திருக்குறுங்குடி

தலபுராணம்:- திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகும். இத்தலத்தினைப் பற்றி திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் பாடியுள்ளார்கள். இத்தலத்தின் மூலவர் அழகிய நம்பிராயர் என்றும் தாயார் குறுங்குடிவல்லி நாச்சியார் என்றும் அழைக்கப்படுகிறார். தலச்சிறப்பு: மூலவர் நம்பிராயரின் வலது புறத்தில் அருகில் நின்றான் என்ற பெயரில் சிவபெருமான் சன்னதி அமைந்திருப்பது இத்தலத்தின் மிகச்சிறப்பம்சமாகும். நின்ற, அமர்ந்த, நடந்த, கிடந்த, இருந்த என ஐந்து நிலைகளிலும் பெருமாள் இக்கோயிலில் காட்சி தருகிறார்

அமைவிடம்

பெயர்: திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில் அமைவிடம் ஊர்: திருக்குறுங்குடி மாவட்டம்: திருநெல்வேலி மாநிலம்: தமிழ்நாடு நாடு: இந்தியா திக்குறுங்குடி -627 115 போன் :+91 4635 265 289 ,

தாயார் : ஸ்ரீ குறுங்குடிவல்லி நாச்சியார்
மூலவர் : சுந்தர பரிபூரணன் (நின்ற நம்பி)
உட்சவர்: --
மண்டலம் : பாண்டியநாடு
இடம் : திருநெல்வேலி
கடவுளர்கள்: திருக்குறுங்குடி,ஸ்ரீ குறுங்குடிவல்லி நாச்சியார்


திவ்யதேச பாசுரங்கள்

    813.   
    கரண்ட மாடு பொய்கையுள்*  கரும்பனைப் பெரும்பழம்,* 
    புரண்டு வீழ வாளைபாய்*  குறுங்குடி நெடுந்தகாய்,*
    திரண்ட தோள் இரணியன்*  சினங்கொள் ஆகம் ஒன்றையும்,* 
    இரண்டுகூறு செய்துகந்த*  சிங்கம் என்பது உன்னையே   (2)

        விளக்கம்  


    • நீர்க்காக்கைகள் ஸஞ்சரிக்கும் பொய்கையிலே பெரிய கரிய பனம்பழங்கள் விழுந்து புரள, அவற்றை நீர்க்காக்கையாக ப்ரமித்த வாளைகளானவை அஞ்சிப் பாயும்படியை அருளிச்செய்கிறார் ஒன்றரையடிகளில். மெய்யான நீர்க்காக்கையைக் கண்டு பயப்படாமல் போலியானதொன்றைக் கண்டு பயப்பட்டதாக அருளிச்செய்தவிது- திருக்குறுங்குடியிலுள்ளார் நம்பிபக்களில் ப்ரேமத்தின் மிகுதியால்* அஸ்தாநே பயசங்கை பண்ணும்படிக்கு ஸூசகம் என்க. நெடுந்தகாய்- ‘நெடுந்தகை’ என்பதன் விளி; பெருந்தன்மை பொருந்தினவனே! என்றபடி. இப்போதும் திருக்குறுங்குடிநம்பி ஸந்நிதியிலுள்ள புஷ்கரிணிக்குக் கரண்டமாடு பொய்கை என்று திருநாமம் வழங்கி வருதலும், ஆழ்வார் “கரும்பனைப் பெரும்பழம்” என்று பணித்தது பழுதாகாமைக்காக அப்புஷ்கரிணியின் கரையில் ஒரு திருப்பனைமரம் நம்பியின் கடாக்ஷமேதாரகமாக நாளைக்கும் வளர்ந்து வருதலும் அறியத்தக்கன. சினம் என்று விம்முதலுக்கும் வாசகமாகையாலே, சினங்கொள் ஆகம்- விம்ம வளர்ந்த சரீரம் என்ற என்றலுமாம்.


    1005.   
    ஏவினார் கலியார் நலிக என்று*  என்மேல் எங்ஙனே வாழும் ஆறு?*
    ஐவர் கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன்* குறுங்குடி நெடுங் கடல் வண்ணா!*
    பாவின் ஆர் இன் சொல் பல் மலர் கொண்டு*  உன் பாதமே பரவி நான் பணிந்து*
    என் நாவினால் வந்து உன் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்!

        விளக்கம்  



    1470.   
    மான் ஏய் நோக்கு நல்லார்*  மதிபோல் முகத்து உலவும்* 
    ஊன் ஏய் கண் வாளிக்கு*  உடைந்து ஓட்டந்து உன் அடைந்தேன்*
    கோனே! குறுங்குடியுள் குழகா!*  திருநறையூர்த் 
    தேனே*  வரு புனல் சூழ்*  திருவிண்ணகரானே      

        விளக்கம்  


    • பாம்புக்கு அஞ்சி ஓடிவந்து விழுந்தேனென்பாரைப் போலவும், ராமாஸ்த்ரத்துக்கு நடுங்கி வந்து விழுந்தேனென்பாரைப் போலவும் மாதர்களின் கண்களாகிற அம்புக்கு அஞ்சி வந்து நின்னடைந்தேனென்கிறார். ஸ்த்ரீகள் ஆண்கள் ஆகர்ஷித்துக்கொள்வது கடைக்கண்ணோக்கினாலாதலால் ‘மானேய் நோக்குநல்லார்’ என்றார். அவர்களைச் சிறப்பித்தும் அவர்களுடைய முகத்தை வர்ணித்தும் இவர் கூறுவது காமுகர்களின் ஸமாதியாலென்க. ஓட்டந்து ‘ஓட்டம் தந்து’ என்ற இரண்டு சொற்கள் ‘ஒட்டந்து’ என ஒரு சொல்லாயிற்று; சிதைவு; ஓடிவந்து என்றபடி. குழகன் மஹானாயிருக்கும் தனது மேன்மையைப் பாராமல் சிறியாரோடுங் கலந்துபழகுமவன் என்கை.


    1788.   
    தவள இளம்பிறை துள்ளும்முந்நீர்*  தண்மலர்த் தென்றலோடு அன்றில்ஒன்றி- 
    துவள,* என் நெஞ்சகம் சோர ஈரும்*  சூழ்பனி நாள் துயிலாது  இருப்பேன்,*
    இவளும் ஓர் பெண்கொடி என்று இரங்கார்*  என்நலம் ஐந்தும்முன் கொண்டுபோன*
    குவளை மலர்நிற வண்ணர்மன்னு*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்   (2)

        விளக்கம்  


    • நிர்மலமாய்ப் பருவம் நிரம்பாத சந்திரன் உதித்தவாறே அனைவரும் ஆநந்தமாகக் கண்டு கொண்டிருக்க, பாவியேனுக்குமாத்திரம் அவன் நெருப்பயிருப்பதே!; அனைவரும் கடற்கரையிலே போய் உலாவி ஆநந்தத்திற்குப் போக்குவிடாநிற்க, அதுவும் பாவியேனுக்கு விஷமாயிருப்பதே!; எல்லோரும் தென்றல் வீசுகிறவழியே எதிர்பார்த்து நின்று அது மேலேபட இன்பம் நுகராநிற்க, அது பாவியேனுக்கு மாத்திரம் தீக்கதுவினாற்போல் ஆவதே!: அன்றிற் பறவைகளின் தொனி அனைவர்க்கும் காணாம்ருதமாயிருக்க, வல்வினையேனுக்கு மாத்திரம் கொன்னவிலுமொஃகிற கொடிதாவதே!; கீழ்ச்சொன்னவை யெல்லாம் தனித்தனியே என்னுயிரை மாய்க்கப் போதுமானவை; அராஜகமான தேசத்தில் எதிரிகளடங்கலும் ஸங்கேதம் செய்துகொண்டு உள்ளே புகுந்து நாலு வாசலையும் பற்றிக் குறும்பு செய்யுமாபோலே இவை நான்கும் கூடித் திரண்டு ஒருமுகஞ்செய்து பண்ணுகிற ஹிம்ஸை பேச்சுக்கு நிலமன்று; ஏற்கனவே நாயகனைப் பிரிந்த ஆற்றாமையினால் தரைபற்றி யிருக்கிற என் நெஞ்சு துவளும்படியாகவும் சோரும்படியாகவும் ஈர்க்கின்றன. இக்காலமோ பனிகாலம்; “ஒழுகு நுண்பனிக் கொடுங்கிய பேடையை யடங்க அஞ்சிறை கோலித் தழுவு நள்ளிருள்” என்னும்படியே, அணைத்த நாயகனுடைய கைக்குள்ளே அடக்க வேண்டுமிக்காலத்திலே அவனைப் பிரிந்து பாதகவஸ்துக்களின் கையிலே அகப்பட்டுக் கண்ணுறங்காதே துடிக்கின்றேன்: ;சிறுமியான இவள் இவற்றுக்கெல்லாம் ஆடல்கொடுக்க வல்லளோ? நாம் இவளை இத்தனை கொலைபாதகர் கையில் காட்டிக்கொடுத்து வருத்துவது தருமமன்று; என்று அப்பெரியவருக்குத் தன்னடையே, திருவுள்ளத்தில் இரக்கம் பிறக்கவேணும்; என்னுடைய தெளர்ப்பாக்யத்தாலே அவர் இரக்கமற்றொழிந்தார் தம்மைப் பிரிந்து பத்துமாஸம் தரித்திருந்த பிராட்டியைப்போலே என்னையும் நினைத்தாரேயன்றி என்னுடைய வைலக்ஷண்ய மறிந்து இரங்குகின்றிலர் ஆயினுமாகுக; என்னுடைய நினைத்தாரேயன்றி என்னுடைய வைலக்ஷண்ய மறிந்து இரங்குகின்றிலர் ஆயினுமாகுக; என்னுடைய பஞ்சேந்திரியங்களின் வ்ருத்திகளையும் கொள்ளைகொண்டு அவர் சென்று வாழுமிடமான திருக்குறுங்குடியிலே என்னைக்கொண்டு சேர்த்து விடுங்கோள் என்றாளாயிற்று. என் நலமைந்தும் கொண்டுபோன = இதற்கு இரண்டு வகையான நிர்வாஹமுண்டு; -செவி வாய் கண் மூக்கு உடல் என்னும் ஐந்து உறுப்புகளின் அறிவையும் வேறு விஷயங்களுக்கு ஆக வொண்ணாதபடி செய்து. தனக்கே ஆக்கிக்கொண்டுபோன; (அதாவது) பகவத் விஷய வார்த்தைகள் தவிர வேறு எந்த வார்த்தையையும் காது க்ரஹிக்க வொண்ணாமலும், வேறு எந்த விஷயத்தையும் வாய்பேச வொண்ணாமலும், வேறு எதையும் கண் காண வொண்ணாமலும், அவனுடைய திருத்துழாய்ப் பரிமளந் தவிர வேறு எந்த மணத்தையும் மூக்கு க்ரஹிக்க வொண்ணாமலும், உடல் வேறு எந்த வஸ்துவையும் அணைய விரும்பாதபடியும் செய்துபோன என்றபடி, இனி இரண்டாவது நிர்வாஹமாவது-திருநெடுந்தாண்டகத்தில் “மின்னிலங்கு திருவுருவம் பெரியதோளும்” (25) என்கிற பாட்டில் “என் நலனும் என்நிறையும் என்சிந்தையும் என்வளையுங் கொண்டு என்னையாளுங் கொண்டு” என்று ஐந்து வஸ்த்துக்களைக் கொண்டதாகச் சொல்லிற்றே; அவை ஐந்து - என்று அமுதனார் நிர்வஹிப்பராம்.


    1789.   
    தாதுஅவிழ் மல்லிகை புல்லிவந்த*  தண்மதியின் இளவாடை இன்னே,* 
    ஊதை திரிதந்து உழறிஉண்ண*  ஓர்இரவும் உறங்கேன், உறங்கும்*  
    பேதையர் பேதைமையால் இருந்து*  பேசிலும் பேசுக பெய்வளையார்,*
    கோதை நறுமலர் மங்கைமார்வன்*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் 

        விளக்கம்  


    • மலர்கின்ற மல்லிகைப் பூவிலே தோய்ந்து அங்குள்ள மணம் முதலியவற்றை வாரிக்கொண்டு இங்கே வந்து வீசித் திரிகின்ற குளிர்காற்றானது என்னுயிரை முடிக்கப் பார்க்கின்றது; அதற்கு வருந்தி ஓரிரவும் கண்ணுறங்காதிருக்கின்றேன்; நாயகரைப் பிரிந்தாலுண்டாகும் வருத்தம் இப்படியிருக்குமென்று அடியோடு அறியாத சில பேதைப்பெண்கள் தாங்கள் போதுபோக்கற்று நம்மைப் பற்றிப் பழிப்பாக எது சொல்லினும் சொல்லுக; அவர்கள் பேச்சைக்கொண்டு நமக்கு என்ன? நம்முடைய ப்ராவணத்தைக் குற்றமாகக் கொள்ளாமல் நற்றமாகக் கொள்பவன் வாழ்கிற திருக்குறுங்குடியிலே என்னைக் கொண்டுபோய் விடுங்கள் என்கிறாள். இன்னே - இங்ஙனே என்றபடி; வாடை நலிகிறபடியை வாய்விட்டுச் சொல்லமாட்டாமையாலே ;இன்னே; என்னுமித்தனை. ஊதை - குளிர்காற்று; “ஊதையும் கூதையும் குளிர்பனிக்காற்று; என்பது நிகண்டு.


