இராமானுஜரின் தமிழ்த்தொண்டு!


        

   இளையாழ்வார் என்ற திருப்பெயரைத் தாங்கிய இராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு தற்போது உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தமிழ்த் துறவி, விசிஸ்டாத்வைத வேதத் தத்துவத்தைப் படைத்த வடமொழி அறிஞராக மட்டுமே பலராலும் அறியப்படுகிறார். இவர் தமிழில் ஆழ்ந்த புலமையும் ஈடுபாடும் மிக்கவர் என்பது பலரும் அறிய வேண்டிய அரிய தகவலாகும்.
பல்லவர்களின் ஆட்சிமொழியாக வடமொழியே கோலோச்சி இருந்த அக்கால வேளையில் இராமானுஜரும் வடமொழியே பயில வேண்டியதாயிற்று. திருவரங்க விஜயத்துக்குப் பின்னரே தமிழிலும், தமிழ்ப் பாசுரங்களிலும் இராமானுஜருக்கு மிக்க ஈடுபாடாயிற்று. காலம் கடந்த தமிழ்மொழி ஈடுபட்டால், அவரால் தமிழில் எதையும் படைக்க இயலாமல் போய்விட்டது. எனினும், தமிழ் வளர்ச்சிக்காக அவர் செய்த தொண்டுகள் ஏராளம். எத்தருணங்களிளெல்லாம் அவரின் தமிழ்த்தொண்டு மிளிர்ந்தது என்பதைக் காண்போம்.

 

தமிழ்மறைஓதக்கட்டளையிட்டஇராமானுஜர்:

திருவரங்கக் கோயிலை சீர்திருத்த, ஆச்சாரியார் ஆளவந்தாரால் நியமிக்கப்பட்டவர் இராமானுஜர். இவர் நிர்வாகப் பொறுப்பேற்று கோயில் நிர்வாகத்தில் ஏராளமான சீர்திருத்தங்களை மேற்கொண்டு வந்தார். அவற்றுள் ஒன்று, திருவரங்கன் சந்நிதியில் (கருவறை) சம்ஸ்கிருத மந்திரங்களை உச்சரிப்பது போன்றே ஆழ்வார்களின் தமிழ்ப் பாசுரங்களையும் ஓதவேண்டும் என்ற நியதியைக் கொண்டு வந்து அதனைத் தொடரவும் கட்டளையிட்டார்.
திருப்பதி, ஸ்ரீகாகுளம், கூர்மம், மேலக்கோட்டை, வடநாடு மற்றும் தென்னாட்டு திவ்ய தேசங்களுக்கெல்லாம் சென்று தமிழ் மறையான ஆழ்வார்களின் தமிழ்ப் பாசுரங்களை இறைவன் சந்நிதியில் ஓதி வழிபட வாய்ப்பினை ஏற்படுத்தி வந்துள்ளார்.

 

தமிழில்பெயர்ச்சூட்டிதமிழ்பயிற்றுவித்தஇராமானுஜர் :

