பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    வைகல் பூங் கழிவாய்*  வந்து மேயும் குருகினங்காள்* 
    செய் கொள் செந்நெல் உயர்*  திருவண்வண்டூர் உறையும்* 

    கை கொள் சக்கரத்து*  என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு* 
    கைகள் கூப்பி சொல்லீர்*  வினையாட்டியேன் காதன்மையே*. (2)   


    காதல் மென் பெடையோடு*  உடன் மேயும் கரு நாராய்* 
    வேத வேள்வி ஒலி முழங்கும்*  தண் திருவண்வண்டூர்* 

    நாதன் ஞாலம் எல்லாம் உண்ட*  நம் பெருமானைக் கண்டு* 
    பாதம் கைதொழுது பணியீர்*  அடியேன் திறமே*.


    திறங்கள் ஆகி எங்கும்*  செய்கள் ஊடு உழல் புள்ளினங்காள்* 
    சிறந்த செல்வம் மல்கு*  திருவண்வண்டூர் உறையும்* 

    கறங்கு சக்கரக் கைக்*  கனிவாய்ப் பெருமானைக் கண்டு* 
    இறங்கி நீர் தொழுது பணியீர்*  அடியேன் இடரே*


    இடர் இல் போகம் மூழ்கி*  இணைந்து ஆடும் மட அன்னங்காள்!* 
    விடல் இல் வேத ஒலி முழங்கும்*  தண் திருவண்வண்டூர்* 

    கடலின் மேனிப்பிரான்*  கண்ணனை நெடுமாலைக் கண்டு* 
    உடலம் நைந்து ஒருத்தி*  உருகும் என்று உணர்த்துமினே*


    உணர்த்தல் ஊடல் உணர்ந்து*  உடன் மேயும் மட அன்னங்காள்* 
    திணர்த்த வண்டல்கள்மேல்*  சங்கு சேரும் திருவண்வண்டூர்* 

    புணர்த்த பூந் தண் துழாய்முடி*  நம் பெருமானைக் கண்டு* 
    புணர்த்த கையினராய்*  அடியேனுக்கும் போற்றுமினே*  


    போற்றி யான் இரந்தேன்*  புன்னைமேல் உறை பூங் குயில்காள்* 
    சேற்றில் வாளை துள்ளும்*  திருவண்வண்டூர் உறையும்* 

    ஆற்றல் ஆழி அங்கை*  அமரர் பெருமானைக் கண்டு* 
    மாற்றம் கொண்டருளீர்*  மையல் தீர்வது ஒருவண்ணமே*


    ஒருவண்ணம் சென்று புக்கு*  எனக்கு ஒன்று உரை ஒண் கிளியே* 
    செரு ஒண் பூம் பொழில் சூழ்*  செக்கர் வேலைத் திருவண்வண்டூர்* 

    கரு வண்ணம் செய்யவாய்*  செய்ய கண் செய்ய கை செய்யகால்* 
    செரு ஒண் சக்கரம் சங்கு*  அடையாளம் திருந்தக் கண்டே*.  


    திருந்தக் கண்டு எனக்கு ஒன்று உரையாய்*  ஒண் சிறு பூவாய்* 
    செருந்தி ஞாழல் மகிழ்*  புன்னை சூழ் தண் திருவண்வண்டூர்*

    பெரும் தண் தாமரைக்கண்*  பெரு நீள் முடி நால் தடந்தோள்* 
    கருந் திண் மா முகில் போல்*  திருமேனி அடிகளையே*  


    அடிகள் கைதொழுது*  அலர்மேல் அசையும் அன்னங்காள்* 
    விடிவை சங்கு ஒலிக்கும்*  திருவண்வண்டூர் உறையும்* 

    கடிய மாயன் தன்னை*  கண்ணனை நெடுமாலைக் கண்டு* 
    கொடிய வல்வினையேன்*  திறம் கூறுமின் வேறுகொண்டே*


    வேறுகொண்டு உம்மை யான் இரந்தேன்*  வெறி வண்டினங்காள்* 
    தேறு நீர்ப் பம்பை*  வடபாலைத் திருவண்வண்டூர்* 

