பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
முன்னை வினையகல மூங்கிற் குடியமுதன்
பொன்னங் கழற்கமலப் போதிரண்டும் என்னுடைய
சென்னிக் கணியாகச் சேர்த்தினேன் தென்புலத்தார்க்
கென்னுக் கடவுடையேன் யான்?
 
கட்டளைக் கலித்துறை
நயந்தரு பேரின்ப மெல்லாம் பழுதென்று நண்ணினர்பால்
சயந்தரு கீர்த்தி இராமா னுசமுனி தாளிணைமேல்
உயர்ந்த குணத்துத் திருவரங் கத்தமுது μங்கும்அன்பால்
இயம்பும் கலித்துறை அந்தாதி μத இசைநெஞ்சமே!

சொல்லின் தொகைகொண் டுனதடிப் போதுக்குத் தொண்டுசெய்யும்
நல்லன்பர் ஏத்துமுன் நாமமெல் லாமென்றன் நாவினுள்ளே
அல்லும் பகலும் அமரும் படிநல்கு அறுசமயம்
வெல்லும் பரம இராமா னுச! இதென் விண்ணப்பமே.

இனியென் குறைநமக் கெம்பெரு மானார் திருநாமத்தால்
முனிதந்த நூற்றெட்டுச் சாவித் திரியென்னும் நுண்பொருளை
கனிதந்த செஞ்சொல் கலித்துறை யந்தாதி பாடித்தந்தான்
புனிதன் திருவரங் கத்தமு தாகிய புண்ணியனே.

   பாசுரங்கள்


    நல்லார் பரவும் இராமாநுசன்,*  திரு நாமம் நம்ப-
    வல்லார் திறத்தை*  மறவாதவர்கள் எவர்,*  அவர்க்கே-

    எல்லாவிடத்திலும் என்றும் எப்போதிலும் எத்தொழும்பும்*
    சொல்லால் மனத்தால்*  கருமத்தினால் செய்வன் சோர்வின்றியே.


    சோர்வின்றி உன்தன் துணையடிக் கீழ்,*  தொண்டு பட்டவர்பால்- 
    சார்வின்றி நின்ற எனக்கு,*  அரங்கன் செய்ய தாளிணைகள்-

    பேர்வின்றி இன்று பெறுத்தும் இராமாநுச!*  இனிஉன்- 
    சீர் ஒன்றிய கருணைக்கு,*  இல்லை மாறு தெரிவுறிலே.


    தெரிவுற்ற ஞாலம் செறியப் பெறாது,*  வெந் தீவினையால்- 
    உருவற்ற ஞானத்து உழல்கின்ற என்னை,*  ஒரு பொழுதில்-

    பொருவற்ற கேள்வியன் ஆக்கி நின்றான் என்ன புண்ணியனோ!* 
    தெரிவுற்ற கீர்த்தி,*  இராமாநுசன் என்னும் சீர் முகிலே.


    சீர்கொண்டு பேரறம் செய்து,*  நல்வீடு செறிதும் என்னும்* 
    பார்கொண்ட மேன்மையர் கூட்டனல்லேன்,*  உன் பதயுகமாம்-

    ஏர்கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன்*  உன்னுடைய- 
    கார்கொண்ட வண்மை*  இராமாநுச! இது கண்டுகொள்ளே.


    கண்டுகொண்டேன் எம் இராமாநுசன் தன்னை*  காண்டலுமே-
    தொண்டு கொண்டேன்*  அவன் தொண்டர் பொற்றாளில்*  என் தொல்லை வெம்நோய்-

    விண்டு கொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை*  வாய்மடுத்து இன்று-
    உண்டு கொண்டேன்,*  இன்னம் உற்றன ஓதில் உலப்பில்லையே.


    ஓதிய வேதத்தின் உட்பொருளாய்,*  அதன் உச்சிமிக்க-
    சோதியை*  நாதன் என அறியாது உழல்கின்ற தொண்டர்*

    பேதைமை தீர்த்த இராமாநுசனைத் தொழும்பெரியோர்*
    பாதமல்லால் என்தன் ஆர் உயிர்க்கு*  யாதொன்றும் பற்றில்லையே.


    பற்றா மனிசரைப் பற்றி*  அப்பற்று விடாதவரே- 
    உற்றார் என உழன்று ஓடி நையேன் இனி,*  ஒள்ளியநூல்-

    கற்றார் பரவும் இராமாநுசனை*  கருதும் உள்ளம்-
    பெற்றார் எவர்,*  அவர் எம்மை நின்றளும் பெரியவரே.


    பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும்*  தன் குணங்கட்கு
    உரியசொல் என்றும்*  உடையவன் என்றென்று*  உணர்வில் மிக்கோர்-

    தெரியும் வண் கீர்த்தி இராமாநுசன்*  மறை தேர்ந்துலகில்-
    புரியும் நல்ஞானம்*  பொருந்தாதவரை பொரும் கலியே.


    கலிமிக்க செந்நெல் கழனிக் குறையல்*  கலைப் பெருமான்- 
    ஒலிமிக்க பாடலை உண்டு*  தன்னுள்ளம் தடித்து,*  அதனால்-

    வலிமிக்க சீயம் இராமாநுசன்*  மறைவாதியராம்* 
    புலிமிக்கது என்று,*  இப்புவனத்தில் வந்தமை போற்றுவனே.


    போற்றரும் சீலத்து இராமாநுச*  நின் புகழ் தெரிந்து-
    சாற்றுவனேல்*  அது தாழ்வு அது தீரில்,*  உன் சீர்தனக்கோர்-

    ஏற்றமென்றே கொண்டிருக்கிலும்* என்மனம் ஏத்திய;ன்றி 
    ஆற்றகில்லாது,* இதற்கு என்னினைவாய் என்றிட்டு அஞ்சுவனே.


    நினையார் பிறவியை நீக்கும் பிரானை,*  இந் நீணிலத்தே-
    எனையாள வந்த இராமாநுசனை*  இருங் கவிகள்-

    புனையார் புனையும் பெரியவர் தாள்களில்*  பூந்தொடையல்- 
    வனையார்*  பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள் சுரந்தே.


    மருள்சுரந்து ஆகம வாதியர் கூறும்,*  அவப் பொருளாம்-
    இருள்சுரந்து எய்த்த*  உலகிருள் நீங்கத்,*  தன் ஈண்டியசீர்-

    அருள்சுரந்து எல்லா உயிர்கட்கும் நாதன்*  அரங்கனென்னும் 
    பொருள் சுரந்தான்,*  எம் இராமாநுசன் மிக்க புண்ணியனே. 


    புண்ணிய நோன்பு புரிந்துமிலேன்,*  அடி போற்றி செய்யும்-
    நுண்ணருங் கேள்வி*  நுவன்றுமிலேன்,*  செம்மை நூற்புலவர்க்கு-

    எண்ணருங் கீர்த்தி இராமாநுச!  இன்று நீபுகுந்து*  என்- 
    கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும்*  நின்ற இக் காரணம் கட்டுரையே.


    கட்டப் பொருளை மறைப்பொருள் என்று*  கயவர்சொல்லும்- 
    பெட்டைக் கெடுக்கும் பிரான் அல்லனே,*  என் பெரு வினையைக்-

    கிட்டி கிழங்கொடு தன்னருள் என்னும் ஒள் வாளுருவி* 
    வெட்டிக் களைந்த*  இராமாநுசன் என்னும் மெய்த்தவனே.


    தவம் தரும் செல்வம் தகவும் தரும்,*  சலியாப்பிறவிப்-
    பவம் தரும்*  தீவினை பாற்றித் தரும்*  பரந்தாமம் என்னும்-

    திவம்தரும் தீதில் இராமாநுசன் தன்னைச் சார்ந்தவர்கட்கு*
    உவந்தருந்தேன்,*  அவன் சீரன்றி யானென்றும் உள்மகிழ்ந்தே.


    உண்ணின்று உயிர்களுக்கு உற்றனவே செய்து*  அவர்க்குஉயவே-
    பண்ணும் பரனும் பரிவிலனாம்படி*  பல்லுயிர்க்கும்-

    விண்ணின் தலைநின்று வீடளிப்பான் எம் இராமாநுசன்*
    மண்ணின் தலத்து உதித்து*  உய்மறை நாலும் வளர்த்தனனே.


    வளரும் பிணிகொண்ட வல்வினையால்*  மிக்க நல்வினையில்-
    கிளரும் துணிவு கிடைத்தறியாது*  முடைத்தலையூன்-

    தளரும் அளவும் தரித்தும் விழுந்தும் தனிதிரிவேற்கு*
    உளர் எம் இறைவர்*  இராமாநுசன் தன்னை உற்றவரே.


    தன்னை உற்றாட்செய்யும் தன்மையினோர்,*  மன்னு தாமரைத் தாள்- 
    தன்னை உற்றாட்செய்ய*  என்னை உற்றான் இன்று*  தன்தகவால்- 

    தன்னையுற்றார் அன்றி தன்மை உற்றாரில்லை என்றறிந்து* 
    தன்னை உற்றாரை*  இராமாநுசன் குணம் சாற்றிடுமே.