தனக்கு நிகராக வடமொழி வேத சாத்திரம் கற்றவர் எவருமில்லை என்ற செருக்கோடு "யக்ஞமூர்த்தி' என்ற துறவி ஒருவர் இராமானுஜரை வாதத்திற்கு அழைத்திருந்தார். வாதத்தில் இராமானுஜரே வென்றார். தோல்வியுற்ற யக்ஞமூர்த்தியை இராமானுஜர் தன் சீடராக்கிக் கொண்டார். யக்ஞமூர்த்தியின் திறமையை மெச்சி, யக்ஞமூர்த்தி என்ற பெயரை மாற்றி தூய தமிழில் அவருக்கு "அருளாளப்பெருமாள்' எனப் பெயரிட்டார். தமிழறியாத அவரிடம் தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைப் படித்துணர, தமிழைக் கற்றுக் கொடுத்து திருவாய்மொழியையும் பயிற்றுவித்தார். திருவாய்மொழியில் தேர்ச்சிபெற்ற அருளாளப் பெருமாள் ஞானசாரம், பிரம்மேயசாரம் ஆகிய இரு தமிழ் நூல்களைப் படைத்து இராமானுஜரின் கட்டளையை நிறைவேற்றினார்.
திராவிட வேதம் செய்த மாறனின் தமிழ்ப் பெயரை தன் சீடர் ஒருவருக்குச் சூட்ட வேண்டும் என விழைந்த இராமானுஜர், பிள்ளான் என்பவனுக்கு "திருக்குருகைப்பிரான்பிள்ளான்' எனும் தமிழ்ப் பெயரிட்டு மகிழ்ந்தார். திருக்குருகைப்பிரான்பிள்ளானைக் கொண்டு திருவாய்மொழிக்கு ஆறாயிரப்படியுரை என்ற சிறந்த விரிவுரையைத் தமிழில் எழுதவைத்த பெருமை இராமானுஜரையே சாரும்.

 

தமிழில்அருஞ்சொற்பொருள்தேடிதெளிவுபெற்றஇராமானுஜர் :

திருவரங்கத்தில் இருக்கும்போது, நாள்தோறும் மாலையில் ஆழ்வாரின் தமிழ்ப் பாசுரங்களுக்கு விளக்கவுரை ஆற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருநாள்,

""தெட்டப்பழம் சிதைந்து மதுரச்சொறியும்
காழ்ச்சீராம விண்ணகரே சேர்மினரே''

எனும் திருமங்கையாழ்வாரின் பாடலுக்கு விளக்கவுரை ஆற்றிக்கொண்டிருந்தார். அப்போது அப்பாசுரத்தில் "தெட்ட' என்ற சொல்லுக்கு இடமறிந்து பொருள் கூறி விளக்கிவிட்டார். எனினும், அது வழக்கத்தில் இல்லாத சொல்லாக இருப்பதாக உணர்ந்தார். திருமங்கையாழ்வார் பாடிய சீர்காழிக்கு திவ்ய யாத்திரை மேற்கொண்டு, அருஞ்சொற்பொருளைத் தேட முற்பட்டார். "கனிந்த' அல்லது "பக்குவப்பட்ட' என்ற சொல்லின் வட்டார வழக்காற்றுச் சொல்தான் "தெட்ட' என்பதாகும் என அறிந்து அனைவருக்கும் அதனைத் தெளிவுபடுத்தியுள்ளார். ஒரு சொல் புழக்கத்தில் உள்ளதா என்ற தேடலின் பின்னரே அச்சொல்லை ஏற்கின்ற அவரின் மொழிச்செறிவு அவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்று பகர்கிறது.

 

திருவாய்மொழியின்துணையோடுபாஷ்யம்படைத்தஇராமானுஜர் :

ஆளவந்தாரின் கட்டளைகளில் ஒன்றான ஸ்ரீபாஷ்யத்துக்கு உரையெழுத முற்பட்ட இராமானுஜர் ஓரிடத்தில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு பாஷ்யம் எழுதுவதை அப்படியே நிறுத்திவிட்டார். சிலமணி நேரம் யோசிக்கும்படி ஆகிவிட்டது. அவ்விடத்தே நம்மாழ்வாரின் தமிழ்ப் பாசுரமான,

""திடவிசும்பு, எரி, வளி, நீர், நிலம் இவை மிசைப்
படர் பொருள் முழுதும் ஆய் அவை தொறும்
உடல்மிசை உயிர் என சுரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை உண்ண சுரேன''

என்ற சொற்றொடர்தான் இராமானுஜரின் சந்தேகத்தைப் போக்க அடிப்படையாக அமைந்தது என்பது வைணவ அறிஞர்களின் கூற்றாகும்.

