பிரபந்த தனியன்கள்

தரவு கொச்சகக் கலிப்பா
தருச்சந்தப் பொழில்தழுவு தாரணியின் துயர்தீர 
திருச்சந்த விருத்தம்செய் திருமழிசைப் பரன்வருமூர், 
கருச்சந்தும் காரகிலும் கமழ்கோங்கும் மணநாறும்,
திருச்சந்தத் துடன்மருவு திருமழிசை வளம்பதியே.
 
இருவிகற்ப நேரிசை வெண்பா
உலகும் மழிசையு முள்ளுணர்ந்து, தம்மில் 
புலவர் புகழ்க்கோலால் தூக்க,- உலகுதன்னை
வைத்தெடுத்த பக்கத்தும், மாநீர் மழிசையே 
வைத்தெடுத்த பக்கம் வலிது.

   பாசுரங்கள்


    வாசிஆகி நேசம்இன்றி*  வந்துஎதிர்ந்த தேனுகன்,* 
    நாசம்ஆகி நாள்உலப்ப*  நன்மை சேர் பனங்கனிக்கு,*

    வீசி மேல் நிமிர்ந்ததோளின்*  இல்லைஆக்கினாய், கழற்கு* 
    ஆசைஆம் அவர்க்குஅலால்*  அமரர் ஆகல்ஆகுமே? 


    கடைந்த பாற்கடற் கிடந்து*  கால நேமியைக் கடிந்து,* 
    உடைந்தவாலி தன் தன்தனக்கு*  உதவ வந்து இராமனாய்,* 

    மிடைந்த ஏழ் மரங்களும்*  அடங்க எய்து வேங்கடம்* 
    அடைந்தமால பாதமே*  அடைந்து நாளும் உய்ம்மினோ


    எத்திறத்தும் ஒத்துநின்று*  உயர்ந்துஉயர்ந்த பெற்றியோய்,* 
    முத்திறத்து மூரிநீர்*  அராவணைத் துயின்ற,* நின்- 

    பத்துஉறுத்த சிந்தையோடு*  நின்றுபாசம் விட்டவர்க்கு,* 
    எத்திறத்தும் இன்பம் இங்கும்*  அங்கும் எங்கும் ஆகுமே. 


    மட்டுஉலாவு தண்துழாய்*  அலங்கலாய்! பொலன்கழல்,* 
    விட்டு வீழ்வுஇலாத போகம்*  விண்ணில் நண்ணி ஏறினும்,*

    எட்டினோடு இரண்டுஎனும்*  கயிற்றினால் மனந்தனைக்- 
    கட்டி,*  வீடுஇலாது வைத்த காதல்*  இன்பம் ஆகுமே. 


    பின்பிறக்க வைத்தனன் கொல்*  அன்றி நின்று தன்கழற்கு,* 
    அன்புஉறைக்க வைத்தநாள்*  அறிந்தனன் கொல் ஆழியான்,*

    தன்திறத்துஒர் அன்பிலா*  அறிவுஇலாத நாயினேன்,* 
    என்திறத்தில் என்கொல்*  எம்பிரான் குறிப்பில் வைத்ததே? 


    நச்சு அராஅணைக் கிடந்த*  நாத! பாத போதினில்,* 
    வைத்தசிந்தை வாங்குவித்து*  நீங்குவிக்க நீஇனம்,*

    மெய்த்தன் வல்லை ஆதலால்*  அறிந்தனன் நின் மாயமே,* 
    உய்த்து நின் மயக்கினில்*  மயக்கல் என்னை மாயனே! 


    சாடுசாடு பாதனே!*  சலம்கலந்த பொய்கைவாய்,* 
    ஆடுஅராவின் வன்பிடர்*  நடம் பயின்ற நாதனே,*

    கோடு நீடு கைய! செய்ய*  பாதம் நாளும் உள்ளினால்,* 
    வீடனாக மெய்செயாத*  வண்ணம்என்கொல்? கண்ணனே!


    நெற்றிபெற்ற கண்ணன் விண்ணின்*  நாதனோடு போதின் மேல்,* 
    நற்றவத்து நாதனோடு*  மற்றும்உள்ள வானவர்,*

    கற்ற பெற்றியால் வணங்கு*  பாத!நாத! வேத,* நின்- 
    பற்றுஅலால் ஒர் பற்று*  மற்றது உற்றிலேன் உரைக்கிலே. 


    வெள்ளைவேலை வெற்புநாட்டி*  வெள்எயிற்று அராவளாய்,* 
    அள்ளலாக் கடைந்த*  அன்று அருவரைக்கு ஓர்ஆமையாய்,*

    உள்ளநோய்கள் தீர்மருந்து*  வானவர்க்கு அளித்த,*  எம்- 
    வள்ளலாரை அன்றி*  மற்றுஒர் தெய்வம் நான் மதிப்பனே?