    1790.   
    காலையும் மாலை ஒத்துண்டு*  கங்குல் நாழிகை ஊழியில் நீண்டுஉலாவும்,*
    போல்வதுஓர் தன்மை புகுந்துநிற்கும்*  பொங்குஅழலே ஒக்கும் வாடை சொல்லில்*
    மாலவன் மாமணி வண்ணன் மாயம்*  மற்றும் உள அவை வந்திடாமுன்,* 
    கோலமயில் பயிலும் புறவின்*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.

        விளக்கம்  


    • இராப்பொழுதில் விரஹநோயால் வருந்தின பரகாலநாயகியை நோக்கித் தோழியானவள் ;நங்காள்! வருந்தாதே; சிறிது பல்லைக்கடித்துப் பொறுத்திரு; இதோ காலைப்பொழுது வந்திடும்; ஆறியிருக்கலாம்;, என்று சொல்ல, அதுகேட்ட நாயகி ;அந்தோ! எனக்குக் காலைப் பொழுதாகிலென்? மாலைப் பொழுதாகிலென்? இரண்டும் வாசியற்றிருக்கின்றது காண்; என்கிறாள். இதன் கருத்து யாதெனில்; திருக்குறளில்-1. “காலைக்குச் செய்த நன்றி என்கொலல்? எவன்கொல்யான், மாலைக்குச்செய்த பகை?” என்று ஒரு குறளுண்டு; அதாவது காலைப்பொழுது வருத்துகின்றதில்லை, மாலைப்பொழுது மாத்திரம் வருத்துகின்றது; இப்படியாகுமாறு நான் காலைக்கு என்ன வுபகாரம் செய்தேனோ? மாலைக்கு என்ன அபகாரம் செய்தேனோ? அறியேன் என்பதாம் 2. “காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி, மாலை மலருமிந்நோய்” என்று மற்றொரு குறளுமுண்டு; அதாவது- காமநோயாகிய பூ காலைப்பொழுதில் அரும்பிப் பகற்பொழுதெல்லாம் போரும்பாய் முதிர்ந்து மாலைப் பொழுதின்கண் மலராநிற்குமென்பதாம். காலை தூங்கியெழுந்த பொழுதாதலால் கனவிலே புணர்ந்தமை நினைந்து பொறுத்தல் பற்றி ;காலையரும்பி; என்றும், பிறகு பொழுது செல்லச் செல்ல அதுமறந்து பிரிவு நினைத்துப் பொறாளாதல்பற்றிப் ;பகலெல்லாம் போதாகி; என்றும், தம்தம் துணைகளை நினைத்து மீண்டுவந்து சேரும் விலங்குகளையும் மக்களையுமுண்டு தான் அக்காலத்து அநுபவித்த இன்பத்தை நினைந்து பொறாமைமிகுதல்பற்றி ;மாலைமலரும்; என்றும் சொல்லிற்று. ஆகவே, காலைப் பொழுது சிறிது ஆறியிருத்தற்கு உறுப்பானது என்று பொதுப்படையாகக் கொள்ளப்படும்; இக்கொள்கை கொண்டே தோழியானவள் ;நங்காய்! விரைவில் காலைப்பொழுது வந்திடும்; பொறுத்திரு; என்றாள். இப்பரகால நாயகிக்கு இரவில் சிறிதேனும் உறக்கமிருந்தாலன்றோ கனவு நோவும், அதில் எம்பெருமானோடு புணர்ந்தமை பாவிக்கவும், உறங்கி யெழுந்ததும் அதனை நினைந்து பொறுத்திருக்கவும் இவ்வழியாலே காலைப்பொழுதை ஆறியிருத்தற்குடலாகக் கொள்ளவும் ப்ரஸக்தியுண்டாகும்; இவை யொன்றுமில்லாமையாலே மாலையோடு காலையோடு வாசியில்லை என்றாளாயிற்று. தோழீ! உன் கருத்தின்படியே காலைப்பொழுதை ஆச்வாஸஹேதுவாகக் கொண்டாலும் அந்தப் பொழுது வருவதற்கு வழியொன்றுங்காணோமே; (கங்குல் நாழிகை ஊழியின் நீண்டுலாவும் போல்வதோர்தன்மை புகுந்து நிற்கும்) என்கிறாள். நாயகனைப் பிரிந்த நாயகி ஆற்றதாளாய் அவனில்லாமல் இரவுகழிக்க முடியாதபடியைச் சொல்லும்போது ;ஒரு நாழிகைப் பொழுதானது எத்தனையோ யுகமாய்ப் பெருகிச் செல்லுகின்றதே!; என்று இரவு நீட்டித்தலைச் சொல்லுவது வழக்கம்; அப்படியே இப்பரகால நாயகியும் சொல்லுகின்றாள் ; நாயக நாயகிகள் கூடியிருக்கும் காலத்தில், நீண்ட காலங்களும் ஒருநொடிப் பொழுதாய்க் கழிந்து விடுவமென்பதும், பிரிந்தகாலத்து ஒரு கணப்பொழுதும் பல்லூழியூழிகளாய்க் கழியுமென்பதும் அநுபவஸித்தம் ; “பலபலவூழிகளாயிடும், அன்றியோர் நாழிகையைப் பலபல கூறிட்ட கூறாயிடும்..... அன்பர் கூடிலும் நீங்கிலும்யாம் மெலிதும்” என்ற திருக்குறளையும், “காதலரொடு நாம் இன்புற்ற முன்னாட்களில் குறியவாய், அவர் பிரிவாற்றேமாகின்ற இந்நாள்களிலே நெடியவாய்ச் செல்கின்ற கங்குல்கள்” என்ற அதன் உரையையும் இங்கு உணர்க. நாழிகை - ;நாகொ;; என்னும் வடமொழியின் திரிபு. ஊழியின் நீண்டுலாவும் போல்வதோர்தன்மை புகுந்து நிற்கும் - ஊழிப்பொழுது தான் மிகநீண்டதென்று கேள்விப்பட்டிருந்தேன் ; அதிற்காட்டிலும் நீண்டது போலிருக்கின்றதென்கை. மாயவன் மாமணிவண்ணன் மாயம் மற்றுமுள ஸ்ரீ நம்மை மாய்ப்பதற்கு அவன் பலபல மாயங்களைப் படைத்து வைத்திருக்கிறான்; இராப்பொழுது, வாடை என்ற இவ்வளவேயல்ல; அன்றில், தென்றல், கடலோசை, குழலோசை, திங்களம்பிள்ளை என்றாற்போலே மற்றும் பல மாயங்களையும் படைத்திருக்கிறான்; அவையும் நம்மை முடிக்கத் தலைநாட்டுக்கு முன்னமே இவையெல்லாம் நமக்கு அநுகூலமாம்படியான இடத்திலே என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்திடுங்களென்றாளாயிற்று.


    1791.   
    கருமணி பூண்டு வெண்நாகுஅணைந்து*  கார்இமில் ஏற்றுஅணர் தாழ்ந்துஉலாவும்,*
    ஒருமணி ஓசை என் உள்ளம் தள்ள*  ஓர் இரவும் உறங்காது இருப்பேன்,*
    பெருமணி வானவர் உச்சிவைத்த*  பேர்அருளாளன் பெருமைபேசி,* 
    குருமணி நீர்கொழிக்கும் புறவின்*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.  

        விளக்கம்  


    • மாட்டின் கழுத்துமணியோசை செவிப்பட்டு ஆற்றாத தலைவி உரைக்கும் பாசுரமிது. மாட்டின் மணியோசை மாலைப்பொழுதில் (ஸாயம் ஸந்தியாஸமயத்தில்) அன்றே செவிப்படும் ; கீழ்ப்பாட்டில் “கங்குல் நாழிகை ஊழியின் நீண்டுலாவும்; என்று நடுநிசியின் துயரந் தோற்றச் சொல்லிவைத்து இப்பாட்டில் ஸாயங்காலத்துத் துயரம் சொல்லுவது பொருந்துமோ? என்று சங்கிக்க வேண்டா; பிரிவாற்றமையைத் தெஜீவிப்பது மாத்திரமே இங்கு விவக்ஷிதமாதலால். வயல்களில் மேய்ந்து, மீண்டு ஊர்புகுகின்ற மாடுகளின் கழுத்தில் தொங்கும் மணிகளின் ஒலி விரஹித்ரிகளின் செவியிற்பட்டவாறே ;அந்தோ! பகற்பொழுது கழிந்திட்டதே; இராப்பொழுது அணுகிற்றே, இன்னமும் காதலரைக் காணோமே; என்று வருத்தமுண்டாகும்; அதுவே இப்பாட்டின் முன்னடிகளிற் கூறப்படுகின்றது. சேக்களும் நாகுகளும் கூட்டமாய்க் கலந்து வரும்போது சேக்கள் நாகுகளோடே அணைந்து மேல்விழ, நாகுகள் இறாய்க்க, அதுகண்டு ஏற்கனவே ஸம்ச்லேஷ காலங்களில் நாயகன் மேல்விழவும், நாயகியாகிய தான் ஸ்த்ரித்வத்தாலே இறாய்க்கவுமான ஸம்பவங்கள் நினைவுக்கு வந்து அதனாலும் வருத்தம் மிகுகிறபடியை வெண்ணாகணைந்து; என்றதனால் தெஜீவித்தபடி. “வெண்ணா கணைந்த காரிமிலேற்றணர் தாழ்ந்துலாவும் ஒருமணியோசை யென்னுள்ளந்தள்ள; என்றால் போதுமே, முதலில் “கருமணிபூண்டு” என்றது எதுக்கு? என்னில்; மணியின் கொடுமை சொல்லுவித்ததினை. ;அணர் எனினும் ;அணர் எனினும் ஒக்கும் ; “இடவணரை யிடத்தோளொடு; என்றும் “இருந்தார் நடுவே சென்றணார்சொறிய” என்றுமுள்ள பெரியாழ்வார் பிரயோகங்களும் காண்க. மூன்றாமடியின் முடிவில் “பேசி” என்றும் “பேச” என்றும் பாடபேதமுண்டு; போருளாளன் பெருமைபேசி ஓரிரவு முறங்காதிருப்பேன்; என்று கீழோடே அந்வயிக்கவுமாம் ; போருளாளன் பெருமை பேசிக் குறுங்குடிக்கே யென்னையுய்த்திடுமின்; என்று மேலோடே அந்வயிக்கவுமாம். ;பேச; என்னும் பாடத்திலும் இங்ஙனே இரண்டு வகையான அந்வயங்களும் கூடும்:


    1792.   
    திண்திமில் ஏற்றின் மணியும்*  ஆயன் தீம்குழல் ஒசையும் தென்றலோடு,*
    கொண்டதுஓர் மாலையும் அந்தி ஈன்ற*  கோல இளம்பிறையோடு கூடி,*
    பண்டைய அல்ல இவை நமக்கு*  பாவியேன் ஆவியை வாட்டம் செய்யும்,* 
    கொண்டல் மணிநிற வண்ணர் மன்னு*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.

        விளக்கம்  


    • மாட்டின் மணியோசை, தென்றல்காற்று, மாலைப்பொழுது, இளம்பிறை ஆகிய இவை பலகாலும் நம்மை வருத்தியிருந்தாலும் இப்போது வருத்துகிறபடி இதற்கு முன்பு ஒருநாளுமில்லை; இவை ஒவ்வொன்றும் தனித்தனியே கொலைசெய்யப் போதுமானவை; கூட்டமாகக் கூடி வந்து நலிகிற இந்நாள் அந்தோ! பாதை பொறுக்கப் போகின்றதில்லை; ஸாதாரண விஷயங்களை ஆசைப்படாதே * உயர்வற வுயர்நலமுடையவனாய் அயர்வறுமரர்களதிபதியானவனை ஆசைப்படும்படியான பாவத்தைப் பண்ணின என்னுடைய ஆவி இனித் தரிக்கவிரகில்லை; நான் வாழவேண்டில் திருக்குறுங்குடியில் என்னைக் கொண்டுபோய்ச் சேர்ந்திடுங்கள்; அங்கே எழுந்தருளியிருக்கின்ற கொண்டல் மணிநிறவண்ணரைக் கண்டவாறே என்வாட்டமெல்லாம் தீரும்; மேகத்தையும் மணியை யுங்கண்ட பின்பும் வாட்டம் நிற்குமோ? ஆகையாலே பாதகவஸ்துக்களின்கையிலே அகப்பட்டு நான் நலிவுபடாதே இவையெல்லாம் எனக்கு அநுகூலங்களாகப் பெறும் தேச விஷேயத்திலே என்னைக் கொண்டுபோய் விடுங்கள் என்றாளாயிற்று. ;இமில்; எனினும் ;திமில்; எனினும் மாட்டின் முசுப்பு. ஆயன் தீங்குழலோசை = ஸாதாரணமான இடையார் ஊதும் புல்லாங்குழலோசையும் கோபாலக்ருஷ்ணனுடைய குழலோசையை நினைப்பூட்டி வருத்துமென்க. தீம்-இனிமை. கொண்டதோர் மாலை = ;இன்று இவளை முடித்தே விடுவது, என்னுங்கோட்பாடுடைய மாலைப்பொழுது,


    1793.   
    எல்லியும் நன்பகலும் இருந்தே*  ஏசிலும் ஏசுக ஏந்திழையார்,* 
    நல்லர் அவர் திறம் நாம்அறியோம்,*  நாண்மடம் அச்சம் நமக்குஇங்குஇல்லை*
    வல்லன சொல்லி மகிழ்வரேலும்*   மாமணி வண்ணரை நாம்மறவோம்,* 
    கொல்லை வளர் இளமுல்லை புல்கு*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின். 

