விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அன்று ஆயர் குலமகளுக்கு அரையன்-தன்னை* அலை கடலைக் கடைந்து அடைத்த அம்மான்-தன்னை* 
    குன்றாத வலி அரக்கர் கோனை மாள* கொடும் சிலைவாய்ச் சரம் துரந்து குலம் களைந்து -
    வென்றானை* குன்று எடுத்த தோளினானை* விரி திரை நீர் விண்ணகரம் மருவி நாளும்- 
    நின்றானை* தண் குடந்தைக் கிடந்த மாலை* நெடியானை-அடி நாயேன் நினைந்திட்டேனே (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அன்று - முன் பொருகாலத்தில்;
ஆயர் குலம் மகளுக்கு - இடைக்குலத்துச் சிறந்த மகளாக அவதரித்த நப்பினைப் பிராட்டிக்கு;
அரையன் தன்னை - நாயகரானவரும்;
அலை கடலை கடைந்து - அலையெறிகின்ற கடலைக் கடைந்தவரும்;
அடைத்த அம்மான் தன்னை - (அதில்) அணை கட்டின ஸ்வாமி யானவரும்;

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் ப்ரணயரோஷந் தலையெடுத்து ஒரு நிலை நின்றார்; அதாவது ‘எம்பெருமான் வந்தவாறே அவனுக்கு ஏதொவொரு சிஷை செய்து தாம் முடிந்துபிழைப்பதாகப் பேசினார். அவன் வந்தாலன்றோ அது செய்யலாவது; வரக்காணாமையாலே கதறிக் கூப்பிடுகிறார். விபவாவதாரங்களையும் அர்ச்சாவதாரங்களையும் பேசிக் கதறுகிறார். நம்மாழ்வார்க்கு * முனியேநான் முகனே யென்கிற திருவாய்மொழி போலே யிருக்கிறதாயிற்று இவர்க்கு இப்பாசுரம். அன்று ஆயர்குலமகளுக்கு அரையன்றன்னை = தம்மோடொத்த திவ்ய மஹிஷிகளுக்கு உதவினபடியைப் பேசத்தொடங்கி முந்துறமுன்னம் நப்பின்னைப் பிராட்டிக்கு உதவினபடியைப் பேசுகிறார். ‘அரையன்‘ என்பது ‘அரசன்‘ என்ற பதத்தின் போலி. நப்பின்னையின் துயரத்தைத் தொலைத்த பிரபு என்றபடி. அலைகடலைக் கடைந்தடைத்த அம்மான் கன்னை = கடலைக் கடைந்ததும் கடலில் அணைகட்டினதும் பிராட்டிக்காக. பிராட்டியைப் பெறுவதற்காகக் கடலைக்கடைந்தது; அவளுடைய தனிமையைத் தீர்க்கைக்காகக் கடலையடைத்தது. தேவர்கட்கு அமுதங்கொடுப்பதற்காகவன்றோ கடல் கடைந்த தென்னில்; அன்று; பிராட்டியைப் பெறுதலே முக்கிய மான பலன்; மற்றது ஆநுஷங்கிகம் என்க. “விண்ணவரமுதுண அமுதில்வரும் பெண்ணமுதுண்ட எம்பெருமானே!“ என்றாரே இவர்தாமே. (குன்றாத வலியரக்கர் இத்யாதி) வரபலத்தையும் புஜபலத்தையும் பற்றாசாகக் கொண்டு பரஹிம்ஸையே போதுபோக்காயிருக்கும் ராக்ஷஸஜாதிக்கெல்லாம் தலைவனாயிருந்த இராவணன் தொலையும்படியாக ஸ்ரீசாரங்கவில்லிலே அம்புகளைத் தொடுத்து நடத்தி வெற்றி பெற்ற வீறுயுடைமை சொல்லுகிறது. ராக்ஷஸகுலத்தவரான விபீஷணாழ்வான் வாழ்ந்து போயிருக்க, ‘குலம் களைந்து‘ என்னலாமோ வென்னில்; அவர், தம்முடைய