    பார் மிகுத்த பாரம் முன்*  ஒழிச்சுவான் அருச்சுனன்,* 
    தேர் மிகுத்து மாயம்ஆக்கி*  நின்றுகொன்று வென்றிசேர்,*

     

    மாரதர்க்கு வான்கொடுத்து*  வையம் ஐவர் பாலதாம்,* 
    சீர்மிகுத்த நின்அலால் ஒர்*  தெய்வம் நான் மதிப்பனே?

     



    குலங்களாய ஈரிரண்டில்*  ஒன்றிலும் பிறந்திலேன்,* 
    நலங்களாய நற்கலைகள்*  நாலிலும் நவின்றிலேன்,* 

    புலன்கள் ஐந்தும் வென்றிலேன்*  பொறியிலேன் புனித,* நின்- 
    இலங்கு பாதம் அன்றி*  மற்றுஒர் பற்றுஇலேன் எம் ஈசனே! 


    பண்உலாவு மென்மொழிப்*  படைத் தடங்கணாள் பொருட்டு* 
    எண்இலா அரக்கரை*  நெருப்பினால் நெருக்கினாய்,*

    கண்அலால் ஒர் கண்இலேன்*  கலந்த சுற்றம் மற்றுஇலேன்,* 
    எண்இலாத மாய!நின்னை*  என்னுள் நீக்கல் என்றுமே. 


    விடைக் குலங்கள் ஏழ்அடர்த்து*  வென்றிவேற்கண் மாதரார்,* 
    கடிக்கலந்த தோள்புணர்ந்த*  காலி ஆய! வேலைநீர்,*

    படைத்து அடைத்து அதில் கிடந்து*  முன்கடைந்த நின்தனக்கு,* 
    அடைக்கலம் புகுந்த என்னை*  அஞ்சல் என்ன வேண்டுமே.      


    சுரும்புஅரங்கு தண்துழாய்*  துதைந்துஅலர்ந்த பாதமே,* 
    விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு*  இரங்கு அரங்க வாணனே,*

    கரும்புஇருந்த கட்டியே!*  கடல்கிடந்த கண்ணனே,* 
    இரும்புஅரங்க வெஞ்சரம் துரந்த*  வில் இராமனே!  


    ஊனில் மேய ஆவி நீ*  உறக்கமோடு உணர்ச்சி நீ,* 
    ஆனில்மேய ஐந்தும் நீ*  அவற்றுள் நின்ற தூய்மை நீ,*

    வானினோடு மண்ணும் நீ*  வளங்கடற் பயனும் நீ,* 
    யானும் நீ அதுஅன்றி*  எம்பிரானும் நீ இராமனே!


    அடக்குஅரும் புலன்கள்*  ஐந்துஅடக்கி ஆசையாம் அவை,* 
    தொடக்குஅறுத்து வந்து நின்*  தொழிற்கண் நின்ற என்னைநீ,*

    விடக்கருதி மெய்செயாது*  மிக்குஒர் ஆசை ஆக்கிலும்,* 
    கடற்கிடந்த நின்அலால் ஒர்*  கண்ணிலேன் எம் அண்ணலே!


    வரம்புஇலாத மாய! மாய!*  வையம்ஏழும் மெய்ம்மையே,* 
    வரம்புஇல் ஊழி ஏத்திலும்*  வரம்புஇலாத கீர்த்தியாய்,*

    வரம்புஇலாத பல்பிறப்பு*  அறுத்துவந்து நின்கழல்,* 
    பொந்துமா திருந்த நீ*  வரம் செய் புண்டரீகனே!   


    வெய்யஆழி சங்குதண்டு*  வில்லும் வாளும் ஏந்து சீர்* 
    கைய செய்ய போதில் மாது*  சேரும் மார்ப நாதனே,*

    ஐயில்ஆய ஆக்கை நோய்*  அறுத்துவந்து நின்அடைந்து,* 
    உய்வதுஓர் உபாயம் நீ*  எனக்கு நல்க வேண்டுமே.   


    மறம் துறந்து வஞ்சம்மாற்றி*  ஐம்புலன்கள் ஆசையும்- 
    துறந்து,*  நின் கண் ஆசையே தொடர்ந்து*  நின்ற நாயினேன்,*

    பிறந்துஇறந்து பேர்இடர்ச்*  சுழிக்கணின்று நீங்குமா,* 
    மறந்திடாது மற்றுஎனக்கு*  மாய! நல்க வேண்டுமே


    காட்டி நான் செய்வல்வினைப்*  பயன் தனால் மனந்தனை,* 
    நாட்டிவைத்து நல்லஅல்ல*  செய்ய எண்ணினார்எனக்,*

    கேட்டதுஅன்றி என்னதுஆவி*  பின்னைகேள்வ! நின்னொடும்,* 
    பூட்டி வைத்த என்னை*  நின்னுள் நீக்கல் பூவை வண்ணனே! 