        விளக்கம்  


    • ஊர்ப்பெண்டுகள் இரவும் பகலும் வேறு போதுபோக்கற்று எனது நிகழ்ச்சியைப் பற்றியே வம்புகள் பேசிப் பழிகூறினும் கூறுக; அவர்களுக்கும் நமக்கும் என்ன சேர்த்தியுண்டு? அவர்களுடைய வகுப்பு வேறு, நம்முடைய வகுப்பு வேறு; நாமோ விரஹத்தாலே உடலிளைத்து வளையிழந்து வருந்துகின்றோம்; அவர்களோ ஏந்திழையார் - ஆபரணங்களைச் சுமந்துகொண்டிருக்க வல்லவர்கள். நாம் உற்ற விஷயத்தை அவர்கள் கனவிலும் கண்டறியார்கள்; தத்தம் நாயகரைப் பிரிந்துமறியார்கள்; ஆகவே அவர்கள் பாக்யவதிகள்; அன்னவர்கள் எதைச்சொல்லிலும் சொல்லுக அவர்கள் சங்கதி நமக்குத் தெரியாது; அவர்கள் நாண் மடம் அச்சம் முதலிய பெண்மைக்குணங்களைக் காத்துக்கொண்டு நிலைகுலையாதே யிருக்கவல்லவர்கள்; நமக்கோ அவை அற்றுப்போயின நம்மைவிட்டுப் போனவன் அவற்றையும் கொள்ளைகொண்டு போயினான் போலும்; அவர்கள் தங்களாலான மட்டும் வசைகூறிச் சிரிக்கட்டும்; அவர்கள் தாம் என்னவென்று சொல்லப்போகிறார்கள்? ;அவனை மறந்திலன்; என்றுதானே சொல்லிச் சிரிக்கப்போகிறார்கள்; அப்படியே சொல்லிச் சிரிக்கட்டும்; அவனை நாம்மறக்கக் கடவோமல்லோம்; மறப்பு நம்கையிலே கிடக்கிறதோ? அவனுடைய மாமணிவண்ணவடிவு நம்மை மறக்கப்பண்ணுமோ? இவர்கள் ஏசுவதெல்லாம் இன்னமும் அவனையே ஸ்மாpப்பதற்கு எருவிட்டதாகுமத்தனைசிரிப்பார்கண்வட்டத்திலே நமக்கு என்ன காரியம்? மறக்கவொண்ணாத வடிவைக் கண்ணாரக்கண்டு அநுபவிக்கலாம்படியான திருக்குறுங்குடியிலே என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்திடுங்கள் என்றாளாயிற்று. நாண்மடம் அச்சம் = இவை பெண்டிர்க்கு உரிய குணங்கள் ; நாணமாவது-தகாத காரியத்தில் மனமொடுக்கி நிற்பது, மடமாவது-எல்லாமறிந்தும் அறியாதுபோலிருத்தல். அச்சமாவது-மிகச்சிறிய காரணத்தினாலும் மனம் நடுங்குதல். (‘பயிர்ப்பு’ என்பது நான்காவது குணம்; அதாவது-பரபுருஷர்களின் ஆடை முதலியன தம்மேற்பாட்டால் அருவருப்புக்கொள்வது.) நாண்மடமச்சம் நமக்கிங்கில்லை; என்றது-ப்ராவண்யம் மீதூர்ந்தபடியைச் சொன்னவாறு. வரம்புகடந்த அன்பின்மே லெல்லையில் நிற்பார்க்கு நாணம் முதலியவற்றைக் காத்துக்கொள்ளல் ஆகாதன்றோ. குறுங்குடிக்கு “இளமுல்லைபுல்கு” என்ற விசேஷணமிட்டதற்கு ஒரு கருத்துண்டு; கொடிகள் ஆதாரமற்றுத் தரைக்கிடை கிடக்கவேண்டாமல் கொள்கொம்பிலே படரும் தேசமன்றோ அது; அப்படியே எனக்கும் தரிப்புக்கிடைக்குமே அங்கு-என்றவாறு. “கோல்தேடியோடுங் கொழுந்ததே போன்றதே மால்தேடி யோடும் மனம்,”


    1794.   
    செங்கண் நெடிய கரியமேனித்*  தேவர் ஒருவர் இங்கே புகுந்து,*  என்-
    அங்கம் மெலிய வளைகழல*  ஆதுகொலோ? என்று சொன்னபின்னை,*
    ஐங்கணை வில்லிதன் ஆண்மை என்னோடு*  ஆடும் அதனை அறியமாட்டேன்,* 
    கொங்குஅலர் தண்பணை சூழ்புறவின்*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.   

        விளக்கம்  


    • அவருடைய கண்ணழகையும் கண்களின் பரப்பையும் என்ன சொல்லுவேன்!; கண் ஒரு தலையும் வடிவெல்லாம் ஒரு தலையுமானால் பின்னையும் கண்ணழகே விஞ்சியிருக்குங் காண்மின்; உள்ளுள்ள வாத்ஸயமெல்லாம் கண்ணிலே தோற்றும்; அக்கண்களுக்கு ஒருவாறு தப்பினாலும் வடிவில் குளிர்ச்சிக்குத் தப்பவொண்ணாது; (தேவர்) கண்ணழகும் வடிவழகும் பேசி முடித்தாலும் அவருடைய வைலக்ஷண்யம் வாசாமகோசரம் ; ‘அவரும் ஒருவரே!’ என்று வாய்வெருவ வேண்டும்படி யிருப்பவர் காண்மின். அப்படிப்பட்டவர் தம்முடைய வடிவழகையும் மேனமையையுங்கண்டு; இவையுடைய நம்மிடத்தே எல்லாரும் வரவேமேயன்றி நாம் ஓரிடத்துக்குப் போகலாமோ?; என்று பரத்வம் பாராட்டியிருக்க வேண்டியிருந்தும் அதுசெய்யாதே தம்முடைய எளிமைக் குணத்தையே விலைசெலுத்தி நானிருக்குமிடத்தே வந்து புகுந்தார் புகுந்தவர் ஒருவார்த்தை சொன்னார் அது சொல்லிப் பிரிந்துபோனது முதலாக மன்மதன் என்னைத் தாய் என்றும் பாராதே என்னிடத்தில் காட்டும் பராக்ரமங்களை நெஞ்சால் நினைக்குவும்கில்லேனானபின்பு வாய்கொண்டு எங்ஙனே சொல்லப்போகிறேன்? இந்த நலிவுக்கென்னை ஆளாக்காதே திருக்குறுங்குடியில் கொண்டுபோய்ச் சேர்த்திடுங்கள்-என்றாளாயிற்று. ஆது கொலோ வென்று- ‘அது’ என்பது ‘ஆது’ என நீண்டுகிடக்கிறது. கூடியிருந்த காலத்தில்; உன்னை ஒருநாளும் விட்டுப் பிரியமாட்டேன்; என்று காதலர்கூறும் வார்த்தையுண்டே; அதுவே இங்குலிவக்ஷிதம்; ஸம்ச்லேஷரஸம் அநுபவிக்குங்காலத்தில் ‘பிரியேன்’ என்று சொல்லுவதானது, திடீரென்று பிரிந்துபோனால் இறந்துபடுவள் என்று, உலகில் பிரிவு என்று ஒன்று உண்டென்று உபாயமாகப் பிரிவைப்பிரஸ்தாவித்துப் பிறகு பிரியவேணுமென்று கருதியேயாம். ஆகவே, ‘பிரியேன்’ என்ற வார்த்தையில் பிரிவை உணர்த்துவதே முக்கிய நோக்கமாகும் என்பது நாயகியின் கொள்கையாம் அந்த வார்த்தையையும் இப்போது தன்வாயாற் சொன்னால் வாய் வெந்துபோம் என்று நினைத்துப்போலும் ‘ஆதுகொலோ’ என்கிறாளிவள். ‘பிரியேன்’ என்கிற வார்த்தை செவிப்பட்டவளவிலேயே பிரிவு உண்டானதாகவே நிச்சயித்து மேனி மெலிந்து வளைகழலப் பெறுவது இயல்பாதலால்; அங்கம் மெலிய வளைகழல்; என்றது. ஐங்கணைவில்லி = ‘பஞ்சபாணன்’ என்பது மன்மதனுக்கு வழங்கும்பெயர் “மதனன் பஞ்ச பாணமாவன, முல்லை யசோகு முழுநீலம் சூதப்பூ, அல்லி முளரியோடைந்தென மொழிப.” என்ற திவாகதநிகண்டினால் பஞ்சபாண வகைப்பெயர் உணர்க. ஈற்றடிக்குப் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானம் காண்மின்:- “அவன்கையிலம்புதானே தாரகமான தேசத்திலே கொடுபோய்ப் பொகப்படப்பாருங்கோள். அவனோடே கூடினவாறே பூக்கொய்கையும் ஜலக்கிரிடை பண்ணுவதுமாய் தாரகமாமிறே.” என்று. (இதன் கருத்தாவது-) மன்மதன் இப்போது நம்மை வருத்துவது புஷ்யமயமான அம்புகளைக் கொண்டுதானே; ஆக அம்பாகிய புஷ்பங்கள் தாமே அவனுள்ளவிடத்தே நாம் சென்று சேர்ந்தபின்பு நமக்குப்பாதமாகாதே போக்யமாகுமன்றோ; இருவருமாய்ச்சேர்ந்து பூப்பறிக்கவும் ஜவக்ரிடைக்கு உபகரணமாகவும் பெற்று அந்தப்பூக்களே போக்யமாகுமே; ஆகையாலே அவ்விடத்திலே கொண்டுபோய்ச் சேர்த்திடுங்கள் என்பதாம் ஈற்றடியில் ‘பணை’ என்பதை ‘பண்ணை’ என்பதன் தொகுத்தலாகக்கொண்டு நீர்நிலையென்று பொருளுரைக்கவுமாம்.


    1795.   
    கேவலம் அன்று கடலின் ஓசை*  கேள்மின்கள் ஆயன்கை ஆம்பல்வந்து,*  என்-
    ஆவி அளவும் அணைந்து நிற்கும்*  அன்றியும் ஐந்து கணை தெரிந்திட்டு,* 
    ஏவலம் காட்டி இவன்ஒருவன்*  இப்படியே புகுந்து எய்திடாமுன்,* 
    கோவலர் கூத்தன் குறிப்புஅறிந்து*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின். 

        விளக்கம்  


    • இதுவரையிலும் கடலோசைகள் பலபல செவிப்பட்டிருந்தாலும் இப்போது செவிப்படும் கடலோசை அவைபோல்வதன்று; இதுஇன்று முடித்தே விடுமதாய்ப் பிரபலமாயிராநின்றதென்கை. ஸுக்ஜீவமஹாராஜா; ஸ்ரீராமபிரானை அண்டைகொண்டுவந்து வாலியின் மனைவாசலிலே சென்று அறை கூவினபோது அவருடைய மிடற்றோசைக்கு எப்படிப்பட்ட மிடுக்கு இருந்ததோ, அப்படிப்பட்ட மிடுக்கு இக்கடலோசைக்கு உண்டுபோலும். கடலோசை தனக்குப் பாதகாமாயிருப்பது போலவே மற்றையோர்க்கும் பாதகமாகவே யிருக்குமெனக் கருதி ‘கேண்மின்கள்’ என்கிறாள்; இக்கடலோசை உங்கள் காதில் படுகிறதில்லை போலும்; சிறிது உற்றுச் செவிகொடுத்துக் கேட்டுப்பாருங்கள்; இது படுத்துகிறபாடு உங்களுக்கே தெரியவரும் என்கிறாள் போலும். இஃது ஒன்றையோ? இடையன் ஊதுகிற புல்லாங்குழலின் ஓசையும் வந்துஎன் உயிரை முடிக்குமளவிலே நிற்கின்றது பாரீர் என்கிறாள் ஆயன் கையாம்பல் வந்து என்னாவியளவுமணைந்து நிற்கும் என்று. ஆம்பல்-இலைக்குழல். அதற்குமேலே, ‘இவள் கடலோசைக்கும் குழலோசைக்கும் முடிந்தாளாக்கூடாது, நம்முடைய கையிலுள்ள அம்புகளாலே முடிந்தாளகவேணும்’ என்று கருதிய * கருப்புவில் மலர்க்கணைக் காமனானவன் பெண்களை வதை செய்யத்தகாதே என்றும் நோக்காமல் கண்ணற்று முடிக்கவல்ல சில அம்புகளை ஆராய்ந்து தொடுத்துத் தன்னுடைய பிரயோகஸாமர்த்தியத்தைக் காட்டுதற்கு முன்னே என்னைத் திருக்குறுங்குடியிற் கொண்டு சேர்த்திடுங்கள் என்கிறாள். ஏவலம் = ஏ-எய்வதில், வலம்-வல்லமை என்றபடி. இவனொருவன் = பெண்களைக் கொலை செய்ய வல்லவர்களை எண்ணத் தொடங்கினால் இவனை யெண்ணிப் பின்னை யெண்ணுதற்கு வேறு ஆளில்லாத அதிவிதீயன் என்றபடி. ‘இப்படியேபுகுந்து’ என்றவிடத்திற்குப் பெரியவாச்சான் பிள்ளையருளிச் செய்வது;- “இதுக்கு இட்டுச் சொல்லலாவதொரு பாசுரமில்லை; புண்ணறைகளைக் காட்டுமித்தனை.” என்று “ஓர்மீனாய கொடி நெடுவேன் வலிசெய்ய மெலிவேனோ” என்றாள் கீழே திருவாலிப்பதிகத்திலும். ஆசை ஆதிகரித்துச் செல்லுவதையும், அதுகைகூடாமையாலே கஷ்டம் மீதூர்ந்து செல்லுவதையும் காமனுடைய ஹிம்ஸையாகச் சொல்லுவது மரபு. கோவலர்கூத்தன் குறிப்பறிந்து = தான் ஆடுகிற கூத்தின்; இனிமையாலே முரட்டாண்களான கோவலர்களையும் ஈடுபடுத்திக் கொள்பவன் என்பது ‘கோவலர்கூத்தன்’ என்றதன் உட்கருத்து. வன்னெஞ்சர்களான தன்னோடொத்த பருவத்துப் பிள்ளைகளைப் படுத்துகிறபாடே அதுவானால் அபலைகளான நமக்குச் சொல்ல வேணுமோ என்கை. அவனுடைய திருவுள்ளக் கருத்தையறிந்து அங்கே கொண்டு சேர்த்திடுங்கள் என்றதன் கருத்தாவது-அவன் வேணுமென்றிருந்தானாகில் அங்கே கொண்டுபோய்ப் பொகடுங்கோள்; வேண்டாவென்றிருந்தானாகில் இவ்விடத்தே முடித்திடுங்கோள் என்பதாம்.


