முதல் ஆழ்வார்களில் இவர் இரண்டாமவர். இவர் மாமல்லபுரத்தில் உள்ள தலசயனப் பெருமாள் கோவிலில் மல்லிகை புதர்களுக்கிடையே நீலோத்பவ மலரின் நடுவில் தோன்றியவர் என்று கருதப்படுகிறது. இவர் திருமாலின் கையில் உள்ள கௌமோதகி என்ற கதையின் அம்சமாவார். உலக வாழ்க்கையில் இன்புறாமல் திருமாலிடத்தில் நீங்கா பக்தி கொண்டவர். திருக்கோவிலூர் மிருகண்டு முனிவர் ஆசிரமத்தில் பொய்கையாழ்வார் மற்றும் பேயாழ்வாருடன் இறைவனைத் தரிசித்த போது அவரைப் பற்றி நூறு பாடல்கள் பாடினார். அவை இரண்டாம் திருவந்தாதி எனப் போற்றப்படுகின்றன. இவர் பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 14 கோயில்களை மங்களாசனம் செய்துள்ளார்.