2 எண்ணிக்கை பாடல் பாட

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்*  நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்*
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்*  கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்*

ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்*  கார் மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்* 
நாராயணனே நமக்கே பறை தருவான்*  பாரோர் புகழப் படிந்து-ஏலோர் எம்பாவாய் (2) 

ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி*  நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்* 
தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து* ஒங்கு பெருஞ் செந்நெலூடு கயல் உகளப்*
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்*  தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி- 
வாங்கக்*  குடம் நிறைக்கும் வள்ளற் பெரும் பசுக்கள்*  நீங்காத செல்வம் நிறைந்து- ஏலோர் எம்பாவாய் (2)       

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய*  கோயில் காப்பானே கொடித் தோன்றும் தோரண- 
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்*  ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை- 
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்*  தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்* 
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா!*  நீ- நேய நிலைக் கதவம் நீக்கு-ஏலோர் எம்பாவாய்.   (2) 

உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்*  நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்* 
கந்தம் கமழும் குழலீ கடை திறவாய்*  வந்து எங்கும் கோழி அழைத்தன காண்*  மாதவிப்- 
பந்தர்மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்*  பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்* 
செந்தாமரைக் கையால் சீர் ஆர் வளை ஒலிப்ப*  வந்து திறவாய் மகிழ்ந்து-ஏலோர் எம்பாவாய். (2) 

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்*  சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து* 
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி*  மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்* 
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா*  உன்- கோயில் நின்று இங்ஙனே போந்தருளி*  கோப்பு உடைய- 
சீரிய சிங்காசனத்து இருந்து*  யாம் வந்த- காரியம் ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய். (2)

அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி*  சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி* 
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி*  கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி* 
குன்று குடையா எடுத்தாய் குணம் போற்றி*  வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி* 
என்று என்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்*  இன்று யாம் வந்தோம் இரங்கு ஏலோர் எம்பாவாய்.(2)

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா*  உன்தன்னைப்- பாடிப் பறைகொண்டு யாம் பெறு சம்மானம் 
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்*  சூடகமே தோள்வளையே தோடே செவிப் பூவே* 
பாடகமே என்று அனைய பல் கலனும் யாம் அணிவோம்*  ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு* 
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்*  கூடியிருந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய். (2)

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்*  அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து*  உன்தன்னைப்- 
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்*  குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா*  உன்தன்னோடு- 
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது*  அறியாத பிள்ளைகளோம் அன்பினால்*  உன்தன்னைச்- 
சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே*  இறைவா நீ தாராய் பறை ஏலோர் எம்பாவாய்.  (2)

சிற்றஞ் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து*  உன்- பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்* 
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்திற் பிறந்து*  நீ- குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது* 
இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா*  எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும்*  உன்தன்னோடு- 
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்*  மற்றை நம் காமங்கள் மாற்று ஏலோர் எம்பாவாய். (2)      

வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்*  திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி* 
அங்குப் பறைகொண்ட ஆற்றை*  அணி புதுவைப்- பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன* 
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே*  இங்கு இப் பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்* 
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்*  எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய். (2)