    1796.   
    சோத்துஎன நின்று தொழ இரங்கான்*  தொல்நலம் கொண்டுஎனக்கு இன்றுதாறும்* 
    போர்ப்பதுஓர் பொன்படம் தந்துபோனான்*  போயின ஊர்அறியேன்,*  என்கொங்கை-
    மூத்திடுகின்றன*  மற்றுஅவன் தன் மொய்அகலம் அணை யாதுவாளா,* 
    கூத்தன் இமையவர்கோன் விரும்பும்*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.  (2)

        விளக்கம்  


    • சோத்தம்+என, சோத்தமென - என்றாக வேண்டுவது ‘சோத்தென’ என்றானது தொகுத்தல் விகாரம். அஞ்ஜலி பண்ணுமவர்கள் அதுக்கு அநுரூபமாகத் தாழ்ச்சி தோற்றச் சொல்லுவதொரு சப்தமாம் சோத்தமென்பது. ஸ்தோத்ரமென்னும் வடசொல்லின் திரிபு என்பாருமுண்டு. சோத்தம் என்பது கடைக்குறையாய்ச் ‘சேர்த்து’ என்று கிடக்கிற தென்பாருமுளர். அப்பெருமானை ஓயாதே அஞ்ஜலி பண்ணி வணங்கி வழிபட்டாலும் அவன் இரங்குவதில்லையே! இரக்கமென்பது குடிபெயர்த்துக் கொண்டு எங்குப் போயிற்றே தெரியவில்லையே யென்கிறாள். இரக்கமில்லாமையை விவரிக்கிறாள் மேலே தொன்னவங்கொண்டு இத்யாதியால், என்னுடைய பெண்மைக்கு உரிய நாண்மடமச்சம் முதலிய நலங்களைக் கவர்ந்துகொண்டுபோய் (அதாவது-என்னுடைய ஸர்வஸ்வத்தையுங் கொள்ளைகொண்டுபோய்) தான் எனக்கொரு பொன்மயமான பீதாம்பரம் போர்த்துப் போயினான் என்கிறாள். அதாவது என்னென்னில்; நாயகவிரஹத்தினால் மேனியில் தோன்றும் பசலைநிறமென்ற வைவர்ணியமானது பொன்னிறத்ததாக வருணிக்கப்படும்; அதைச் சொன்னபடி, “பொன்குலாம்பயலை பூத்தன மென்தோள்” என்றாள் திருவிடவெந்தைப் பதிகத்திலும். என்மேனி நிறத்தை யழித்துப்பிரிந்துபோனான் என்றவாறு. இன்றுதாறும் = இன்றுவரைக்கும், காறு என்பதுபோலத் தாறு என்பதும் எல்லைப் பொருளது. “தனையும் காறும் தாறும் துணையும், வரையும் பிரமாணமும் மாத்திரையும் மட்டும், அளவின் பெய ரென்ளறைந்தனர்புலவர்” என்பது பிங்கலநிகண்டு. போயினவூரறியேன் = போனானாகிலும் போன வூரின்பெயரைச் சொல்லிப் போனானாகில் ஒருவாறு ஆறியிருக்கலாமே; அதுதானுஞ் சொல்லாதொழிந்தானென்கிறாள், போனவூர்தெரியாதாகில் “குறுங்குடிக்கே யென்னையுய்த்திடுமின்” என்பானேன்? என்னில் ; அவன் கூடியிருந்த காலத்தில் பலகாலும் திருக்குறுங்குடியின் இனிமையை வாய்வெருவக்கேட்டிருந்தவளாகையாலே அவ்விடத்தே புகுந்திருக்கக்கூடுமோ வென்று கருதிச் சொல்லுகிறாள்போலும். அவன் போனது இன்னவூரென்று ஸ்பஷ்டமாகத் தெரியாதிருக்கும்போது இங்குத் தானே விழுந்து கிடந்தாலாகாதோ என்று சிலர்சொல்ல: ஐயோ! இம்முலைகள் படுத்துகிறபாடு பார்த்திலீர்களோ? இங்கே யிருக்கலாம்படியாயோ இவையிருப்பது! என்கிறாள் மூன்றாமடியால். “கொள்ளும்பயனொன்றில்லாத கொங்கைதன்னைக் கிழங்கோடும், அள்ளிப்பறித்திட்டு அவன் மாஜீவிலெறிந்து என்னழலைத் தீர்வேனே” என்றாள் ஆண்டாள் ; அவள் மெய்யே பெண்ணாய்ப் பிறந்தவளாகையாலே முலைபடைத்துப் படுகிற வருத்தமெல்லாந் தோற்ற அப்படி சொன்னாள்; அங்ஙனன்றிக்கே இவ்வாழ்வார்பாவநாப்ரகர்ஷத்தால் மாத்திரம் பெண்மையை ஏறிட்டுக்கொண்டவராதலால் அவ்வளவு ரோஷங்கொண்டு சொல்லமாட்டாமல் இங்ஙனே சொல்லுகிறரென்க.


    1797.   
    செற்றவன் தென்இலங்கை மலங்க*  தேவர்பிரான் திருமாமகளைப்,*
    பெற்றும் என் நெஞ்சகம் கோயில்கொண்ட*  பேர்அருளாளன் பெருமைபேசக்-
    கற்றவன்*  காமரு சீர்க் கலியன்*  கண்அகத்தும் மனத்தும் அகலாக்--
    கொற்றவன்,*  முற்று உலகுஆளி நின்ற*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.  (2)

        விளக்கம்  


    • மற்ற திருமொழிகளின் கடைப்பாசுரத்தில் பயனுரைத்துக் தலைக் கட்டுமாபோலே இப்பாசுரத்தில் இல்லை, ஆயினும் இதுகற்றார்க்குத் திருக்குறுங்குடி சேருவதே பயனாகும் என்று உணர்த்துகின்றமை உய்த்துணரத்தக்கது.


    1798.   
    அக்கும் புலியின்*  அதளும் உடையார்*  அவர்ஒருவர்
    பக்கம் நிற்க நின்ற*  பண்பர்ஊர் போலும்*
    தக்க மரத்தின் தாழ்சினைஏறி,*  தாய்வாயில்-
    கொக்கின் பிள்ளை*  வெள்இறவு உண்ணும் குறுங்குடியே.  (2)

        விளக்கம்  


    • எம்பெருமானுக்கு ஆகாதாரில்லையென்கிறார் முன்னடியால். ‘தானேஈச்வரன்’ என்று ;அபிமாநித்திருக்குமொருவனுக்கு முகங்கொடத்துக் கொண்டிருக்கிறவன் அநுகூலராய்ச் சென்று கிட்டுகிற நமக்கு முகந்தரச் சொல்லவேணுமோ? என்பது உட்கருத்து. பக்கம் நிற்க நின்ற பண்பர் - அப்படிப்பட்ட தாமஸனையும் தனது திருமேனியின் வலப்பக்கத்தில் இடங்கொடுத்து ஆதரிக்கும் சீலகுணமுடையவன் எம்பெருமான். திருவாய்மொழியில் “வலத்தனன் திரிபுரமெரித்தவன்“ (1-3-9) என்ற பாசுரத்தி்ன் வியாக்கியானத்தில் “பச்யைகாதசமே ருத்ராந்தக்ஷிணம் பார்ச்வமாச்ரிதாந்,“ என்ற மோக்ஷதர்மவசந்தை எடுத்துக் காட்டியிருப்பது இங்கே அநுஸந்தேயம். “தபஸா தோஷிதஸ் தேந விஷ்ணுநா ப்ரபவிஷ்ணுநா ப்ரபவிஷ்ணுநா -ஸ்வபார்ச்வே தக்ஷிணே சம்போ, நிவாஸ, பரிகல்பித,“ என்றொரு வசநமும் இருபத்தினாலாயிரப்படியிற் காண்பதுண்டு (சிவன் பண்ணின தவத்தினால் திருவுள்ளமுவந்த திருமால் அவனுக்குத் தனது வலவருகிலே வாஸஸ்தானம் அமைத்துக் கொடுத்தருளினன் - என்பது இதன் பொருள். (தக்க மரத்தின் இத்யாதி) இதற்கு இரண்டுவகையாகப் பொருள் கூறுவர், அவ்விடத்து எம்பெருமான் எப்படி ஸௌசீல்யகுணம் வாய்ந்தவனோ அப்படியே அங்குள்ள மரமும் சிறுவர்க்கும் தவழ்ந்து ஏறலாம்படி தாழ்ந்திருக்குமென்பதுபற்றித் “தக்கமரம்“ எனப்பட்டது, எம்பெருமானோடு தகுதியையுடைய மரம் (அதாவது -எம்பெருமானோடு குணஸாம்யமுடைய மரம்) என்றபடி. இது பட்டர் நிர்வஹிக்கும்படியாம். இங்ஙன்றியே, மேலே “நொக்கின் பிள்ளை“ என்கையாலே இங்குத் ‘தக்கமரம்’ என்றது -அந்தக் கொக்குகன்னோடு ஸமாநமான நாமமுடைய மரம் என்றபடியாய் மாமரத்தைச் சொல்லுகிறது என்னவுமாம். கொக்கு என்று மாமரத்துக்கு பெயர் “சூதஞ் சேதாரம் ஆம்பிரங் கொக்கு, தோமா மரத்திவை தேமாவாகும்“ என்பது திவாகர நிகண்டு, “எக்கலிடுநுண்மணல்மேல் எங்குங் கொக்கின் பழம் வீழ் கூடலூரே“ என்றார் கீழும். தாய்ப்பறவை நீர்நிலங்களிலலைந்து உணவு தேடிக்கொடுக்க, குட்டிப்பறவை மரக்கிளையிலிருந்துகொண்டு வாயவகினால் வாங்கியுண்ணுமிடமான திருக்குறுங்குடி யென்க.


    1799.   
    துங்கஆர் அரவத் திரைவந்து உலவ*  தொடுகடலுள்,-
    பொங்குஆர் அரவில் துயிலும்*  புனிதர்ஊர் போலும்,*
    செங்கால் அன்னம்*  திகழ்தண் பணையில் பெடையோடும்,*
    கொங்குஆர் கமலத்து*  அலரில் சேரும் குறுங்குடியே.

        விளக்கம்  


    • திருப்பாற்கடலிலே திருக்கண் வளர்ந்தருளுமழகு எளியர்க்குக் கிட்ட வொண்ணாதிருக்குமென்பது மாத்திரமேயல்லாமல் பிரமன் முதலியோர்க்குங்கூட இக்கரையிலே நின்று கூப்பிட வேண்டும்படியிருக்குமாதலால் அவ்வருமையைப் போக்கி எல்லார்க்குமெளியனாக எழுந்தருளியிருக்குமிடம் திருக்குறுங்குடி யென்கிறார். துங்கார் -துங்கம் என்பது வடசொல், உந்நதம் என்றபடி, ‘துங்கார்’ என்றது விகாரப் புணர்ச்சி. பொங்கு+பொங்கார், பொங்கு-முதனிலைத் தொழிற்பெயர், பொங்குதல் நிறைந்த அரவம் என்றபடி, எம்பெருமான் இடைவிடாது தன்மேல் சாய்ந்தருளப் பெறுவதனுலுண்டாகிய மகிழ்ச்சி மிக்கவன் என்றபடி.


    1800.   
    வாழக் கண்டோம்*  வந்து காண்மின் தொண்டீர்காள்,*
    கேழல் செங்கண்*  மாமுகில் வண்ணர் மருவும் ஊர்,*
    ஏழைச் செங்கால்*  இன்துணை நாரைக்கு இரை தேடி,* 
    கூழைப் பார்வைக்*  கார்வயல் மேயும் குறுங்குடியே. 

        விளக்கம்  


    • பாசுரந் தொடங்கும்போதே “வாழக்கண்டோம்“ என்று தொடங்குகிற ஆழ்வாருடைய களிப்பை என் சொல்லுவோம்!, கீழ்த்திருமொழியில் “என்னெஞ்சகம் சோரவீரும்“ என்றும் “ஓரிரவுமுறங்கா திருப்பேன்“ என்றும், “பாவியேனாவியை வாட்டஞ் செய்யும்“ என்றும் கூறின அலமாப்பெல்லாம் பகலவனைக் கண்ட பனிபோல் அகன்றொழிந்தமை தோன்ற “வாழக்கண்டோம்“ என்று களித்துப் பேசுகிறார். “ஒழிவில் காலமெல்லா முடனாய் மன்னி வழுவிலாவடிமை செய்ய வேண்டும் நாம்“ என்றாற்போலே தொண்டுபூண் டமுதமுண்பதில் பாரிப்புக் கொண்டிருக்குமவர்களே! நாம் ஸத்தை பெறுவதற்கு ஒரு நல்விரகு கண்டோம் திருக்குறுங்குடியை ஸேவிப்போம் வாருங்கள் என்கிறார். பிரளயப் பெருவெள்ளத்தில் அழுந்திப் பாசிதூர்த்துக்கிடந்த பார்மகட்காக வராஹமூர்த்தியாய்த் திருவவதரித்தவரும், அப்படி ஸம்ஸாரப் பெருவெற்றத்தில் அழுந்திக் கிடக்கின்ற நம்மையெல்லாம் கரை சேர்ப்பதற்காகக் கொண்ட கொந்தளிப்பு திருக்கண்களில் விளங்கும்படி யிருப்பவரும், கண்ட மாத்திரத்தில் தாபமெல்லாமாறும்படியாய்க் குளிர்ந்து முகில்போன்ற வடிவையுடையராயிருப்பவர் அவதாரம்போலே தீர்த்தம் பிரஸாதித்துப் போய்விடாதே நித்யவாஸம் பண்ணகிறவிடங் காண்மின் திருக்குறுங்குடி.


