விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நைவளம் ஒன்று ஆராயா நம்மை நோக்கா* நாணினார் போல் இறையே நயங்கள் பின்னும்* 
    செய்வு அளவில் என் மனமும் கண்ணும் ஓடி எம் பெருமான் திருவடிக்கீழ் அணைய* இப்பால்- 
    கைவளையும் மேகலையும் காணேன்* கண்டேன்- கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும்* 
    எவ்வளவு உண்டு எம் பெருமான் கோயில்? என்றேற்கு* இது அன்றோ எழில் ஆலி? என்றார் தாமே   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஒன்று - மிகச்சிறந்ததான;
கைவளம் - கைவளமென்கிற பண்ணை;
ஆராயா - ஆராய்நதுபாடி;
நம்மை நோக்கா - நம்மைப் பார்த்து;
இறையே நாணினார் போல் - சிறிது வெட்கப்பட்டவர் போல நின்று;

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் ‘அவரை நாம் தேரரென்றஞ்சினோமே‘ என்று ப்ரமத்தாலே தான் இறாய்த்தமை சொன்னாள்; அதைக்கேட்ட தோழியானவள் ‘நங்காய்! நீ இறாய்த்து அகன்றாயாகில் அவர் உன்னோடு கலந்தபடி என்?‘ என்று கேட்க, ‘அவர் என்னை வசப்படுத்திக் கொண்டபடியும் என்னோடு கலந்தபடியும் இது காண்‘ என்கிறாள் இப்பாட்டில். அவர் தம்முடைய விலக்ஷணமான வடிவழகையும் சீலத்தையும் காட்டின விடத்திலும், * அவரைத் தேவரென்றஞ்சி இறாய்த்தபடியாலே ‘இனி நாம் வந்தவழியே திரும்பிப் போகவேண்டு மத்தனையன்றோ‘ என்று நினைத்தார்; கால் பெயர மாட்டிற்றில்லை; மேயன்றொ: சேஷவஸ்து கைப்படுவது சேஷியானவனுக்குப் பரம லாபமன்றோ. வடிவழகைக் காட்டுவதும் சீலத்தைக் காட்டுவதும் எதற்காக? கைப்படாத வஸ்துவைக் கைப்படுத்துகைக்காக வன்றோ? தாம் உத்தேசித்துவந்த விஷயம் இங்குக் கைபுகுந்ததில்லை வகையினாலேனும் வசீகரித்தாக வேணுமே, அதற்கு வழி யென்ன? என்று பார்த்தார்; முன்பு திருவாய்ப்பாடியிற் பெண்கள் தம்முடைய திருக்குழலோசையிலே வசப்படக் கண்ட வாஸநையாலே இங்கு நம்முடைய மிடற்றோசையாலே வசீகரிக்கப்போமென்று பார்த்து ஒரு பண்ணை நுணுங்கத் தொடங்கினார்; நாம் வேட்டையாடுகிற வியாஜமாக வந்தோமாகையாலே ‘பாடுகிறது ஏதுக்கு?‘ என்று கேட்பாரில்லை; ஆகவே தாராளமாகப் பாடலாமென்று துணிந்து ஒருபண்ணை நுணுங்கினார்; அதிலே யீடுபட்டு மேல்விழுந்து கலந்தேன் என்று வரலாறு சொல்லுகிறாள் பரகாலநாயகி. நைவளம் ஒன்று ஆராயா = ‘நைவளம்‘ என்று ஒரு பண்ணுக்குப் பெயர். பாட்டுப் பாடுகிறவர்களையும் பாட்டு கேட்கிறவர்களையும் நைவிக்கும்படியான வளத்தையுடைய தாதல் பற்றி நைவளமென்று பெயரிடப்பட்ட தென்று யோகார்த்தமும் அருளிச்செய்வர். மற்ற இசைகளிற்காட்டில் இந்த இசை பிறரை வசீகரி்க்கும் விஷயத்தில் இன்றியமையாததாதலாலும் இதற்கு வசப்படாவிட்டால் வேறுகதி