாழ்வாரைப் பற்றிய பாசுரங்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். பொய்கையாழ்வார் பொய்கையாழ்வார் பொய்கையாழ்வார் இவரே பன்னிரு ஆழ்வார்களில் முதல் ஆழ்வார் என்ற சிறப்பினைப் பெறுகின்றார். இவர் காஞ்சிபுரத்தில் திருவெஃகா என்றுமிடத்தில் உள்ள பொய்கையில் தோன்றியவர். பொய்கையில் தோன்றியதால் பொய்கையாழ்வார் என்று அழைக்கப்படுகிறார். இவரே திருமாலின் பத்து அவதாரங்களையும் முதலில் சிறப்பித்துப் பாடியவர் ஆவார். இவர் திருமாலின் கையிலுள்ள பாஞ்சஜன்யம் என்னும் சங்கின் அம்சமாகத் தோன்றியவர் என்று கருதப்படுகிறார். இவர் கவிஞர் தலைவன் என்று வைணவர்களால் சிறப்பிக்கப்படுகிறார். இவரால் அந்தாதியாகப் பாடப்பட்ட நூறு பாடல்களும் முதல் திருவந்தாதி எனப் போற்றப்படுகிறது. ஒரு சமயம் பொய்கையாழ்வார் மழையின் காரணமாக திருக்கோவிலூர் மிருகண்டு முனிவரது ஆசிரமத்துக்கு சென்றார். அங்கு பூதத்தாழ்வாரும் பேயாழ்வாரும் வந்தனர். இவர்கள் மூவரும் நெருக்கியடித்து நிற்க அங்கு திருமால் மூவருக்கும் காட்சியளித்தார். பொய்கையாழ்வார் 108 திவ்ய தேசங்களில் மொத்தம் 6 கோயில்களைப் பற்றி பிற ஆழ்வார்களுடன் இணைந்து மங்களாசனம் செய்துள்ளார். (மங்களாசனம் என்பது ஒரு கோவிலில் உள்ள இறைவனைப் போற்றிப் பாடல்கள் இயற்றுவது ஆகும்.) இவர் கிரக முனி, மகாதேவயார், தமிழ் தலைவன் ஆகிய வேறு பெயர்களால் சிறப்பிக்கப்படுகிறார். பூதத்தாழ்வார் பூதத்தாழ்வார் பூதத்தாழ்வார் முதல் ஆழ்வார்களில் இவர் இரண்டாமவர். இவர் மாமல்லபுரத்தில் உள்ள தலசயனப் பெருமாள் கோவிலில் மல்லிகை புதர்களுக்கிடையே நீலோத்பவ மலரின் நடுவில் தோன்றியவர் என்று கருதப்படுகிறது. இவர் திருமாலின் கையில் உள்ள கௌமோதகி என்ற கதையின் அம்சமாவார். உலக வாழ்க்கையில் இன்புறாமல் திருமாலிடத்தில் நீங்கா பக்தி கொண்டவர். திருக்கோவிலூர் மிருகண்டு முனிவர் ஆசிரமத்தில் பொய்கையாழ்வார் மற்றும் பேயாழ்வாருடன் இறைவனைத் தரிசித்த போது அவரைப் பற்றி நூறு பாடல்கள் பாடினார். அவை இரண்டாம் திருவந்தாதி எனப் போற்றப்படுகின்றன. இவர் பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 14 கோயில்களை மங்களாசனம் செய்துள்ளார். பேயாழ்வார் பேயாழ்வார் பேயாழ்வார் இவர் முதல் ஆழ்வார்களில் மூன்றாமவர் ஆவார். இவர் மயிலாப்பூரில் ஆதிகேசவ பெருமாள் கோவில் குளத்தில் செவ்வல்லி மலரில் தோன்றியவர் என்று கருதப்படுகிறது. இவர் திருமாலின் நந்தகம் என்னும் வாளின் அம்சமாகத் தோன்றியவர். இவர் திருமாலின் திருப்புகழை பாமாலையாக்கி தினமும் போற்றுவார். அப்போது அவர் கண்களில் ஆனந்த வெள்ளம் வழிந்தோடும். பாடல்கள் பாடும்போது ஆடிப் பாடி அழுது தொழுவார். இறைபக்தியினால் இவர் பித்தர் போலும் பேயர் போலும் திரிந்ததினால் பேயாழ்வார் என்றழைக்கப்பட்டார். திருக்கோவிலூர் மிருண்டு முனிவர் ஆசிரமத்தில் பொய்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வாருடன் இருந்த போது இவரே முதலில் இறைதரிசனம் கிடைக்கப் பெற்றார். இவர் தனியாக ஒரு கோவிலிலும், மற்ற ஆழ்வார்களுடன் இணைந்து 11 கோவில்களிலும் மங்களாசனம் செய்துள்ளார்.