    1801.   
    சிரம்முன் ஐந்தும் ஐந்தும்*  சிந்தச் சென்று,*  அரக்கன்- 
    உரமும் கரமும் துணித்த*  உரவோன்ஊர் போலும்,*
    இரவும் பகலும்*  ஈன்தேன் முரல,*  மன்றுஎல்லாம்-
    குரவின் பூவே தான்*  மணம் நாறும் குறுங்குடியே.

        விளக்கம்  


    • சிரஸ், உரஸ் என்ற வடசொற்கள் மறையே சிரம், உரம் எனத் திரிந்தன. கரம் -தற்சம வடசொல். உரவோன் -உரமுடையவன், உரமாவது வலிமை. மன்று நாற்சந்தி.


    1802.   
    கவ்வைக் களிற்று மன்னர் மாள*  கலிமாத்தேர்-
    ஐவர்க்குஆய்,*  அன்றுஅமரில் உய்த்தான் ஊர்போலும்,*
    மைவைத்து இலங்கு*  கண்ணார் தங்கள் மொழிஒப்பான்,* 
    கொவ்வைக் கனிவாய்க்*  கிள்ளை பேசும் குறுங்குடியே.

        விளக்கம்  


    • பாரதப்போரில் பாண்டவர்களுக்குப் பக்ஷபாதியாயிருந்து எதிரரசர்கள் தொலையும்படியாகப் பார்த்தஸாரதியாய்த் தேரைநடத்தின பெருமான் அப்படிப்பட்ட ஆச்ரிதபக்ஷபாதம் இன்னமும் விளங்கத் திருக்கோயில் கொண்டிருக்குமிடம் திருக்குறுங்குடி. இத்தலம், கிளிகள் பெண்களைப்போலே அழகாகப் பேசும்படியான நிலைமை வாய்ந்தது. களிறு+மன்னர், களிற்று மன்னர் கவ்வை என்று இரைச்சலுக்குப் பெயர், பெரிய கோஷம் செய்யவல்ல யானைகளென்றபடி. கொவ்வைக் கனினாய்க்கிள்ளை -கிளிகளுக்குக் கோவைப்பழம் இனிய உணவாதலால் கொவ்வைக் கனியை வாயிலையுடைய கிளி என்று முரைக்கலா மென்ப.


    1803.   
    தீநீர் வண்ண*  மாமலர் கொண்டு விரை ஏந்தி,* 
    தூநீர் பரவித்*  தொழுமின் எழுமின் தொண்டீர்காள்!,*
    மாநீர் வண்ணர்*  மருவி உறையும்இடம்,*  வானில்-
    கூன்நீர் மதியை*  மாடம் தீண்டும் குறுங்குடியே..

        விளக்கம்  



    1804.   
    வல்லிச்சிறு நுண்இடையாரிடை*  நீர்வைக்கின்ற,*
    அல்லல் சிந்தை தவிர*  அடைமின் அடியீர்காள்!,*
    சொல்லில் திருவே அனையார் கனிவாய் எயிறுஒப்பான்,* 
    கொல்லை முல்லை*  மெல்அரும்பு ஈனும் குறுங்குடியே. 

        விளக்கம்  


    • எம்பெருமானுக்கே அடிமைப்பட்டிருக்கக் கூடிய ஸ்வரூபம் வாய்ந்த பாகவதர்களே!, விஷயாந்தரத்தில் துக்ககரமான சிந்தனையைத் தவிர்த்துத் திருக்குறுங்குடியை அடையப் பாருங்கள், பெண்களின் பற்களைப்போல முல்லையரும்புகள் உண்டாகப் பெற்ற தலம் இது. விஷய போகங்களைக் காறியுமிழ்ந்து பகவத் விஷயத்தைப் பற்றும்படி உபதேசிக்கிற ஆழ்வார்களை வருணித்துப் பேசுவது எதுக்காக? என்று கேட்ககூடும், இதற்கு நம் ஆசாரியர்கள் அருளிச் செய்வதாவது -உலகத்தில் வாக்குப்படைத்தவர்கள் பலவகைப்படுவர், சிலர் உள்ளதை உள்ளபடியே பேசுவர்கள், சிலர் சிறந்த விஷயத்தைப் பற்றிப் பேசத் தொடங்கினாலும் தங்களுடைய வாக்கின் திறமை போராமையினால் குறைபடிப் பேசுவர்கள், சிலர் நாவீறுடைமையினால் அற்பவிஷயங்களையும் கனக்கப்பேசுவர்கள், இப்படி பேச்சில் பலவகைகளுண்டு, பேசுகிறவர்களின் வாக்கின் பொக்கை அநுசரித்து விஷயங்கள் சிறுத்துப் பொவதம் பெருத்துப் பொவதுமுண்டு, திருமங்கையாழ்வாருடைய நாவீறு லோகவிலக்ஷணமாகையால் அற்பவிஷயங்களைப் பற்றிப் பேசும்போதும் பெருகாறுருடைய சொற்போக்கு. “வாணிலா முறுவல் சிறுநுதல் பெருந்தோள் மாதரார்வனமுலை“ என்றாப்போலே பெருத்திருக்கும், ஆகவே விஷயங்கள் அற்பமென்பதில் தடையில்லை, இவருடைய வாக்குத்தான் பரமகம்பீரமாகையால் அற்பவிஷயத்தையும் கனக்கப் பேசுகின்றது, என்றாம். கீழ் ஆறாம்பத்தில் “துறப்பேனல்லேன்“ என்னுந்திருமொழியில் “நான்தேந்து மென்முலையார் தடந்தோள் புணரின்ப பெள்ளத்தாழ்ந்தேன்“ என்ற நான்காம்பாட்டின் வியாக்கியானத்தில் இக்கரத்துப்படப் பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்துள்ளவை காண்க. வல்லி -வடசொல். அல்லல்சிந்தை -விஷயபோகங்கள் தற்காலத்தில் இன்பம் நுகர்வதுபோலிருந்தாலும் முடிவி்ல் துன்பமாகவே தலைக்கட்டுதல் பற்றி “அல்லல்சிந்தை“ எனப்பட்டது.


    1805.   
    நார்ஆர்இண்டை*  நாள்மலர் கொண்டு நம்தமர்காள்,* 
    ஆரா அன்போடு*  எம்பெருமான் ஊர்அடைமின்கள்,*
    தாரா ஆரும்*  வார்புனல் மேய்ந்து வயல்வாழும்*
    கூர்வாய் நாரை*  பேடையொடு ஆடும் குறுங்குடியே.

        விளக்கம்  


    • என்னைப்போலே பதியெபரவித்தொழுந் தொண்டர்களே! நல்ல புஷ்பங்களையும் தொடுத்த மாலைகளையும் கையிற்கொண்டு பரிபூர்ணபக்தியுடனே திருக்குறுங்குடியைச் சென்று சேருங்கள், அத்தலத்தில் அஃறிணைப் பொருள்களும் தம்தம் அபிமதம் பெற்றுக் களித்து வாழுமாதலால் நீங்களும் அங்குச் சென்று வேண்டினபடி கிஞ்சித்கரிக்கப் பெற்றுக் களித்து வாழலாமென்றாராயிற்று. தாரா - நீர்வாழ்பறவை.


    1806.   
    நின்ற வினையும் துயரும் கெட*  மாமலர்ஏந்தி,* 
    சென்று பணிமின் எழுமின்*  தொழுமின் தொண்டீர்காள்,*
    என்றும் இரவும் பகலும்*  வரிவண்டு இசைபாட,* 
    குன்றின் முல்லை*  மன்றிடை நாறும் குறுங்குடியே..

        விளக்கம்  



    1807.   
    சிலையால் இலங்கை செற்றான்*  மற்றுஓர் சினவேழம்,*
    கொலைஆர் கொம்பு கொண்டான் மேய*  குறுங்குடிமேல்,*
    கலைஆர் பனுவல் வல்லான்*  கலியன் ஒலிமாலை*
    நிலைஆர் பாடல் பாடப்*  பாவம் நில்லாவே  (2)

        விளக்கம்  


    • ராம க்ருஷ்ணாதி அவதாரங்கள் செய்தருளி விரோதி நிரஸநம் பண்ணின பெருமாள் இன்னமும் ஆச்ரித விரோதிகளைத் தொலைக்கும்பொருட்டு எழுந்தருளியிருக்குமிடமான திருக்குறுங்குடித் திருப்பதி விஷயமாகத் திருமங்கையாழ்வார்ருளிச் செய்த இத்திருமொழியைக் கற்று வல்லவர்கள் பாவம் தொலையப் பெறுவரென்று பயனுரைத்துத் தலைக்கட்டினாராயிற்று.


    2065.   
    முளைக் கதிரை குறுங்குடியுள் முகிலை* மூவா- மூவுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற* 
    அளப்பு அரிய ஆர் அமுதை அரங்கம் மேய- அந்தணனை* அந்தணர்-தம் சிந்தையானை* 
    விளக்கு ஒளியை மரகதத்தை திருத்தண்காவில்* வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு* 
    வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக! என்று* மடக் கிளியைக் கைகூப்பி வணங்கினாளே