யில்லாமையாலும் ‘நைவளம் ஒன்று‘ எனப்பட்டது. கருமயோக ஜ்ஞாநயோகங்களால் அஸாத்யமானதை பக்தியோகத் தாலே ஸாதிக்கலாம்; அதனாலும் அஸாத்யமானதை ப்ரபத்தியாலே ஸாதிக்கலாம்; அது வும் பலித்தலில்லை யென்றால் வேறு கதியில்லை என்றிருப்பதுபோல, காதலன் தானும் இப் பரகால நாயகியைப் பெறுகைக்ககுச் நரமோபாயமான பண்ணைக் கைகண்டபடி. ஆராய் தல் – நன்றாக நுணுங்குதல். ‘ஆராயா‘ என்றது செய்யா என்னும் வாய்பாட் டிறந்தகால வினையெச்சம்; ஆராய்ந்து என்றபடி. மேலே ‘ நோக்கா“ என்றதையும் இங்ஙனமே கொள்க. நைவளம் என்கிற பண்ணைத் தாம் நுணுங்கினவாறே தாம் உருகினார்; ‘முரட்டு ஆணாகிய நாமே உருகுகிறபோது மெல்லியலான இவள் உருகக் கேட்கவேணுமோ? வயிரத்தை யுருக்குமது அரக்கையுருக்கச் சொல்லவேணுமோ? இது இவளையும் அழித்தே தீரும்‘ என்றறுதியிட்டு என்முகத்தைப் பார்த்தார்; உண்மையில் அவ்விசையினால் நான் உள்ளெலா முருகிக் குழைந்திருக்கச் செய்தேயும் அந்த உருக்கத்தையும் ஈடுபாட்டையும் எப்படியோ மறைத்து, சிறிதும் விகாரப்படாதவள்போல முகத்திற் காட்டிக்கொண்டேன்; அப்படிப் பட்ட நிலைமையைக் கண்டு அவர்க்கு வெட்கமுண்டாயிற்று. ஏன்? நம்முடைய எண்ணம் பழுதாயிற்றேயென்று லஜ்ஜித்தார்; அவர் தம்முடைய காம்பீர்யத்தாலே நாணி னமை தோற்றாதபடி யிருக்கப்பார்த்தும் நாணினார் போலவே காணப்பட்டார்; ‘நம்முடைய சரமோபாயமும் நிஷ்பலமாயிற்றே‘ என்று அவரால் வெட்கப்படாமலிருக்க எங்ஙனே முடியும். அந்த வெட்கத்தாலே நேர்முகம் பார்க்கமாட்டாதே சோலையைப் பார்ப்பதும் பக்கங்களைப் பார்ப்பதுமாக ஆனார். பின்னும் நயங்கள் செய்வளவில் = ‘பின்னும்‘ என்றது, நைவளமென்கிற பண்ணைப் பாடினவளவோடு நில்லாமல் என்றபடி. அது பலிக்கவில்லையென்று வாளா கிடந்திலர்; ‘அடியேன், குடியேன்‘ என்றாற்போலே சில நைச்யபாஷணங்களைப் பண்ணிலே ஏறிட்டுப் பாடத்தொடங்கினார்; அவ்வளவிலே. என்மனமுங் கண்ணுமோடி எம்பெருமான்திருவடிக்கீழ் அணைய = விகாரத்தை வெளிக் காட்டாதிருக்கவேணுமென்று நான் எவ்வளவோ முயற்சி செய்தும் பலிக்கப் பெற்றதில்லை; அடக்கிக் கொண்டிருந்தும் என்னால் அடக்க முடியவில்லை; கடல் உடைந்தாற்போலே உடைந்தது. நெஞ்சும் கண்ணும் ஆச்ரயத்தைவிட்டுப் பதறியோடிற்று; தம் மிடற்றோசை யாலே என்னை யீடுபடுத்தினவருடைய திருவடிவாரத்தின்கீழே சென்றணைந்தன. – வியாக்கியான வாக்கியங்காண்மின்; - “அவர் நினைத்தவளவன்று காண் நான் அழிந்தபடி யென்கிறாள். என்முலையைத் தம் மார்விலே நெருக்கித் தழுவிக் கொள்ளவாயிற்று அவர் நினைத்திருந்தது; நான் அவர்காலைத் தலையிலே வைத்துக்கொண்டே னென்கிறாள்“. இப்பால் கைவளையும் மேகலையுங் காணேன் = இதனால் விரஹவ்ருத்தாந்தம் சொல்லுகிறதன்று; உந்மஸ்தகமான