    மாறு இல் போர் அரக்கன்*  மதிள் நீறு எழச் செற்று உகந்த* 
    ஏறு சேவகனார்க்கு*  என்னையும் உளள் என்மின்களே*  


    மின் கொள் சேர் புரிநூல் குறள் ஆய்*  அகல் ஞாலம் கொண்ட* 
    வன் கள்வன் அடிமேல்*  குருகூர்ச் சடகோபன் சொன்ன* 

    பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும்*  திருவண்வண்டூர்க்கு* 
    இன்கொள் பாடல் வல்லார்*  மதனர் மின்னிடை யவர்க்கே* (2)


    மின்இடை மடவார்கள் நின்அருள் சூடுவார்*  முன்பு நான் அது அஞ்சுவன்* 
    மன்உடை இலங்கை*  அரண் காய்ந்த மாயவனே* 

    உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன்*  இனி அதுகொண்டு செய்வது என்? 
    என்னுடைய பந்தும் கழலும்*  தந்து போகு நம்பீ!*. (2) 


    போகு நம்பீ உன் தாமரைபுரை கண் இணையும்*  செவ்வாய் முறுவலும்* 
    ஆகுலங்கள் செய்ய*  அழிதற்கே நோற்றோமேயாம்?* 

    தோகை மாமயிலார்கள் நின் அருள் சூடுவார்*  செவி ஓசை வைத்து எழ*
    ஆகள் போகவிட்டு*  குழல் ஊது போயிருந்தே*.          


    போயிருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை நம்பீ!*  நின்செய்ய- 
    வாய் இருங் கனியும் கண்களும்*  விபரீதம் இந் நாள்* 

    வேய் இரும் தடம் தோளினார்*  இத்திருவருள் பெறுவார்எவர் கொல்*  
    மா இரும் கடலைக் கடைந்த*  பெருமானாலே?*         


    ஆலின் நீள் இலை ஏழ் உலகும் உண்டு*  அன்று நீ கிடந்தாய்*  உன் மாயங்கள்- 
    மேலை வானவரும் அறியார்*  இனி எம் பரமே?* 

    வேலின் நேர் தடம் கண்ணினார்*  விளையாடு சூழலைச் சூழவே நின்று* 
    காலி மேய்க்க வல்லாய்!*  எம்மை நீ கழறேலே*.


    கழறேல் நம்பீ!*  உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும்*  திண் சக்கர- 
    நிழறு தொல் படையாய்!*  உனக்கு ஒன்று உணர்த்துவன் நான்* 

    மழறு தேன் மொழியார்கள் நின் அருள் சூடுவார் மனம் வாடி நிற்க*  எம்- 
    குழறு பூவையொடும்*  கிளியோடும் குழகேலே*.  


    குழகி எங்கள் குழமணன்கொண்டு*  கோயின்மை செய்து கன்மம் ஒன்று இல்லை* 
    பழகி யாம் இருப்போம்*  பரமே இத் திரு அருள்கள்?*

    அழகியார் இவ் உலகம் மூன்றுக்கும்*  தேவிமை ஈதகுவார் பலர் உளர்* 
    கழகம் ஏறேல் நம்பீ!*  உனக்கும் இளைதே கன்மமே*.


    கன்மம் அன்று எங்கள் கையில் பாவை பறிப்பது*  கடல் ஞாலம் உண்டிட்ட* 
    நின்மலா! நெடியாய்!*  உனக்கேலும் பிழை பிழையே* 

    வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி*  அது கேட்கில் என் ஐம்மார்* 
    தன்ம பாவம் என்னார்*  ஒரு நான்று தடி பிணக்கே*.