        விளக்கம்  


    • சொல்லெடுத்துத் தன் கிளியைச் சொல்லே யென்று துணை முலைமேல் துளிசோரச் சோர்கின்றாளே“ என்றது கீழ்ப்பாட்டில். ‘இவள் தானே சில திருநாமங்களை முதலெடுத்துக் கொடுத்துச் சொல்லச் சொல்லுகையாலே சொன்னோம்; நாம் சொன்னதுவே இவளுக்கு மோஹ ஹேதுவாயிற்றே!‘ என்று கவலை கொண்ட கிளியானது, முன்பு இவள் தெளிந்திருந்த காலங்களில் தனக்கு உஜ்ஜீவநமாகக் கொண்டிருந்த திருநாமங்களைச் சொல்லுவோம் என்றெண்ணி அவற்றை அடையவே சொல்லக்கேட்டு உகந்த பரகாலநாயகி “வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக“ என்று சொல்லி அக்கிளியைக் கைக்கூப்பி வணங்கினமையைத் திருத்தாயார் சொல்லுகிற பாசுரமா யிருக்கிறது. முளைக்கதிர் என்றும் குறுங்குடியுள் முகில் என்றும், மூவாமூவுலகுங்கடந்தப்பால் முதலாய் நின்ற அளப்பரியவாரமுது என்றும் அரங்கமேய வந்தணன் என்றும் அந்தணர் தம் சிந்தையான் என்றும் விளக்கொளி என்றும் திருத்தண்காவில் மரகதமென்றும் வெஃகாவில் திருமாலென்றும் இவையாயிற்று இவள் கற்பித்து வைத்த திருநாமங்கள். இவற்றை அடையவே சொல்லத் தொடங்கிற்று மடக்கிளி. முளைக்கதிர் = சிற்றிஞ் சிறுகாலை உதிக்கின்ற ஸூரியனைப் போலே கண்ணாலே முகந்து அநுபவிக்கலாம்படி யிருக்கிற திவ்யமங்கள விக்ரஹத்தை யுடையவன் என்றபடி. “ப்ரஸந்நாதித்யவர்ச்சஸம்“ என்றதுங் காண்க. தன்னை அடியிலே அவன் விஷயாந்தரங்களில் நின்று மீட்டதும் தன் பக்கலில் ருசியைப் பிறப்பித்தது வடிவைப் காட்டியாதலால் அதனையே கிளிக்கு முந்துற உபதேசித்து வைத்தாள் போலும். ‘முளைக்கதிர்‘ என்பதை வினைத்தொகையாகக் கொண்டால் ‘முளைக்கதிர்‘ என்று இயல்பாக வேண்டும்; தகரவொற்று இருப்பதனால் ‘முளைத்தலையுடைய கதிர்‘ என்று பொருள் கொள்ளவேணும்; அப்போது, முளை – முகனிலைத் தொழிற்பெயர். குறுங்குடியுள் முகில் = கீழ்ச்சொன்ன வடிவைப் பிரகாசித்தது சாஸ்திர முகத்தாலுமன்று, ஆசார்யோபதேசத்தாலுமன்று. திருக்குறுங்குடியிலேயாயிற்றுப் பிரகாசிப்பித்தது. இன்னமலையிலே மேகம் படிந்ததென்றால் மழைதப்பாதென்றிருக்குமாபோலே, திருக்குறுங்குடியிலே நின்றானென்றால் உலகமெல்லாம் க்ருதார்த்தமாம்படி யிருக்குமென்க. ஒருகால் தோன்றி வர்ஷித்துவிட்டு ஒழிந்துபோம் மேகம்போலன்றியே சாச்வதமாய் நிற்கும் மேகம் என்பதுதோன்ற ‘உள்முகில்‘ எனப்பட்டது. திருக்குறுங்குடியில் வந்து நின்றருளின சீலாதிகனுடைய அடிப்பாடு சொல்லுகிறது மூவா மூவுலகுமென்று தொடங்கி. பரமபதத்தில் நின்றும் திருக்குறுங்குடியிலே போந்தருளினான் ஆயிற்று. ‘மூவா மூவுலகுங் கடந்து‘ என்றது – பத்தாத்மாக்களென்றும் முக்தாத்மாக்களென்றும் நித்யாத்மாக்களென்றும் மூவகையாகச் சொல்லப்படுகின்ற ஆத்மவர்க்கங்களுக்கு எம்பெருமான் அவ்வருகுபட்டிருக்கின்றமையைச் சொன்னவாறு. மூவா என்றது ஒருகாலும் அழிவில்லாமையைச் சொன்னபடி. நித்ய முக்த்ர்களுக்குத் தான் அழிவு இல்லை; பத்தர்களெனப்படுகிற ஸம்ஸாரிகளுக்கு அழிவு உண்டே யென்று சிலர் சங்கிப்பர்கள்; ஆத்மாக்கள் கருமவசத்தால் பரிக்ரஹித்துக் கொள்ளுகிற சரீரங்களுக்கு அழிவுண்டேயன்றி ஆத்மாக்களுக்கு ஒரு போழ்தும் அழிவில்லை யென்றுணர்க. முதலாய் நின்ற என்றது – உபயவிபூதிக்கும் ஸத்தாஹேதுவாய் நின்ற என்றபடி. நித்யஸூரிகளுக்கு போக்யதையாலே ஸத்தாஹேதுவாய், ஸம்ஸாரிகளுக்குக் கரணகளேபர ப்ரதாநத்தாலே ஸத்தாஹேதுவா யிருக்குமென்க. அளப்பரிய ஆரமுது = ஸ்வரூபரூப குணங்களால் எல்லை காண வெண்ணாதவனாய் அமுதக்கடல்போலே இனியனா யிருக்குமவன். அரங்கம் மேய் அந்தணன் – அந்த அமுதக்கடலில் நின்றும் ஒரு குமிழி புறப்பட்டு ஒரு தடாகத்திலே வந்து தேங்கினாற்போலேயாயிற்று திருவரங்கம் பெரியகோயிலிலே வந்து திருக்கண் வளர்ந்தருளுகிறபடி. அந்தண னென்றது பரிசுத்தனென்றபடி; தன் வடிவழகைக் காட்டி அஹங்காரமும் விஷயாந்தர ப்ராவணயமுமாகிற அசுத்தியைப் போக்கவல்ல சுத்தியை யுடையவனென்றவாறு. அந்தணர்தம் சிந்தையான் – “நின்ற தெந்தை யூரகத்து இருந்த தெந்தை பாடகத்து, அன்று வெஃகணைக் கிடந்தது என்னிலாத முன்னெலாம், என்று நான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன், நின்றது மிருந்ததும் கிடந்தது மென்னெஞ்சுகளே‘! என்கிறபடியே பரிசுத்தருடைய ஹ்ருதயத்திலே நித்யவாஸம் பண்ணுமவன். எம்பெருமானுக்கு, பரம பதத்திலும் திருப்பாற்கடலிலும் கோயில் திருமாலை பெருமாள் கோயில் முதலான உகந்தருளின விடங்களிலும் இருப்பதிற்காட்டிலும் மெய்யடியாருடைய ஹ்ருதய கமலத்திலே வாழ்வதே பரமோத்தேச்யமென்றும், ஸமயம்பார்த்து அன்பருடைய நெஞசிலே வந்து சேர்வதற்கதாகவே மற்றவிடங்களில் எம்பெருமான் தங்குகிறனென்றும், ஆகவே பரமபதம் முதலியவற்றில் வாஸம் உபாயமாய் பக்தருடைய ஹ்ருதயத்தில் வாஸமே புருஷார்த்தமாயிருக்குமென்றும், விடுமென்றும் உணர்க. விளக்கொளியை – விளக்கின ஒளியானது எப்படி வெளிச்சத்தை யுண்டாக்கிப் பதார்த்தங்களை விளங்கச்செய்யுமோ அப்படி ஸ்வஸ்வரூபம் ஜீவாத்மஸ்வரூபம் உபாயஸ்வரூபம் விரோதி ஸ்வரூபம் ஆகிற அர்த்த பஞ்சகத்தையும் தனக்கு விளங்கச் செய்தருளினவன் என்றவாறு. மேலே ‘திருத்தண்கா‘ என வருகையாலே இங்கு விளக்கொளியென்றது அத்தலத்து எம்பெருமானாகிய தீபப்ரகாசனை என்றுங் கொள்ளலாம்; திருத்தண்கா ‘விளக்ககொளி கோயில்‘ என்றே வழங்கப்பெறும். இத்தலத்துப் பெருமான் பண்டைக்காலத்தில் சயன திருக்கோலமாக எழுந்தருளி யிருந்ததாகப் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தினாலும் அரும்பதவுரையினாலும் மற்றும் சில சாதனங்களாலும் விளங்குகின்றது. திருத்தண்காவில் மரகதத்தை – இவ்விடத்துப் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்திகள் காண்மின்:- “அருமணவனானை என்னுமாபோலே திருத்தண்காவில் மரதகம் என்கிறார். இன்ன தீவிலேபட்ட ஆனையென்றால் விலக்ஷணமாயிருக்குமாபோலே திருத்தண்காவில் கண்வளர்ந்தருளுகிறவனுடைய வடிவென்றால் விலக்ஷணமாயிருக்கிறபடி. * பச்சைமா மலை போல் மேனி என்கிற வடிவையுடையவன். வடதேசத்தினின்றும் பெருமாளை யநுபவிக்க வருமவர்கள் இளைத்து விழுந்தவிடத்திலே அவர்களை எதிர்கொண்டு அநுபவிப்பிக்கக் கிடக்கிற கிடை.“ வெஃகாவில் திருமாலை-“வில்லறுத்து மெல்லியல்தோள் தோய்ந்தா யென்றும் வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே யென்றும்“ என்று பிராட்டியைத் திருமணம் புணர்ந்த மணக்கோலத்தோடே கூட இருவரும் வந்து கிடக்கிற கிடையாகக் கீழே அருளிச் செய்தாரிறே; திருவெஃகாவிலே வந்து திருக்கண் வளர்ந்தருளின பின்பு ச்ரியபதித்வம் நிறம் பெற்றபடி. ஆக இப்படிப்பட்ட திருநாமங்களை மடக்கிளி எடுத்துப் பாடினவளவிலே ஆனந்தமாகக் கேட்கலுற்ற என்மகளானவள் ‘கிளிப்பிள்ளாய்! உன்னை வளர்த்ப்ரயோஜனம் பெற்றேன்; ஆபத்துக்கு உதவுபனென்று பேர்பெற்ற அவன் ஆபத்தை விளைவித்துப்போனான், அந்தநிலைமையில் நீ உதவப்பெற்றாயே!, அருகேவந்திடாய்‘ என்று சொல்லி உபகாரஸ்மிருதி தோற்றக்கையெடுத்துக் கும்பிட்டாளென்றதாயிற்று. புத்திரனாகவுமாம், சிஷ்யனாகவுமாம், பகவத் விஷயத்திற்கு உசரத்துணையாகப் பெற்றால் கௌரவிக்கவேணும் என்னுமிடம் ஈற்றடியால் அறிவிக்கப்பட்டதாயிற்று. “கணபுரங்கைதொழும் பிள்ளையைப் பிள்ளையென்றெண்ணப் பெறுவரே“ என்றதும் நோக்குக.


    2774.   
    மின்இடையாள் நாயகனை விண்நகருள் பொன்மலையை,*
    பொன்னி மணிகொழிக்கும் பூங்குடந்தைப் போர்விடையை,*
    தென்னன் குறுங்குடியுள் செம்பவளக் குன்றினை,*
    மன்னிய தண்சேறை வள்ளலை, -மாமலர்மேல்-

        விளக்கம்  


    • விசேஷணங்களால் விபவாவதார சரித்திரங்களிற் சிலவற்றைப் பேசி இனி அர்ச்சாவதாரங்களிலுஞ் சிலவற்றை அநுசந்திக்க விரும்பித் திருவிண்ணகரிலே வாய்வைக்கிறார். பல திருப்பதிகளையும் பற்றி அருளிச் செய்துகொண்டு போகிற இக்கண்ணிகளில் “கோயில் திருமலைபெருமாள் கோயில்“ என்னும் அநாதி வ்யவஹாரத்திற்கு ஏற்ப, “மன்னுமரங்கத்தெம் மாமணியை“ என்றவளவில் ஒரு பகுதியாகவும் “மின்னி மழை தவழும் வேங்கடத்தெம் வித்தகனை“ என்ற வளவில் ஒரு பகுதியாகவும், “வெஃகாவிலுன்னிய யோகத்துறக்கத்தை“ என்றவளவில் ஒரு பகுதியாகவும், அதற்குமேல் வினைமுற்று வருமளவில் ஒரு பகுதியாகவும் பிரித்துக்கொண்டு உரையிடுகின்றோம். விண்ணகர் – ஒப்பிலியப்பன் ஸந்நிதி. “தன்னொப்பாரில்லப்பன்“ என்று நம்மாழ்வார்ருளிச் செயல் “ஒருவரையும் நின்னொப்பா ரொப்பிலா வென்னப்பா!“ (திருக்கண்ணப்புரத்துப் பாசுரத்தில்) என்றார் இத்திருமங்கையாழ்வாரும். உப்பிலியப்பன் என்கிற வ்யவஹாரம் ஸ்தர புராணத்தையடி யொற்றிய தென்பர். குடந்தை – குடமூக்கு என்றும் கும்பகோணமென்றும் வழங்கப்படும் தலம் குறுங்குடி – குறிகியவனான வரமநனது க்ஷேத்ரமாதலால் குறுங்குடியெனத் திருநாம்மாயிற்றென்பர். இத்தலத்தெம்பெருமான் ஸ்ரீ பாஷ்யகார்ர் பக்கலிலே சிஷ்யனாய் “நாமும் நம்மிராமாநுசனை யுடையோம்“ என்கையாலே வைஷ்ணவ நம்பியென்று திரநாமம் பெற்றனன். நம்மாழ்வார் திருவ்வதாரத்திற்குக் காரணமாயிருந்தவரும் இத்தத்து நம்பியே. சேறை – பஞ்சஸார க்ஷேத்ரமென வழங்கப்படும். ஆலி –எம்பெருமானைத் திருமகள் ஆலிங்கனஞ் செய்துகொண்ட திவ்யதேசமானது பற்றித் திருவாலியென வழங்கப்படுமென்பர், ஆலிங்கனம் என்பதன் ஏகதேசம் நாம்மாயிற்று. எவ்வுள் –எம்பெருமான் சாலிஹோத்ர மஹாமுனிக்கு ப்ரத்யக்ஷமாகி “வாஸம் பண்ணுவதற்குத் தருதியான உள் எவ்வுள்? என வினாவியதனால் இத்தலத்திற்குத் திருவெவ்வுளுரென்று திருநாம்மாயிற்றென்ப கிம்க்ருஹம் எனபர் வடமொழியில்


    2898.   
    நம்பியை*  தென் குறுங்குடி நின்ற,*  அச் 
    செம்பொனே திகழும்*  திரு மூர்த்தியை,*
    உம்பர் வானவர்*  ஆதி அம் சோதியை,* 
    எம் பிரானை*  என் சொல்லி மறப்பனோ?

        விளக்கம்  


    • அழகிய திருக்குறுங்குடி என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியை, அந்தச் செம்பொன் போன்று விளங்குகிற அழகிய திருமேனியையுடையவனை, பரமபதத்தில் எழுந்தருளியிருக்கின்ற நித்தியசூரிகளுடைய தொழில்கட்கெல்லாம் காரணனான பரஞ்சோதியை, எனக்கு உதவியைச் செய்தவனை நான் என்ன காரணத்தைக் கூறி மறப்பேன்?


    3102.   
    உளனாகவே எண்ணி*  தன்னை ஒன்றாக தன் செல்வத்தை* 
    வளனா மதிக்கும்*  இம் மானிடத்தைக் கவி பாடி என்,*
    குளன் ஆர் கழனிசூழ்*  கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே,* 
    உளனாய எந்தையை*  எந்தை பெம்மானை ஒழியவே? 

        விளக்கம்  


    • உண்மையாயும் பர்பூர்ணமாயுமுள்ள கல்யாணகுண சும்பத்துக்களை யுடையனாயிருந்துள்ள எம்பெருமானை விட்டு அஸத்கல்பராய் அற்பு ஸம்பத்துகளையுடையரானவர்களைக் குறித்துக் கவி பாடுவாரை நிந்திக்கிறார். எல்லையில்லாத பெருஞ் செல்வத்தையுடைவனாய் * உயர்வற வுயர்நலமுடையனாயிருந்த எம்பெருமானை யொழிய, தன்னையும் ஒரு வஸ்துவாகப் பார்த்துத் தன் செல்வத்தையும், ஒரு செல்வமாக மத்திருக்கிற இவ்வற்ப மனிதர்களைக் கவிபாடி என்ன பலன் பெறலாகுமென்று கர்ஹிக்கிறார். உளனாகவேயெண்ணி = பிறருடைய கவிக்கு விஷயபூதரான அற்பமசர்களில் எண்ணத்தைக் கூறுவது இது. “அஸந்நேவ ஸ பவதி” என்னுங்கணக்கிலே, இல்லையென்னலாம்படி யிருக்கிற தங்களை உள்ளவர்களாக ப்ரமித்திருக்கின்றார்களாம். ப்ரஹ்மஜ்ஞானமுண்டாகிலன்றோ “ஸந்தமேநம் ததோ விது” என்கிறபடியே உள்ளவர்களாவர். அப்படிப்பட்டவர்கள் பாகவதோத்தமர்களாதலால் அன்னவர்களைத் துதிப்பது ஸ்வரூபாநுரூபமேயாகும்; அது நரஸ்துதிக் குற்றத்தின்பாற் படாதென்றுணர்க. தன் செல்வத்தை வளனாமதிக்கும் = தானே இல்லையாம்போது தன்செல்வமென்று ஒன்றுண்டோ? இல்லாத செல்வத்தை இருப்பதாக நினைத்ததுமல்லாமல் அது தன்னைப்போரப் பொலியவும் நினைப்பதே! என்று கர்ஹிக்கிறபடி வளன்- வளம்; மகரனகரப்போலி.


