பெரியாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். திருவில்லிபுத்தூரில் ஆனிமாதம் சுவாதி நட்சத்திரத்தில் கருடனின் அம்சமாக ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தவர். 'விஷ்ணு சித்தர்' என்பது இயற்பெயர். திருவில்லிபுத்தூரில் கோயில்கொண்டுள்ள வடபத்திரசாயி பெருமாளுக்கு அன்றலர்ந்த மலர்களை பறித்து பூமாலையாக சாற்றுவதை கைங்கர்யமாக கொண்டிருந்தார். ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாரான ஆண்டாளின் வளர்ப்பு தந்தையானவர். ஆண்டாளை திருவரங்கம் உறையும் அரங்கனுக்கு மணம்முடித்துக் கொடுத்ததன் மூலம் அரங்கனுக்கே மாமனார் ஆனார்.