    பிணக்கி யாவையும் யாவரும்*  பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்* 
    கணக்கு இல் கீர்த்தி வெள்ளக்*  கதிர் ஞான மூர்த்தியினாய், 

    இணக்கி எம்மை எம் தோழிமார்*  விளையாடப் போதுமின் என்னப் போந்தோமை* 
    உணக்கி நீ வளைத்தால்*  என் சொல்லார் உகவாதவரே?* 


    உகவையால் நெஞ்சம் உள் உருகி*  உன் தாமரைத் தடம் கண் விழிகளின்* 
    அக வலைப் படுப்பான்*  அழித்தாய் உன் திருவடியால்* 

    தகவு செய்திலை எங்கள் சிற்றிலும்*  யாம் அடு சிறு சோறும் கண்டு*  நின்- 
    முக ஒளி திகழ*  முறுவல் செய்து நின்றிலையே*.


    நின்று இலங்கு முடியினாய்!*  இருபத்தோர் கால் அரசு களைகட்ட* 
    வென்றி நீள்மழுவா!*  வியன் ஞாலம் முன் படைத்தாய்!* 

    இன்று இவ் ஆயர் குலத்தை வீடு உய்யத் தோன்றிய*  கருமாணிக்கச் சுடர்* 
    நின்தன்னால் நலிவே படுவோம் என்றும்*  ஆய்ச்சியோமே*.       


    ஆய்ச்சி ஆகிய அன்னையால்*  அன்று வெண்ணெய் வார்த்தையுள்*  சீற்ற முண்டு அழு- 
    கூத்த அப்பன் தன்னை*  குருகூர்ச் சடகோபன்* 

    ஏத்திய தமிழ் மாலை*  ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசை யொடும்* 
    நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு*  இல்லை நல்குரவே*. (2)  


    நல்குரவும் செல்வும்*  நரகும் சுவர்க்கமும் ஆய்* 
    வெல்பகையும் நட்பும்*  விடமும் அமுதமும் ஆய்* 

    பல்வகையும் பரந்த*  பெருமான் என்னை ஆள்வானை* 
    செல்வம் மல்குகுடித்*  திருவிண்ணகர்க் கண்டேனே*. (2) 


    கண்ட இன்பம் துன்பம்*  கலக்கங்களும் தேற்றமும் ஆய்* 
    தண்டமும் தண்மையும்*  தழலும் நிழலும் ஆய்* 

    கண்டுகோடற்கு அரிய*  பெருமான் என்னை ஆள்வான் ஊர்* 
    தெண் திரைப் புனல்சூழ்*  திருவிண்ணகர் நல் நகரே* 


    நகரமும் நாடுகளும்*  ஞானமும் மூடமும் ஆய்* 
    நிகர் இல் சூழ் சுடர் ஆய் இருள் ஆய்*  நிலன் ஆய் விசும்பு ஆய்* 

    சிகர மாடங்கள் சூழ்*  திருவிண்ணகர் சேர்ந்த பிரான்* 
    புகர் கொள் கீர்த்தி அல்லால் இல்லை*  யாவர்க்கும் புண்ணியமே*.   


    புண்ணியம் பாவம்*  புணர்ச்சி பிரிவு என்று இவை ஆய்* 
    எண்ணம் ஆய் மறப்பு ஆய்*  உண்மை ஆய் இன்மை ஆய் அல்லன் ஆய்* 

    திண்ண மாடங்கள் சூழ்*  திருவிண்ணகர் சேர்ந்த பிரான்* 
    கண்ணன் இன் அருளே*  கண்டுகொள்மின்கள் கைதவமே* 


    கைதவம் செம்மை*  கருமை வெளுமையும் ஆய்* 
    மெய் பொய் இளமை*  முதுமை புதுமை பழமையும் ஆய்* 

    செய்த திண் மதிள் சூழ்*  திருவிண்ணகர் சேர்ந்த பிரான்* 
    பெய்த காவு கண்டீர்*  பெரும் தேவு உடை மூவுலகே*    


    மூவுலகங்களும் ஆய்*  அல்லன் ஆய் உகப்பு ஆய் முனிவு ஆய்* 
    பூவில் வாழ் மகள் ஆய்*  தவ்வை ஆய் புகழ் ஆய் பழி ஆய்* 

    தேவர் மேவித் தொழும்*  திருவிண்ணகர் சேர்ந்த பிரான்* 
    பாவியேன் மனத்தே*  உறைகின்ற பரஞ்சுடரே*.