    3277.   
    எங்ஙனேயோ அன்னைமீர்காள்!*  என்னை முனிவது நீர்?* 
    நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்* 
    சங்கினோடும் நேமியோடும்*  தாமரைக் கண்களோடும்* 
    செங்கனி வாய் ஒன்றினோடும்*  செல்கின்றது என்நெஞ்சமே*. (2)     

        விளக்கம்  


    • (எங்ஙனேயோ) தாய்மார்களே! என்னை நீங்கள் சீறுவது எதற்கு? சீறிப் பயனென்? வேறுமாகில் திருக்குறுங்குடி நம்பியின் வடிவழகைச் சீறுங்கோள்! ‘எதற்கு நீ இப்படிப்பட்ட வடிவழகு கொண்டாய்?” என்று நம்பியைச் சீறில் சிறுமந்தனையொழிய என்னைச் சீறுவது முறைமையன்று. நான் ஏதேனும் ஒரு காமருஷனை கண்டு மோஹித்துப் படுகிறோனோ? அழகுதானே உருக்கொண்ட திருகுருங்குடி நம்பியையன்றோ நான் ஸேவிக்கப் பெற்றது. அப்படி ஸேவிக்கப்பெற்ற க்ஷணமே தொடங்கிச் சங்கும் சக்கரமும் செந்தாமரைக் கண்களும் செங்கனி வாயுமே என் முன்னே தோன்றாநிற்க, நான் அவற்றை வாய் பெவருவாதே பின்னை எதை வாய்பெருவுவேன்? ஆதலால் என்னை நீங்கள் முனிவது முறைமையன்று என்றாளாயிற்று. திருக்குறுங்குடி = இது பாண்டி நாட்டுத் திருப்பதிகள் பதினெட்டில் ஒன்று. குறுகியவனான வாமனனது க்ஷேத்ரமாதலால் இத்தலத்திற்குக் குறுங்குடியென்று திருநாமமாயிற்றென்பர். இத்தலத்திலுள்ள எம்பெருமான்களுள் ஒரு எம்பெருமான் ஸ்ரீபாஷ்யகாரர் பக்கலிலே திருமண்காப்பு சாத்திக்கொண்டு வேதாந்தார்ததமுங்கேட்டு சிஷ்யனாய் ‘நாமும் நம்பிராமானுசனையுடையோம்’ என் கையாலே அப்பெருமாளுக்கு வைஷ்ணவாம்பியென்று திருநாமம். ஆனது பற்றியே ‘வைஷ்ணவவாமண க்ஷேத்ரம்’ என்றும் இத்தலம் வழங்கப்படும். ஆசார்யஹருதயத்தில், “வைஷ்ணவவாகமத்தில்- நிறைந்த நீலமேனியின் ருசி ஜுக விபவஸாவண்யம் பூர்ணம்” என்றருளிச் செய்தலும், அங்கு மணவாளமா முனிகள் வியாக்கியானத்தில்- “வாமகாவதாரத்தில் தன்னுடைமை பெறுகைக்கு அர்த்தியானாய்ப்போலே அர்த்தியாம் நின்று பாஷ்யகாரர் பக்கலிலே வேதாந்தார்த்தம் கேட்டு சிஷ்யனாய் “நாமும் பமிராமானுசனையுடையோம் என்கையாலே ஸ்ரீவைஷ்ணன் நம்பியென்று திருநாமம். வாமாவதாராம்சமாக புராணஸிதத்தராயிருக்கிற நம்புடைய திருப்பதியென்கை. அன்றிக்கே *அறியச் கற்றுவல்லார் வைட்டணவர் என்று இத் திவ்யதேச விஷயமான திருவாய்மொழியைக் கற்றவர்கள் வைஷ்ணவராவென்கையாலே வைஷ்ணவர்களுடையதாய் ஸாமாக்ஷேத்ரரமாயிருக்கிற கோத்திலென்னவாம்” என்றருளிச் செய்வதும் இங்கு அனுஸாதேமம். நம்மாழ்வாருடைய திருவதாரத்திற்குக் காரணமாயிருந்தவரும் இத்தலத்து நம்பியே.


    3278.   
    என் நெஞ்சினால் நோக்கிக் காணீர்*  என்னை முனியாதே 
    தென் நன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்*
    மின்னு நூலும் குண்டலமும்*  மார்பில் திருமறுவும்* 
    மன்னு பூணும் நான்கு தோளும்*  வந்து எங்கும் நின்றிடுமே*.  

        விளக்கம்  


    • (என்னெஞ்சினால்) ‘பெண்ணே! திருக்குறுங்குடி நம்பியை நீ மாத்திரையோ கண்டது; நாங்கள் கண்டதில்லையோ? நாங்களும் ஸேவித்தே யிருக்கிறோம்; ஆனாலும் உனக்கு இப்படிப்பட்ட முறைகேடு ஆகாது’ என்று தாய்மார் சொல்ல, அதற்குத் தலைமகள் கூறுகின்றாள். “என்னெஞ்சினால் நோக்கிக் காணீர்” என்று. என்னெஞ்சை இரவலாக வாங்கி வைத்துக்கொண்டு நீங்கள் நம்பியை ஸேவித்தீர்களாகில் இங்ஙனே என்னைப் பொடியமாட்டீர்களென்கை. நீ கண்ட காட்சிக்கு வாசியென்? என்று தாய்மார் கேட்க, நம்பியை நான் கண்டபின், மேகத்திலே மின்னினாப்போலேயிருக்கிற யஜ்ஞோபவிதமும், பரந்த மின் ஓரிடத்திலே சுழித்தாற்போலேயிருக்கிற மகர கண்டலமும், வெறுப்புறத்திலே ஆலத்திலழிக்க வேண்டும்படியிருக்கிற திருமார்பிலேகிடக்கிற ஸ்ரீவத்ஸலமும் திருவாபரணங்களும் திருத்தோள்களும் சுற்றும் வந்து என்னை நெருங்கா நின்றனவே! இதுவாயிற்று நான் கண்ட காட்சிக்கு வாசி யென்கிறாள். ‘தென்னவன் சோலை’ என்பதை, தென் நான் சோலை என்று பிரித்து, தெற்குத் திக்கிலேயுள்ளதாய் அழகியவான சோலையையுடைய என்றுரைப்பது தவிர, ‘தென்னன்’ என்று பாண்டியனுக்குப் பெயராய் அவன் கொண்டாடுமிடமாய் சோலைகளையுடையதான திருக்குறுங்குடி என்றுரைப்பதுமொன்று.


    3279.   
    நின்றிடும் திசைக்கும் நையும் என்று*  அன்னையரும் முனிதிர்* 
    குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்*
    வென்றி வில்லும் தண்டும் வாளும்*  சக்கரமும் சங்கமும்* 
    நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா*  நெஞ்சுள்ளும் நீங்காவே*.

        விளக்கம்  


    • (நின்றிடுந் திசைக்கும்.) நம்பியழகை நினைத்துச் சற்றுப்போது ஸ்தம்பித்து நிற்பது, பின்னை அறிவுகெட்டு அசேதநவஸ்துபோலே நிற்பது, உருகி நிற்பது இப்படியான நிலைமைகளைத் தலைமகள் அடைந்துவாரா நிற்க. தாய்மார் இதைச் சொல்லிச் சொல்லிப் பழிதூற்றத் தொடங்கினார்கள்; அதற்குத் தலைமகளுரைக்கின்றாள்; நான் ஒரு ஸ்யாபாராக்ஷமையன்றியே ஸ்தப்தையாய் நிற்பது வாஸ்தவம்; அறிவழிந்து நிற்பதும் வாஸ்தவம்; நைந்து கிடப்பதும் வாஸ்தவம்; இதற்காக நீங்கள் சீறுகைக்கு என்ன ப்ரஸக்தியுண்டு? குன்றம்போல் மணிமாடநீடு திருக்குறுங்குடி நம்பியை நான் ஸேவித்தது போல நீங்களும் ஸேவிக்கப்பெற்றாலன்றோ தெரியும். -***-வ்ருக்ஷே வ்ருக்ஷேச பச்யாமி சீரக்ருஷ்ணாஜிநாம்பரம் என்ற மாரிசனுடைய நிலைமையன்றோ எனக்குமாயிற்று. எம்பெருமானுடைய பஞ்சாயுதங்களேயன்றோ என்னைச் சூழ்ந்து கிடக்கின்றன. இந்த நிலைமை உங்களுக்கு உண்டானால் நீங்களும் நின்றிடுவீர், திசைப்பீர், ஸாவீர்; வீணாக என்னை எதுக்குப் பொடிகிறீர்கள்? என்றாளாயிற்று.


    3280.   
    நீங்கநில்லா கண்ண நீர்கள்என்று*  அன்னையரும் முனிதிர்* 
    தேன் கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்*
    பூந்தண் மாலைத் தண் துழாயும்*  பொன் முடியும் வடிவும்* 
    பாங்கு தோன்றும் பட்டும் நாணும்*  பாவியேன் பக்கத்தவே*.      

        விளக்கம்  


    • (நீங்க நில்லா.) = ஆஹ்லாதசீத நேத்ராமபு: புகீக்ருசகாத்ரவார், ஸதா வர சணாவிஷ்டர் த்ரஷ்டவ்யஸ் ஸர்வதே ராமபுரி புலகீக்ருசகாத்ரவார், ஸதா வரதணாவிஷ்டர் த்ரஷ்டவாஸ் ஸர்வதேஹிபீ: என்று பகவத் குணங்களிலே யீடுபட்டுக் கண்ணும் காணீருமாயிருக்கிற நிலைமையைக் காண்கைக்கு ஆசைப்பட வேணுமென்று சொல்லியிருக்க, அன்னையீர்! அந்த நிலைமையைக் கண்டு அந்தோ! நீங்கள் பெறு* * என்ன நீதி!; திருக்குறுங்குடியிலுள்ள சோலைகளில் தேன் வெள்ளம் மாறினாலும் மாறும், என் கண்களில் கண்ணீர் மாறாதுதான். ஏனென்றில்; (பூந்தண்மாலை யித்யாதி) உபாஸ்பூதிக்கும் தானே கடவனென்பது தோன்ற அணிந்த செவ்வித் திருத்துழாய் தணி மாலையும், உபயவிபூதியும் தன் முடியிலே செல்லுங்படி நவித்த திருவபிஷேகமும், அந்த மாலைக்கும் முடிக்கும் ஏற்றிருக்கும்படியான திவ்யமங்கள விக்ரஹமும், திருவரை பூந்தாற்போலே அங்குத்சைக்குப் பாங்காய் தோற்றுகிற திருப்பீதாம்பரமும் அதன் மேலாபரணமான வீடு காணும் இடைவிடாது என்னருகே நின்று பிரகாசியா நின்றனவே! இப்படியான பின்பு என் கண்ணீரால் மாற வழி ஏது? என்கிறாள். இந்தக் கண்ணீர் ஆனந்தத்தாலுமாகாலும், சோகத்தாலுமாகலாம்; உருவெளிப்பாடாய்த் தோற்றுமையாலே ஆனந்தமுள்ளது; அநுபவிக்கக்கிடையாமையாலே சோகமுள்ளது. அது தோன்றலே ‘பாலியேன்’ என்றது


    3281.   
    பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று*  அன்னையரும் முனிதிர்* 
    தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்* 
    தொக்க சோதித் தொண்டை வாயும்*  நீண்ட புருவங்களும்* 
    தக்க தாமரைக் கண்ணும்*  பாவியேன் ஆவியின் மேலனவே*.     

        விளக்கம்  


    • - (பக்கம் நோக்கி நிற்கும்) எம்பெருமான் எழுந்தருளுவதற்கு ஸம்பாவனாயுள்ள பக்கங்களிலேயே பாராங்குச நாயகியின் கண்ணோக்கம் செல்லுகின்றபடியால் அதைக் கண்டு தாய்மார்கள் முனிகின்றார்கள். அந்தோ! இப்படியும் முனியலாமோவென்கிறாள் தலைவி. சொன்ன சொன்னபடியெல்லாம் தரும்படியிருக்கிற கீர்த்திவாய்ந்த திருக்குறுங்குடி நம்பியை, அர்த்தக் கீர்த்திகளைப் பேசிக்களித்தே போது போக்கும் நான் ஸேவிக்கப் பெற்ற பின்பு, என்னை இவர்கள் முனிவதற்கு என்ன ப்ரஸக்தியுண்டு? மற்றபேர்கள் ஸேவிக்குமாபோலேயோ நான் ஸேவித்தது? அழகெல்லாம் திரண்டு ஒரு வடிவுகொண்டாற்போன்றதான திருவதரமும், *தன்கைச் சார்ங்களதுவேபோல் அழகியவாம் நீண்டு விளங்குகின்ற தீருப்புறாவங்களும், அப்பருவங்களுக்குத் தகதியாய் திகழ்கின்ற திருக்கண்களும் தோற்புரையே போதையன்றிக்கே உயிர் நிலையிலே நின்று நஸியா நின்றனவே; இப்படிப்பட்ட நான் பக்கம் நோக்கி நில்லாதே வேறு என் செய்யவல்லேன்? அவன் வரக் காணாமையாலே நைவதும் செய்கின்றேன்; இதற்காகத் தாய்மார்கள் நம் க்ருஷியலித்ததேயென்று உகக்கவேண்டியிருக்க, வெறுப்பது வழக்கோனென்றாயிற்று.