நினைவாலும் இராவணனுடைய நினைவாலும் சக்ரவர்த்தித் திருமகனாருடைய நினைவாலும் ராக்ஷஸ குலத்தில் நின்றும் பிறிகதிர்ப்பட்டு இக்ஷ்வாகு குலத்திற்புகுந்து விட்டாரென்பது வான் மீகி முதலிய முன்னோர்களின் ஸித்தாந்தம். இது ஸ்ரீவசநபூஷணாதிகளில் விரியும். இராவணனொருவனே குற்றமியற்றினவனாயினும் அவனுடைய ஸம்ஸர்க்கமே ஹேதுவாகக் குலங்குலமாக நசித்தொழிந்தது. “கேசவன் தமர் கீழ்மேலெமரேழெழுபிறப்பும், மாசதிரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா“ என்கிறபடியே ஒருவன் அநுகூலனானால் அவனுடைய ஸம்பந்தி ஸம்பந்திகளும் உஜ்ஜீவிக்குமாபோலே ஒருவன் பிரதிகூலனான இராவணனுடைய ஸம்ந்தத்தாலே ராக்ஷஸகுலமடங்கலும் பாழ்பட்டன; அது கூலனான ஸுக்ரீவனுடைய ஸம்பந்தத்தாலே வாநரஜாதியடங்கலும் வாழ்ச்சி பெற்றன. குன்றெடுத்த தோளினானை = ஆயர்க்கு நேர்ந்த ஆபத்தைப் போக்கினது ஒரு பெருமையோ? என்னுடைய ஆபத்தைப் போக்கவேண்டாவோ வென்பது இங்கு உள்ளுறை. விரிதிரை நீர் விண்ணகரம் மருவி நாளும் நின்றானை = கீழ்ச்சொன்ன விபவாதாரங்களுக்குப் பிற்பட்டவர்களையும் அநுக்ரஹிக்கைக்காகவன்றோ திருவிண்ணகரிலே நித்ய வாஸம் பண்ணுகிறது. திருவிண்ணகர் – ஒப்பிலியப்பன் ஸந்நிதி என்றும், உப்பிலியப்பன் ஸந்நிதி என்றும் வழங்கப்பெறும். சோழநாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று. திருவிண்ணகரிலே நின்றான், திருக்குடந்தையிலே கிடந்தான்; நின்றால் எங்கேனும் புறப்பட்டுப்போக நினைவுண்டு போலும் என்று நினைக்கும்படியாயிருக்கும்; பள்ளிகொண்டிருந்தால் அங்ஙனே நினைப்பாரில்லையே: ‘ஸம்ஸாரம் கிழங்கெடுத்தாலல்லது போகோம்‘ என்றுகிடக்கிற கிடையாயிற்று. (மாலை) “மாயாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை“ என்கிறபடியே தானும் வ்யாமோஹசாலியாய் அடியார்களையும் வ்யாமோஹசாலி களாக ஆக்குமவன் என்க. (நெடியானை) இப்படிப்பட்டவன் இப்போது எனக்கு எட்டாதவனாயினானென்று காட்டுகிறபடி. அடிநாயேன் நினைந்திட்டேனே = அவனுடைய மேன்மைக்கு எல்லையில்லாதாப்போலே என்னுடைய தாழ்வுக்கும் எல்லையில்லை; திறந்த வாசலெல்லாம் நுழைந்து திரியும் ஐந்து போலே மிகத் தண்ணியன். இப்படிப்பட்ட நான் அப்படிப்பட்ட பரமபுருஷனை நினைந்திட்டேன் – அம்மானாழிப் பிரானவன் எவ்விடத்தான் யானார், எம்மாபாவியர்க்கும் விதிவாய்க்கின்று வாய்க்குங்கண்டீர்‘ என்றாப்போலே, மிக நீசனான அடியேனுக்கும் விதி வசத்தாலே நேர்ந்த இக்கலவி நித்யமாய்ச் செல்லவேணுமென்று நினைந்திட்டே னென்றவாறு.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்