    பரம் சுடர் உடம்பு ஆய்*  அழுக்குப் பதித்த உடம்பு ஆய்* 
    கரந்தும் தோன்றியும் நின்றும்*  கைதவங்கள் செய்தும்*  விண்ணோர்- 

    சிரங்களால் வணங்கும்*  திருவிண்ணகர் சேர்ந்த பிரான்* 
    வரம் கொள் பாதம் அல்லால் இல்லை*  யாவர்க்கும் வன் சரணே*. 


    வன்சரண் சுரர்க்கு ஆய்*  அசுரர்க்கு வெம் கூற்றமும் ஆய்* 
    தன்சரண் நிழற்கீழ்*  உலகம் வைத்தும் வையாதும் 

    தென்சரண் திசைக்குத்*  திருவிண்ணகர் சேர்ந்த பிரான்* 
    என்சரண் என் கண்ணன்*  என்னை ஆளுடை என் அப்பனே*


    என் அப்பன் எனக்கு ஆய்*  இகுள் ஆய் என்னைப் பெற்றவள் ஆய்* 
    பொன் அப்பன் மணி அப்பன்*  முத்து அப்பன் அன் அப்பனும் ஆய்*

    மின்னப் பொன் மதிள் சூழ்*  திருவிண்ணகர் சேர்ந்த அப்பன்* 
    தன் ஒப்பார் இல் அப்பன்*  தந்தனன் தன தாள் நிழலே*. (2) 


    நிழல் வெய்யில் சிறுமை பெருமை*  குறுமை நெடுமையும் ஆய்* 
    சுழல்வன நிற்பன*  மற்றும் ஆய் அவை அல்லனும் ஆய்* 

    மழலை வாய் வண்டு வாழ்*  திருவிண்ணகர் மன்னு பிரான்* 
    கழல்கள் அன்றி*  மற்றோர் களைகண் இலம் காண்மின்களே*


    காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த* 
    தாள் இணையன் தன்னைக்*  குருகூர்ச் சடகோபன் சொன்ன* 

    ஆணை ஆயிரத்துத்*  திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்* 
    கோணை இன்றி விண்ணோர்க்கு*  என்றும் ஆவர் குரவர்களே*. (2)        


    குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும்*  குன்றம் ஒன்று ஏந்தியதும்* 
    உரவு நீர்ப் பொய்கை நாகம் காய்ந்ததும்*  உட்பட மற்றும் பல* 

    அரவில் பள்ளிப் பிரான்தன்*  மாய வினைகளையே அலற்றி,* 
    இரவும் நன் பகலும் தவிர்கிலன்*  என்ன குறை எனக்கே?        


    கேயத் தீம்குழல் ஊதிற்றும் நிரைமேய்த்ததும்*  கெண்டை ஒண்கண்* 
    வாசப் பூங்குழல் பின்னை தோள்கள்*  மணந்ததும் மற்றும்பல,* 

    மாயக் கோலப் பிரான்தன்*  செய்கை நினைந்து மனம்குழைந்து,* 
    நேயத்தோடு கழிந்த போது*  எனக்கு எவ் உலகம் நிகரே?      


    நிகர் இல் மல்லரைச் செற்றதும்*  நிரை மேய்த்ததும் நீள் நெடும் கைச்,* 
    சிகர மா களிறு அட்டதும்*  இவை போல்வனவும் பிறவும்,* 

    புகர்கொள் சோதிப் பிரான்தன்*  செய்கை நினைந்து புலம்பி என்றும்* 
    நுகர வைகல் வைகப்பெற்றேன்*  எனக்கு என் இனி நோவதுவே?    


    நோவ ஆய்ச்சி உரலோடு ஆர்க்க*  இரங்கிற்றும் வஞ்சப் பெண்ணைச்* 
    சாவப் பால் உண்டதும்*  ஊர் சகடம் இறச் சாடியதும்,* 

    தேவக் கோலப் பிரான்தன்*  செய்கை நினைந்து மனம்குழைந்து,* 
    மேவக் காலங்கள் கூடினேன்*  எனக்கு என் இனி வேண்டுவதே?  


    வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும்*  வீங்கு இருள்வாய்- 
    பூண்டு*  அன்று அன்னைப் புலம்ப போய்*  அங்கு ஓர் ஆய்க்குலம் புக்கதும்* 

    காண்டல் இன்றி வளர்ந்து*  கஞ்சனைத் துஞ்ச வஞ்சம் செய்ததும்,* 
    ஈண்டு நான் அலற்றப்பெற்றேன்*  எனக்கு என்ன இகல் உளதே?    


    இகல் கொள் புள்ளைப் பிளந்ததும்*  இமில் ஏறுகள் செற்றதுவும்,* 
    உயர் கொள் சோலைக் குருந்து ஒசித்ததும்*  உட்பட மற்றும்பல,* 

    அகல் கொள் வையம் அளந்த மாயன்*  என்னப்பன் தன் மாயங்களே,* 
    பகல் இராப் பரவப் பெற்றேன்*  எனக்கு என்ன மனப் பரிப்பே?         


    மனப் பரிப்போடு அழுக்கு*  மானிட சாதியில் தான்பிறந்து,* 
    தனக்கு வேண்டு உருக்கொண்டு*  தான் தன சீற்றத்தினை முடிக்கும்,* 

    புனத் துழாய் முடி மாலை மார்பன்*  என் அப்பன் தன் மாயங்களே,* 
    நினைக்கும் நெஞ்சு உடையேன்*  எனக்கு இனி யார் நிகர் நீள் நிலத்தே?


    நீள் நிலத்தொடு வான் வியப்ப*  நிறை பெரும் போர்கள் செய்து* 
    வாணன் ஆயிரம் தோள் துணித்ததும்*  உட்பட மற்றும்பல,* 

    மாணி ஆய் நிலம் கொண்ட மாயன்*  என் அப்பன் தன் மாயங்களே* 
    காணும் நெஞ்சு உடையேன்*  எனக்கு இனி என்ன கலக்கம் உண்டே?


    கலக்க ஏழ் கடல் ஏழ்*  மலை உலகு ஏழும் கழியக் கடாய்* 
    உலக்கத் தேர்கொடு சென்ற மாயமும்*  உட்பட மற்றும் பல,* 

    வலக்கை ஆழி இடக்கைச் சங்கம்*  இவை உடை மால்வண்ணனை,* 
    மலக்கும் நா உடையேற்கு*  மாறு உளதோ இம் மண்ணின் மிசையே?


    மண்மிசைப் பெரும் பாரம் நீங்க*  ஓர் பாரத மா பெரும் போர் 
    பண்ணி,*  மாயங்கள் செய்து, சேனையைப் பாழ்பட*  நூற்றிட்டுப் போய்,* 

    விண்மிசைத் தன தாமமேபுக*  மேவிய சோதிதன்தாள்,* 
    நண்ணி நான் வணங்கப்பெற்றேன்*  எனக்கு ஆர்பிறர் நாயகரே?       


    நாயகன் முழு ஏழ் உலகுக்கும் ஆய்*  முழு ஏழ் உலகும்,*  தன் 
    வாயகம் புக வைத்து உமிழ்ந்து*  அவை ஆய் அவை அல்லனும் ஆம்,* 

    கேசவன் அடி இணைமிசைக்*  குருகூர்ச் சடகோபன் சொன்ன* 
    தூய ஆயிரத்து இப்பத்தால்*  பத்தர் ஆவர் துவள் இன்றியே.         


    துவள் இல் மா மணி மாடம் ஓங்கு*  தொலைவில்லிமங்கலம் தொழும் 
    இவளை நீர் இனி அன்னைமீர்!*  உமக்கு ஆசை இல்லை விடுமினோ,* 

    தவள ஒண் சங்கு சக்கரம் என்றும்*  தாமரைத் தடம் கண் என்றும்,* 
    குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க*  நின்று நின்று குமுறுமே.      


    குமுறும் ஓசை விழவு ஒலித்*  தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு,* 
    அமுத மென் மொழியாளை*  நீர் உமக்கு ஆசை இன்றி அகற்றினீர்,* 

    திமிர் கொண்டால் ஒத்து நிற்கும்*  மற்று இவள்தேவ தேவபிரான் என்றே,* 
    நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க*  நெக்கு ஒசிந்து கரையுமே.