    3282.   
    மேலும் வன்பழி நம்குடிக்கு இவள் என்று*  அன்னை காணக்கொடாள்* 
    சோலைசூழ் தண்திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்*
    கோலநீள் கொடி மூக்கும்*  தாமரைக் கண்ணும் கனிவாயும்* 
    நீலமேனியும் நான்கு தோளும்*  என் நெஞ்சம் நிறைந்தனவே*.  

        விளக்கம்  


    • (மேலும் வன்பழி.) படி கடவாப் பத்தினியாயிருக்க வேண்டிய இவள் படிகடந்து நடக்கின்றாளாதலால் நம் குடிக்கு இவள் பெரும்பழியை விளைப்பவளாயிராநின்றாளென்று கருதித் தாய்மார்கள் ‘இனி இவன் திருக்குறுங்குடி நம்பியைக் காணவொண்ணாதபடி செய்து விடுவதே கருமம்” என்று பேசிக்கொள்ளுகின்றார்கள்; அந்தோ! தண்ணீர்பெருகிச் சென்றபின்பு அணைக்கட்ட பாரிக்கு மாபோலேயிரா நின்றதாயிற்று இது; திருக்குறுங்குடி நம்பியை நான் காணப்பெறுவதற்கு முன்னமே இவர்கள் சேமித்திருக்கவேணும்; அது செய்யாதே இன்று மறுக்கப் பார்க்குமிவர்கட்குப் பயன் யாதாகுமோ? நான் நம்பியை ஸெவிக்கப்பெற்ற நாள் தொடங்கி, அப்பெருமானது திருமூக்கும் திருக்கண்ணும் திருவாயும் திருமேனியும் திருந்தோள்களுமே என்னெஞ்சை இடடைத்துக்கொண்டு கிடக்க இவர்களுடைய நிபந்தனைகள் இனி என்னாவது என்கிறாள்.


    3283.   
    நிறைந்த வன்பழி நம்குடிக்கு இவள் என்று*  அன்னை காணக்கொடாள்* 
    சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்*
    நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த*  நீண்ட பொன் மேனியொடும்* 
    நிறைந்து என் உள்ளே நின்றொழிந்தான்*  நேமி அங்கை உளதே*.      

        விளக்கம்  


    • (நிறைந்த வன்பழி.) கீழ்ப்பாட்டிற்கே ‘நம் குடிக்கு இவள் வன்பழி” என்று சொல்லித் தாய்மார் முனிந்தமை சொல்லிற்கு. “மனங்குற்றமாந்தர் பழிக்கில் புகழ்” என்கிறபடியே பழியையே பரமபோக்யமாகக் கொள்ளுனானாகையாலே, தாய்மார் பழிக்கப் பழிக்க, தலைமகளினுடைய அதிப்ரவ்ருத்தி அதிகரிக்கத் தொடங்கிற்று; அதனால் “நிறைந்த வன்பழி நங்குடிக்கு இவன் என்று பின்னையும் கைநடுக்கி வையத் தொடங்கினால் தாய்; அது கண்டு தலைவி சொல்லுகிறாள்; “ஊரவர் கவ்வை யெருவிட்டு அன்னை சொல் நீர்படுத்து ஈர நெல்வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ்செயுள் யோவர் காதல் கடல் யுரைய விளைவித்த காதமர்மேனி” என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறபடி பழியே விளைநீராகத தன்னிடத்துக் காதலை வளரச் செய்யுமிதுதானே தனக்குச் சிறந்த கீர்த்தியாகப்பெற்ற திருக்குறுங்குடி நம்பியை நான் காண்பதற்கு முன்பே இவர்கள் இங்ஙனே முனிந்தாலும் பயனுள்ளதாம்; காணப்பெற்றபின்பு இவர்களின் முனிவு என் செய்ய? நிறைந்த சோதி வெள்ளஞ் சூழ்ந்த விலக்ஷணமான திருமேனியழகும், அல்லாத அழகிற்காட்டில் கையும் திருவாழியுமான அழகும் என்னெஞ்சிலே வேர் விழுந்தனவானபின்பு, பழியென்றாலென்? பாவமென்றாலென்? நானோ சிளைப்பது என்கிறாள்.


    3284.   
    கையுள் நன்முகம் வைக்கும் நையும்என்று*  அன்னையரும் முனிதிர்* 
    மைகொள் மாடத் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்* 
    செய்யதாமரைக் கண்ணும் அல்குலும்*  சிற்றிடையும் வடிவும்* 
    மொய்யநீள் குழல் தாழ்ந்த தோள்களும்*  பாவியேன் முன் நிற்குமே*.     

        விளக்கம்  


    • (கையுள் கண் முகம்.) உலகத்தில் துக்கம் விஞ்சினால் முகத்தைக் கைத்தலத்திலே வைத்துக்கொண்டு சிந்தை கலங்கிக் கிடப்பதென்று ஒன்றுண்டு; அந்த நிலைமை பாராங்குசநாயகிக்கு முண்டாயிற்று; அங்ஙனே முகத்தைக் கையிலேயிட்டுக் கொண்டு நைந்து கிடந்தாள்; அதுகண்ட தாய்மார் ‘சாண் நீளச் சிறுக்கிக்கு இப்படியும் ஒரு இருப்புண்டோ?’ என்று முனிய, அதற்குத் தலைவி கூறுகின்றாள்; திருக்குறுங்குடி நம்பியின் செந்தாமரைக் கண்ணும், அந்நோச்ருக்குத் தோற்றவர்கள் இளைப்பாறுமல்குலும் கீழையும் மேலையுங்கொண்டு அநுமித்து அறியவேண்டும்படியான இடையும், இவற்றுக்கு ஆச்ரயமான வடிவும், களிவண்டெங்குங் கலந்தாற்போல் கமழ் பூங்குழல்கள் தடந்தோள்மேல் மிளிர நின்று* என்கிறபடியே திருதுழல்கள் அலைய நின்ற திருத்தோள்களும் என்முன்னே தோன்றா நின்றனவே! அவை அணைக்குமாறு கைக்கு எட்டாமையினாலே கையுள் முகம் வைத்து நையவேண்டியதாயிற்று, என் செய்வேனென்றோளாயிற்று. மைகொள் மாடம் = உள்ளுள்ள எம்பெருமானுடைய நிழலீட்டாளே கருமைபூண்ட மாடங்களையுடையது திருக்குறுங்குடி.


    3285.   
    முன் நின்றாய் என்று தோழிமார்களும்*  அன்னையரும் முனிதிர்* 
    மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்*
    சென்னி நீள்முடி ஆதிஆய*  உலப்பு இல் அணிகலத்தன்* 
    கன்னல் பால் அமுதுஆகி வந்து*  என் நெஞ்சம் கழியானே*.     

        விளக்கம்  


    • (முன்னின்றா யென்று.) மகளிர்க்கு நாணமே பெருஞ்செல்வமாதலால் ஒருவர் கண்ணிலும் புலப்படாமே மறைந்து நிற்கை முறைமையாயிருக்க, இப்பெண்பிள்ளை பலருங்காண முன்னிற்கையாவதென்? என்று தோழியரும் அன்னையரும் சிறுபாறென்றிருப்பது கண்ட தலைவியுரைக்கின்றாள்; *செங்கமச் சுழலில் சிற்றிதழ்போல் விரலில் நேர்திகழாழிகளுங் கிண்கிணியும் அரையில் தங்கிய பொன்வடமும் தாள நன் மாதுளையின் பூவோடு பொன்மணியும் மோதரமும் கிறியும் மங்கல வைப்படையும் தோள்வளையுங் குழையும் மகரமும் வாளிகளும் கட்டியுமென்னும்படியான திவ்யாபரணங்கள் திருக்குறுங்குடி நம்பியினுடையவை என்னெஞ்சைவிட்டு இறைப் பொழுதுமகலாமல் முன்னே தோன்றா நிற்க. நான் பின்னே நிற்பது எங்ஙனம்? நாண்மடமச்சமெல்லாம் பெயர்ந்துபோம்படி அவை என்னெஞ்சை ஆக்கிரமித்த பின்பு நாண் நாணங் காத்திருக்கவொண்ணுமோ வென்றாளாயிற்று


    3286.   
    கழியமிக்கது ஓர் காதலள் இவள் என்று*  அன்னை காணக்கொடாள்* 
    வழு இல் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்* 
    குழுமித் தேவர் குழாங்கள்*  கை தொழச்சோதி வெள்ளத்தினுள்ளே* 
    எழுவது ஓர் உரு என் நெஞ்சுள் எழும்*  ஆர்க்கும் அறிவு அரிதே*. 

        விளக்கம்  


    • (கழியமிக்கதோர்.) லோகத்தில் அமேத விஷயங்களைப் பிரிந்தால் நாட்செல்ல நாட்செல்ல ஸ்நேஹம் குறைந்து வருவதைக் காணாகின்றோம்; அப்படியிருக்கவும் இப்பெண்பிள்ளை தான் கலந்து பிரிந்த விஷயத்தில் மேன்மேலும் காதல்மையல் ஏறுகின்றாள். ஆதனால் இனி இவள் ஒருகாலும் திருக்குறுங்குடி அம்பியை ஸேவிக்கவொண்ணாமே செய்துவிடவேணும்’ என்று அன்னை சொல்லிக்கொண்டிருக்க அது கேட்ட தலைவி கூறுகின்றாள். உலகத்தாருடைய காதலின் நியாயமோ எவ்விடத்தும் பார்ப்பது? லெளகிகர் ஈடுபடும் விஷயத்திலோ நான் ஈடுபட்டது; குறைவற்ற கீர்த்தியையுடைய திருக்குறுங்குடி நமபி பக்கலின்றோ நாள் ஈடுபடப்பெற்றது. நித்யஸூரிகளினுடைய திரளானவை பெரு வெள்ளத்திலிழிவாரைப் போலே கை கோத்தக்கொண்டு இழியவேண்டும்படி தேஜோ ராசிமயமானதோர் திருவுருவம் என்னெஞ்சினுள்ளே திகழா நின்றது; *** = நித்யமிந்த்ரியபதாதிகம் மஹோ யோகிநாமபி ஸுதுரகம் திய: அப்யநுச்ரவ சிரஸ்ஸு துர்க்கரஹம் * என்னுமாபோலே அதுதான் யார்க்கும் நிலமல்லாதது; அன்னதோருரு என்னெஞ்சினுள்ளே எழாநிற்க, தாய்மார் காணக்கொடுத்தாலென்ன? காணக்கொடாவிடிலென்ன? என்றாளாயிற்று.


    3287.   
    அறிவு அரிய பிரானை*  ஆழியங்கையனையே அலற்றி* 
    நறிய நன் மலர் நாடி*  நன்குருகூர்ச் சடகோபன் சொன்ன*
    குறிகொள் ஆயிரத்துள் இவை பத்தும்*  திருக்குறுங்குடி அதன்மேல்* 
    அறியக் கற்று வல்லார் வைட்டவர்*  ஆழ்கடல் ஞாலத்துள்ளே*. (2)     

        விளக்கம்  


    • (அறியவரிய பிரானை) கையுந் திருவாழியுமாயிருக்கிற தன்னுடைய அழகு ஒருவர்க்குமறியவொண்ணாதபடியிருக்கிற எம்பெருமானையே அலற்றித் திருக்குறுங்கடி நம்பி விஷயமாக ஆழ்வாரருளிச்செய்த இத்திருவாய்மொழியை அறியக் கற்றுவல்லவர்கள் ஸ்ரீவைஷ்ணவ ஸார்பௌமர்களாய் வீறு பெறுவார்களென்று பலன் சொல்லித் தலைக்கட்டினாராயிற்று. நிற நன்மலர்நாடி = ஆசார்யஹ்ருதயத்தில் மூன்றாம் ப்ரகரணத்தில் *** மலர்நாடி ஆட்செய்ய உய்யக்கொண்டு ஆரைக் கொண்டு வாளம் வில்லுங் கொண்டென்கிற இழவுகள் தீரப்பெற்றது” என்கிற சூர்ணிகையின் வியாக்கியானத்தில் மணவாளமாமுனிகள், “* நறிய நன்மலர் நாடி என்கிறபடியே சேஷத்வபரிமளயுக்தமாய் ச்லாக்க்யமான ஆத்மபுஷ்பங்களைத்தேடி” என்று பொருளருளிச்செய்தலும், “ஸர்வவ்யாக்யானங்களிலும் ‘பரிமளத்தையுடைத்தாய் ச்லாக்யமான புஷ்பங்கள்போலே ஆராய்ந்து சொன்னவாயிரம்’ என்று ப்ரபந்த விசேஷமானச் சொல்லியிருக்கையில், இவர்க்கு நினைவு ஆத்மபுஷ்பங்களைத் தேடி யென்கிறவிது என்றுகொள்ளவேணும்” என்றருளிச்செய்ததும் இங்கு அறியத்தக்கன. நாடி என்பதை வினையெச்சமாகவும் கொள்ளலாம்; இ விருதிபெற்ற பெயராகவுங் கொள்ளலாம். குறிகொள் என்கிற அடைமொழி ஆயிரத்திற்குமாகலாம், இப்பத்துக்குமாகலாம்.