பிரபந்த தனியன்கள்

சீராரும் மாடத் திருக்கோவ லூரதனுள்
காரார் கருமுகிலைக் காணப்புக்கு, - μராத்
திருக்கண்டேன் என்றுரைத்த சீரான் கழலே,
உரைக்கண்டாய் நெஞ்சே. உகந்து.

   பாசுரங்கள்


    சிலம்பும் செறிகழலும் சென்றுஇசைப்ப,*  விண்ஆறு 
    அலம்பிய சேவடிபோய்,*  அண்டம் - புலம்பியதோள்*

    எண்திசையும் சூழ*  இடம்போதாது என்கொலோ,*
    வண்துழாய் மால்அளந்த மண்?


    மண்உண்டும்*  பேய்ச்சி முலைஉண்டும் ஆற்றாதாய்,* 
    வெண்ணெய் விழுங்க வெகுண்டு,*  ஆய்ச்சி - கண்ணிக்

    கயிற்றினால் கட்ட*  தான் கட்டுண்டு இருந்தான்,* 
    வயிற்றினோடு ஆற்றா மகன். 


    மகன்ஒருவர்க்கு அல்லாத*  மாமேனி மாயன்,*
    மகன்ஆம் அவன்மகன் தன்*  காதல் மகனைச்*

    சிறைசெய்த வாணன்தோள்*  செற்றான் கழலே* 
    நிறைசெய்து என் நெஞ்சே! நினை.


    நினைத்துஉலகில் ஆர்தெளிவார்*  நீண்ட திருமால்,*
    அனைத்துஉலகும் உள்ஒடுக்கி ஆல்மேல்,* - கனைத்துஉலவு

    வெள்ளத்துஓர் பிள்ளையாய்*  மெள்ளத் துயின்றானை,*
    உள்ளத்தே வைநெஞ்சமே! உய்த்து.


    உய்த்துஉணர்வு என்னும்*  ஒளிகொள் விளக்குஏற்றி,* 
    வைத்துஅவனை நாடி வலைப்படுத்தேன்,* - மெத்தெனவே

    நின்றான் இருந்தான்*  கிடந்தான் என் நெஞ்சத்து,* 
    பொன்றாமை மாயன் புகுந்து.  


    புகுந்துஇலங்கும்*  அந்திப் பொழுதத்து,* அரியாய் 
    இகழ்ந்த*  இரணியனது ஆகம்,* - சுகிர்ந்துஎங்கும் 

    சிந்தப் பிளந்த*  திருமால் திருவடியே* 
    வந்தித்து என்நெஞ்சமே! வாழ்த்து.


    வாழ்த்திய வாயராய்*  வானோர் மணிமகுடம்* 
    தாழ்த்தி வணங்கத் தழும்பாமே,* - கேழ்த்த

    அடித்தாமரை*  மலர்மேல் மங்கை மணாளன்,* 
    அடித்தாமரைஆம் அலர்.   


    அலர்எடுத்த உந்தியான்*  ஆங்குஎழிலஆய,* 
    மலர்எடுத்த மாமேனி மாயன்,* - அலர்எடுத்த

    வண்ணத்தான் மாமலரான்*  வார்சடையான்*  என்றுஇவர்கட்கு 
    எண்ணத்தான்ஆமோ இமை? 


    இமம்சூழ் மலையும்*  இருவிசும்பும் காற்றும்,* 
    அமம்சூழ்ந்துஅற விளங்கித் தோன்றும்,* - நமன்சூழ்

    நரகத்து*  நம்மை நணுகாமல் காப்பான்,* 
    துரகத்தை வாய்பிளந்தான் தொட்டு.   


    தொட்ட படைஎட்டும்*  தோலாத வென்றியான்,* 
    அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று,* - குட்டத்துக்

    கோள்முதலை துஞ்ச*  குறித்துஎறிந்த சக்கரத்தான்* 
    தாள்முதலே நங்கட்குச் சார்வு  (2)


    சார்வு நமக்குஎன்றும் சக்கரத்தான்,*  தண்துழாய்த் 
    தார்வாழ்*  வரைமார்பன் தான்முயங்கும்,* - கார்ஆர்ந்த

    வான்அமரும் மின்இமைக்கும்*  வண்தாமரைநெடுங்கண்,* 
    தேன்அமரும் பூமேல் திரு.  (2)