    பிறப்பினோடு பேர்இடர்ச்*  சுழிக்கண் நின்றும் நீங்கும்அஃது,* 
    இறப்ப வைத்த ஞான நீசரைக்*  கரைக் கொடுஏற்றுமா,* 

    பெறற்குஅரிய நின்னபாத*  பத்திஆன பாசனம்,* 
    பெறற்குஅரிய மாயனே!*  எனக்கு நல்க வேண்டுமே.  


    இரந்து உரைப்பது உண்டுவாழி*  ஏமநீர் நிறத்துஅமா,* 
    வரம் தரும் திருக்குறிப்பில்*  வைத்ததுஆகில் மன்னு சீர்,*

    பரந்த சிந்தை ஒன்றி நின்று*  நின்னபாத பங்கயம்,* 
    நிரந்தரம் நினைப்பதாக*  நீ நினைக்க வேண்டுமே  (2)


    விள்வுஇலாத காதலால்*  விளங்குபாத போதில்வைத்து,* 
    உள்ளுவேனது ஊனநோய்*  ஒழிக்குமா தெழிக்குநீர்ப்,*

    பள்ளிமாய பன்றிஆய*  வென்றிவீர குன்றினால்* 
    துள்ளுநீர் வரம்பு செய்த*  தோன்றல் ஒன்று சொல்லிடே.


    திருக்கலந்து சேரும்மார்ப!*  தேவதேவ தேவனே,* 
    இருக்கலந்த வேதநீதி*  ஆகி நின்ற நின்மலா,*

    கருக்கலந்த காளமேக*  மேனிஆய நின்பெயர்,* 
    உருக்கலந்து ஒழிவிலாது*  உரைக்குமாறு உரைசெயே.      


    கடுங்க வந்தன் வக்கரன்*  கரன் முரன் சிரம் அவை, 
    இடந்து கூறு செய்த*  பல்படைத் தடக்கை மாயனே,*

    கிடந்துஇருந்து நின்றுஇயங்கு*  போதும் நின்ன பொற்கழல்,* 
    தொடர்ந்து மீள்வுஇலாதது ஒர்*  தொடர்ச்சி நல்க வேண்டுமே.    


    மண்ணை உண்டுஉமிழ்ந்து*  பின் இரந்து கொண்டுஅளந்து,*  மண்- 
    கண்ணுள் அல்லதுஇல்லைஎன்று*  வென்ற காலம் ஆயினாய்,*

    பண்ணை வென்ற இன்சொல் மங்கை*  கொங்கை தங்கு பங்கயக்- 
    கண்ண,*  நின்ன வண்ணம் அல்லதுஇல்லை*  எண்ணும் வண்ணமே.    


    கறுத்துஎதிர்ந்த காலநேமி*  காலனோடு கூட அன்று,* 
    அறுத்த ஆழி சங்குதண்டு*  வில்லும் வாளும் ஏந்தினாய்,*

    தொறுக்கலந்த ஊனம்அஃது*  ஒழிக்க அன்று குன்றம்முன்,* 
    பொறுத்த நின் புகழ்க்குஅலால் ஒர்*  நேசம்இல்லை நெஞ்சமே!


    காய்சினத்த காசிமன்னன்*  வக்கரன் பவுண்டிரன்,* 
    மாசினத்த மாலிமான்*  சுமாலிகேசி தேனுகன்,* 

    நாசம்உற்று வீழநாள்*  கவர்ந்த நின் கழற்குஅலால்,* 
    நேசபாசம் எத்திறத்தும்*  வைத்திடேன் எம் ஈசனே! 


    கேடுஇல் சீர் வரத்தினாய்க்*  கெடும்வரத்து அயன் அரன், 
    நாடினோடு நாட்டம்ஆயிரத்தன்*  நாடு நண்ணினும்,* 

    வீடதுஆன போகம்எய்தி*  வீற்றிருந்த போதிலும்*, 
    கூடும்ஆசை அல்லதுஒன்று*  கொள்வனோ? குறிப்பிலே?  


    சுருக்குவாரை இன்றியே*  சுருங்கினாய் சுருங்கியும்,* 
    பெருக்குவாரை இன்றியே*  பெருக்கமெய்து பெற்றியோய்,*  

    செருக்குவார்கள் தீக்குணங்கள்*  தீர்த்ததேவ தேவன்என்று,* 
    இருக்குவாய் முனிக்கணங்கள்*  ஏத்த யானும் ஏத்தினேன்.  