 

ஆழ்வார்களின்தமிழ்ப்பாசுரங்களின்சாரமேகத்யத்ரயம்:

வேதாந்த சங்கிரகம், ஸ்ரீபாஷ்யம், வேதாந்த தீபம், வேதாந்த சாரம், சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், வைகுண்ட கத்யம், நித்ய கிரந்தம், கீதா பாஷ்யம் முதலிய நூல்களை இராமானுஜர் படைத்துள்ளார். அவற்றுள் சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், வைகுண்ட சத்யம் ஆகிய மூன்று நூல்களையும் "கத்யத்ரயம்' என்று அழைப்பர். ஆழ்வார்களின் தமிழ்ப் பாசுரங்களில் உள்ள "சரணாகதி' தத்துவத்தைப் பறைசாற்றும் கருத்துகளையே கத்யத்திரயத்தில் சுட்டிக் காட்டியுள்ளார் என பூர்வாச்சார்யர்கள் கூறுகின்றனர்.

 

தமிழ்ப்பாசுரம்பாடிஉஞ்சவிருத்திசெய்தவர்:

திருவரங்கக் கோயிலில் மடாதிபதியாக இருந்தபோதும் கூட தாம் மேற்கொண்டிருந்த துறவு நெறிக்கு ஏற்ப, வீடு வீடாகச் சென்று பிட்சை எடுத்து தன் பசியைப் போக்கிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். துறவிகள் உஞ்சவிருத்தி செய்யும்போது உபநிடத சுலோகங்களைச் சொல்லிக்கொண்டே செல்வதுதான் வழக்கம். ஆனால், இராமானுஜரோ வழக்கத்திற்கு மாறாக தாம் உகந்த ஆண்டாளின் திருப்பாவை தமிழ்ப் பாசுரங்களைப் பாடிக்கொண்டே உஞ்சவிருத்திக்குச் செல்வார்.
ஒருநாள் அவ்வாறு பாடிக்கொண்டு செல்லும்போது திருப்பாவையில் பதினெட்டாவது பாசுரமான "உந்து மதகளிற்றன்' என்ற பாடலைப் பாடிக்கொண்டே பெரிய நம்பிகள் வீட்டு வாயிற்படியை நெருங்குகிறார்.

""செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்''

எனப் பாசுரத்தை முடிக்கும்போது, கதவின் தாழ்ப்பாளை நீக்கிக்
கொண்டு பெரிய நம்பிகளின் மகள் அத்துழாய் வெளிப்பட்டாள். நப்பின்னையே தாள் திறக்கிறார் என்ற உவகையோடு இராமானுஜர் அவள் பாதங்களில் தெண்டனிட்டு வணங்கினார். பெரிய நம்பிகள் மெய்சிலிர்த்து, ""ஜீயரே, நானும் திருப்பாவையைப் பலமுறை மொழிந்திருக்கிறேன். ஆனால், உம்மைப்போல் தமிழ்ப் பாசுரத்தைத் திளைத்து அனுபவித்தது இல்லையே'' என இராமானுஜரின் பக்தியை மெச்சி "திருப்பாவை ஜீயரே' எனப் பாராட்டி மகிழ்ந்தார்.
இராமானுஜரின் தமிழ்ப்பற்றை மெச்சி திருவாய்மொழி தனியனில் ,""தமிழ்மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல்தாய் சடகோபன்'', "" மொய்மில் வளர்த்த இதத்தாய் ராமானுஜன்'', ""மாறன் உரைசெய் தமிழ்மறை உரைத்தோன் வாழியே''என்றெல்லாம் இராமானுஜர் புகழப்படுவதிலிருந்து தமிழ் மொழிக்கும், நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கும் ஏற்றமளித்து, தமிழுக்கும், வைணவ நெறிக்கும் தொண்டாற்றியுள்ளார் என்பது தெளிவாக விளங்குகிறது

                                                           நன்றி - தினமணி -09th April 2017 -நல்லான் ஆதி. சீனிவாசன்