    இடுமே இனிய சுவர்க்கத்தில்*  இன்னும் நரகிலிட்டுச்-
    சுடுமே?  அவற்றை*  தொடர்தரு தொல்லை*  சுழல்பிறப்பில்-

    நடுமே? இனி நம் இராமாநுசன் நம்மை நம்வசத்தே*
    விடுமே? சரணமென்றால்,*  மனமே! நையல் மேவுதற்கே? (2)


    தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும்*  தாழ்சடையோன்- 
    சொற்கற்ற சோம்பரும்*  சூனிய வாதரும்*  நான்மறையும்-

    நிற்கக் குறும்புசெய் நீசரும் மாண்டனர்*  நீள் நிலத்தே- 
    பொற்கற்பகம்,*  எம் இராமானுச முனி போந்தபின்னே.


    போந்ததென் நெஞ்சென்னும் பொன்வண்டு*  உனதடிப் போதில் ஒண்சீ- 
    ராம் தெளி தேன் உண்டு*  அமர்ந்திட வேண்டி,*  நின் பாலதுவே- 

    ஈந்திட வேண்டும் இராமாநுச! இது அன்றியொன்றும்*  
    மாந்த கில்லாது,*  இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே.   


    மயக்கும் இரு வினை வல்லியில் பூண்டு*  மதி மயங்கித்- 
    துயக்கும் பிறவியில்*  தோன்றிய என்னை*  துயரகற்றி- 

    உயக்கொண்டு நல்கும் இராமாநுச! என்றது உன்னையுன்னி* 
    நயக்கும் அவர்க்கு இது இழுக்கென்பர்,*  நல்லவர் என்றும்நைந்தே.


    நையும் மனம் உன் குணங்களை உன்னி*  என் நாஇருந்துஎம்-
    ஐயன் இராமாநுசன் என்று அழைக்கும்*  அருவினையேன்-

    கையும் தொழும் கண் கருதிடுங் காண க் கடல்புடைசூழ்*
    வையம் இதனில்*  உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே? 


    வளர்ந்த*  வெங்கோப மடங்கல் ஒன்றாய் அன்று வாளவுணன்- 
    கிளர்ந்த*  பொன்னாகம் கிழித்தவன்*  கீர்த்திப் பயிரெழுந்து- 

    விளைந்திடும் சிந்தை இராமாநுசன் என்தன் மெய்வினைநோய்* 
    களைந்து நல் ஞானம் அளித்தனன்*  கையில் கனியென்னவே.


    கையில் கனியென்னக்*   கண்ணனைக் காட்டித் தரிலும்*  உன் தன்- 
    மெய்யில் பிறங்கிய*  சீரன்றி வேண்டிலன் யான்,*  நிரயத்- 

    தொய்யில் கிடக்கிலும் சோதி விண்  சேரிலும் இவ்வருள்நீ* 
    செய்யில் தரிப்பன்*  இராமாநுச! என் செழுங் கொண்டலே!


    செழுந்திரைப் பாற்கடல் கண்துயில் மாயன்* திருவடிக்கீழ்-
    விழுந்திருப்பார் நெஞ்சில்*  மேவு நல்ஞானி*   நல் வேதியர்கள்-

    தொழும் திருப்பாதன் இராமாநுசனைத் தொழும் பெரியோர்*
    எழுந்திரைத்து ஆடும் இடம்*  அடியேனுக்கு இருப்பிடமே. (2)  


    இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம்* மாலிருஞ் சோலையென்னும்‍- 
    பொருப்பிடம்* மாயனுக்கு என்பர் நல்லோர்,* அவை தன்னொடு வந்து‍-

    இருப்பிடம் மாயன் இராமாநுசன் மனத்து*  இன்று அவன்வந்து-  
    இருப்பிடம்*  என்தன் இதயத்துள்ளே தனக்கு இன்புறவே. (2)


    இன்புற்ற சீலத்து இராமானுச,*  என்றும் எவ்விடத்தும்- 
    என்புற்ற நோய்*  உடல் தோறும் பிறந்து இறந்து*  எண்ணரிய‍‍-

    துன்புற்று வீயினும் சொல்லுவது ஒன்றுண்டு*  உன் தொண்டர்கட்கே‍- 
    அன்புற்று இருக்கும்படி,*  என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்தே. (2) 


    அங்கயல்பாய்  வயல் தென் அரங்கன்,*  அணி ஆகமன்னும்- 
    பங்கய மாமலர்*  பாவையைப் போற்றுதும்   பத்தியெல்லாம்- 

    தங்கியது தென்னத் தழைத்து நெஞ்சே!  நம் தலைமிசையே *
    பொங்கிய கீர்த்தி *  இராமாநுசன் அடிப் பூ மன்னவே. (2)