    தூயனாயும் அன்றியும்*  சுரும்புஉலாவு தண்துழாய்,* 
    மாய!நின்னை நாயினேன்*  வணங்கி வாழ்த்தும் ஈதெலாம்,*

    நீயும் நின் குறிப்பினிற்*  பொறுத்து நல்கு வேலைநீர்* 
    பாயலோடு பத்தர்சித்தம்*  மேய வேலை வண்ணனே! 


    வைது நின்னை வல்லவா*  பழித்தவர்க்கும் மாறில்போர்* 
    செய்து நின்ன செற்றத் தீயில்*  வெந்தவர்க்கும் வந்து உனை*

    எய்தல்ஆகும் என்பர் ஆதலால்*  எம்மாய நாயினேன்,* 
    செய்தகுற்றம் நற்றமாக*  வேகொள் ஞால நாதனே!  


    வாள்கள்ஆகி நாள்கள் செல்ல*  நோய்மைகுன்றி மூப்புஎய்தி,* 
    மாளும்நாள் அதுஆதலால்*  வணங்கி வாழ்த்து என் நெஞ்சமே,*

    ஆளதுஆகும் நன்மைஎன்று*  நன்குணர்ந்துஅது அன்றியும்,* 
    மீள்வுஇலாத போகம்*  நல்க வேண்டும் மால பாதமே.    


    சலம்கலந்த செஞ்சடைக்*  கறுத்தகண்டன் வெண்தலைப்* 
    புலன்கலங்க உண்ட பாதகத்தன்*  வன் துயர் கெட,*

    அலங்கல் மார்வில் வாச நீர்*  கொடுத்தவன் அடுத்தசீர்,* 
    நலங்கொள் மாலை நண்ணும் வண்ணம்*  எண்ணு வாழி நெஞ்சமே!


    ஈனமாய எட்டும் நீக்கி*  ஏதம்இன்றி மீதுபோய்,* 
    வானம்ஆள வல்லையேல்*  வணங்கி வாழ்த்து என் நெஞ்சமே,*

    ஞானம்ஆகி ஞாயிறுஆகி*  ஞாலமுற்றும் ஓர்எயிற்று,* 
    ஏனமாய் இடந்த மூர்த்தி*  எந்தை பாதம் எண்ணியே. 


    அத்தன்ஆகி அன்னைஆகி*  ஆளும் எம் பிரானுமாய்,* 
    ஒத்துஒவ்வாத பல் பிறப்புஒழித்து*  நம்மை ஆட்கொள்வான்,*

    முத்தனார் முகுந்தனார்*  புகுந்து நம்முள் மேவினர்,* 
    எத்தினால் இடர்க் கடற்கிடத்தி*  ஏழை நெஞ்சமே!  (2)


    மாறுசெய்த வாள்அரக்கன்*  நாள்உலப்ப அன்றுஇலங்கை* 
    நீறுசெய்து சென்று கொன்று*  வென்றி கொண்ட வீரனார்,*

    வேறுசெய்து தம்முள் என்னை*  வைத்திடாமையால்,*  நமன்- 
    கூறுசெய்து கொண்டுஇறந்த*  குற்றம் எண்ண வல்லனே.  


    அச்சம் நோயொடு அல்லல்*  பல்பிறப்பு அவாய மூப்புஇவை,* 
    வைத்த சிந்தை வைத்த ஆக்கை*  மாற்றி வானில் ஏற்றுவான்,*

    அச்சுதன் அனந்த கீர்த்தி*  ஆதி அந்தம் இல்லவன்,* 
    நச்சு நாகனைக் கிடந்த*  நாதன் வேத கீதனே. 


    சொல்லினும் தொழிற்கணும்*  தொடக்குஅறாத அன்பினும்,* 
    அல்லும் நன்பகலினோடும்*  ஆன மாலை காலையும்,*

    அல்லி நாள்-மலர்க் கிழத்தி*  நாத!பாத போதினைப்,* 
    புல்லிஉள்ளம் விள்வுஇலாது*  பூண்டு மீண்டது இல்லையே.


    பொன்னிசூழ் அரங்கம்மேய*  பூவைவண்ண! மாய!கேள்,* 
    என்னதுஆவி என்னும்*  வல்வினையினுட் கொழுந்துஎழுந்து,*

    உன்னபாதம் என்னநின்ற*  ஒண்சுடர்க் கொழுமலர்,* 
    மன்ன வந்து பூண்டு*  வாட்டம்இன்றி எங்கும் நின்றதே.  (2)


    இயக்குஅறாத பல்பிறப்பில்*  என்னை மாற்றி இன்று வந்து,* 
    உயக்கொள் மேக வண்ணன் நண்ணி*  என்னிலாய தன்னுளே,*

    மயக்கினான் தன் மன்னுசோதி*  ஆதலால் என் ஆவிதான்,- 
    இயக்குஎலாம் அறுத்து*  அறாத இன்ப வீடு பெற்றதே  (2)