ஸம்ச்லேஷரஸம் சொல்லுகிறது. கைவளையையும் மேகலையையுங் காணாமை விச்லேஷத்திலன்றோ வென்னில், அங்ஙனே ஸம்ச்லேஷத்திலுமுண்டு. ஸம்ச்லேஷரஸம் மீதூர்ந்து உண்டான தேஹப்பூரிப்பினால் வளைகள் வெடித் தொழிந்தமையாலுண்டான இழவைச் சொன்னபடி. கலவியிலும் வளையிழப்பது பிரிவிலும் வளையிழப்பது என்றனால், பின்னை வளைதங்கியிருக்கும் நிலைமை எது வென்னில்; ஸம்ச்லேஷரஸம் உந்மஸ்தகமாகாமல் ஸாத்மி்க்கு மளவாகும் தசையிலே வளை தங்கியிருக்கு மென்க. (மேகலையுங்காணேன்) மே – அரையில் மேவுகின்ற, கலை – வஸ்திரம் என்றுகொள்க. “பரியட்டமாறாட்டத்தாலே என்பரியட்டப்பட்டுங் கண்டிலே னென்கை. அவன் பரியட்டம் தன்னரையிலேயிருக்கக் கண்டாளித்தனையிறே“ என்ற வியாக்கியான வாக்கியமுங் காண்த்தக்கது. இதுவும் ஸம்ச்லேஷரத்தின் உந்மஸ்தகத்வத்தை வெளியிடவற்று. “கைவளையும் மேகலையுங் காணேன்“ என்றதற்கு ‘அஹங்காரமமகாரங்கள் ஒழிந்தன‘ என்று கூறுதல் ஸ்வாபதேசப்பொருள் என்றருளிச்செய்வர். உபாயவிரோதி, ப்ராப்யவிரோதி, புருஷார்த்த விரோதி என் மூன்று வகையான இடையூறுகளும் தொலைந்து “உன்றன்னோடுற்றோமே யாவோ முனக்கே நாமாட்செய்வோம், மற்றைநங்காமங்கள்மாற்று“ என்கிற பிரார்த்தனை பலித்தமை சொன்னவாறு. ‘நான் போக்தாவன்று, எனக்குப்போகமன்று; போக்தாவும். அவனே, போகமும் அவனுடையதே‘ என்ற ஸ்வரூபதத்துவத்தின் அநுஸந்தானம் முதிர்ந்தமை சொல்லிற்றாயிற்று. கண்டேன் கனமகரக் குழையிரண்டும் நான்கு தோளும் = அணைத்தபோது உறுத்தின திருமகரக் குழைகளையும், அணைத்த திருக்கைகளையும் கண்டேனென்கிறாள். கலந்தவள் சக்ரவர்த்தி திருமகனாயிருக்க, நான்குதோள் என்கிறதென்னென்னில்; தன்னைத் தழுவுகையாலே தோள்கள் பணைத்தபடி. அன்றி, உண்மையான சதுர்ப்புஜ ஸ்வரூபத்தை வெளியிட்ட படியாகவுமாம். எவ்வளவுண் டெம்பெருமான்கோயில்? என்றேற்கு = வந்தவிடத்திலே கலந்து பிரிந்து போகையன்றியே அவருடைய இருப்பிடத்தே உடன் சென்று நித்ய ஸம்ச்லேஷம் பண்ணிக் களிக்கவேணுமென்னும் விருப்பாலும், சிறிது தூரமாகிலும் கூடவே தோள்மேல் தோளிட்டுக்கொண்டு போகவேணு மென்னும் விருப்பாலும், தகுதியான பரிஜனங்களோடே அநுபவிக்கவேணு மென்னும் விருப்பாலும் ‘தேவரீருடைய வாழ்விடம் இங்குத் தைக்கு எத்தனை தூரமுண்டு?‘ என்று கேட்டேன்; இதோ காண்கிற திருவாலித் திருநகரி காண் என்று சொல்லி அந்தர்த்தானமாய்விட்டார். அந்தோ! ‘எவ்வளவுண்டெம்பெருமான் கோயில்‘ என்று பாவியேன் நானேயன்றோ பிரிவை ப்ரஸ்தாவித்தேன்; அது கேளாதிருந்தேனாகில் இன்னமும் சற்றுப்போது அநுபவிக்கலாமாயிருந்ததே! நானே கெடுத்துக்கொண்டேனே யென்கிறாள் போலும்.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்