    கரை கொள் பைம் பொழில் தண்பணைத்*  தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு,* 
    உரை கொள் இன் மொழியாளை*  நீர் உமக்கு  ஆசை இன்றி அகற்றினீர்,*

    திரை கொள் பௌவத்துச் சேர்ந்ததும்*  திசை ஞாலம் தாவி அளந்ததும்,* 
    நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி*  நெடும் கண் நீர் மல்க நிற்குமே. 


    நிற்கும் நால்மறைவாணர் வாழ்*  தொலைவில்லிமங்கலம் கண்டபின்,* 
    அற்கம் ஒன்றும் அற உறாள்*  மலிந்தாள் கண்டீர் இவள் அன்னைமீர்,* 

    கற்கும் கல்வி எல்லாம்*  கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் என்றே,* 
    ஒற்கம் ஒன்றும் இலள் உகந்து உகந்து*  உள் மகிழ்ந்து குழையுமே.            


    குழையும் வாள் முகத்து ஏழையைத்*  தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு,* 
    இழை கொள் சோதிச் செந்தாமரைக் கண்பிரான்*  இருந்தமை காட்டினீர்,* 

    மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடு*  அன்று தொட்டும் மையாந்து,*  இவள் 
    நுழையும் சிந்தையள் அன்னைமீர்!*  தொழும் அத் திசை உற்று நோக்கியே.


    நோக்கும் பக்கம் எல்லாம்*  கரும்பொடு  செந்நெல்ஓங்கு செந்தாமரை,* 
    வாய்க்கும் தண் பொருநல்*  வடகரை வண் தொலைவில்லிமங்கலம்,* 

    நோக்குமேல் அத்திசை அல்லால்*  மறு நோக்கு இலள் வைகல் நாள்தொறும்,* 
    வாய்க்கொள் வாசகமும்*  மணிவண்ணன் நாமமே இவள் அன்னைமீர்!        


    அன்னைமீர்! அணிமாமயில்*  சிறுமான் இவள் நம்மைக் கைவலிந்து* 
    என்ன வார்த்தையும் கேட்குறாள்*  தொலைவில்லிமங்கலம் என்று அல்லால்,* 

    முன்னம் நோற்ற விதிகொலோ*  முகில் வண்ணன் மாயம் கொலோ,* அவன் 
    சின்னமும் திருநாமமும்*  இவள் வாயனகள் திருந்தவே.   


    திருந்து வேதமும் வேள்வியும்*  திருமா மகளிரும் தாம்,*  மலிந்து 
    இருந்து வாழ் பொருநல்*  வடகரை வண் தொலைவில்லிமங்கலம்,* 

    கருந் தடம் கண்ணி கைதொழுத*  அந்நாள் தொடங்கி இந் நாள்தொறும்* 
    இருந்து இருந்து 'அரவிந்தலோசன!'*  என்று என்றே நைந்து இரங்குமே.      


    இரங்கி நாள்தொறும் வாய்வெரீஇ*  இவள் கண்ண நீர்கள் அலமர,* 
    மரங்களும் இரங்கும் வகை*  'மணிவண்ணவோ!' என்று கூவுமால்,* 

    துரங்கம் வாய் பிளந்தான் உறை*  தொலைவில்லிமங்கலம் என்று,*  தன் 
    கரங்கள் கூப்பித் தொழும்*  அவ்ஊர்த் திருநாமம் கற்றதன் பின்னையே.     


    பின்னைகொல் நிலமாமகள்கொல்?*  திருமகள்கொல் பிறந்திட்டாள்,* 
    என்ன மாயம்கொலோ?*  இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால்,* 

    முன்னி வந்து அவன் நின்று இருந்து உறையும்*  தொலைவில்லிமங்கலம்- 
    சென்னியால் வணங்கும்*  அவ் ஊர்த் திருநாமம்*  கேட்பது சிந்தையே.        


    சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும்*  தேவ பிரானையே,* 
    தந்தை தாய் என்று அடைந்த*  வண் குருகூரவர் சடகோபன்,* 

    முந்தை ஆயிரத்துள் இவை*  தொலை வில்லிமங்கலத்தைச் சொன்ன,* 
    செந்தமிழ்ப் பத்தும் வல்லார்*  அடிமைசெய்வார் திருமாலுக்கே


    மாலுக்கு*  வையம் அளந்த மணாளற்கு,* 
    நீலக் கருநிற*  மேக நியாயற்கு,* 

    கோலச் செந்தாமரைக்*  கண்ணற்கு,*
    என் கொங்குஅலர்ஏலக் குழலி*  இழந்தது சங்கே.


    சங்கு வில் வாள் தண்டு*  சக்கரக் கையற்கு,* 
    செங்கனிவாய்ச்*  செய்ய தாமரைக் கண்ணற்கு,* 

    கொங்கு அலர் தண் அம் துழாய்*  முடியானுக்கு,*  என் 
    மங்கை இழந்தது*  மாமை நிறமே. 


    நிறம் கரியானுக்கு*  நீடு உலகு உண்ட,* 
    திறம் கிளர் வாய்ச்*  சிறுக் கள்வன் அவற்கு,* 

    கறங்கிய சக்கரக்*  கையவனுக்கு,*  என் 
    பிறங்கு இரும் கூந்தல்*  இழந்தது பீடே.


    பீடு உடை நான்முகனைப்*  படைத்தானுக்கு,* 
    மாடு உடை வையம் அளந்த*  மணாளற்கு,* 

    நாடு உடை மன்னர்க்குத்*  தூதுசெல் நம்பிக்கு,*  என் 
    பாடு உடை அல்குல்*  இழந்தது பண்பே.


    பண்பு உடை வேதம்*  பயந்த பரனுக்கு,* 
    மண் புரை வையம் இடந்த*  வராகற்கு,* 

    தெண் புனல் பள்ளி*  எம் தேவ பிரானுக்கு,*  என் 
    கண்புனை கோதை*  இழந்தது கற்பே.    


    கற்பகக் கா அன*  நல் பல தோளற்கு,* 
    பொன் சுடர்க் குன்று அன்ன*  பூந்தண் முடியற்கு,* 

    நல் பல தாமரை*  நாள் மலர்க் கையற்கு,*  என் 
    வில் புருவக்கொடி*  தோற்றது மெய்யே.  


    மெய் அமர் பல்கலன்*  நன்கு அணிந்தானுக்கு,* 
    பை அரவின் அணைப்*  பள்ளியினானுக்கு,* 

    கையொடு கால்செய்ய*  கண்ண பிரானுக்கு,*  என் 
    தையல் இழந்தது*  தன்னுடைச் சாயே.


    சாயக் குருந்தம் ஒசித்த*  தமியற்கு,* 
    மாயச் சகடம் உதைத்த*  மணாளற்கு,* 

    பேயைப் பிணம்படப்*  பால் உண் பிரானுக்கு,*  என் 
    வாசக் குழலி*  இழந்தது மாண்பே . 


    மாண்பு அமை கோலத்து*  எம் மாயக் குறளற்கு,* 
    சேண் சுடர்க் குன்று அன்ன*  செஞ்சுடர் மூர்த்திக்கு,* 

    காண் பெரும் தோற்றத்து*  எம் காகுத்த நம்பிக்கு,*  என் 
    பூண் புனை மென்முலை*  தோற்றது பொற்பே.       


    பொற்பு அமை நீள் முடிப்*  பூந்தண் துழாயற்கு,* 
    மல் பொரு தோள் உடை*  மாயப் பிரானுக்கு,* 

    நிற்பன பல் உருவாய்*  நிற்கும் மாயற்கு,*  என் 
    கற்பு உடையாட்டி*  இழந்தது கட்டே. 


    கட்டு எழில் சோலை*  நல் வேங்கடவாணனைக்,* 
    கட்டு எழில் தென் குருகூர்ச்*  சடகோபன் சொல்,* 

    கட்டு எழில் ஆயிரத்து*  இப்பத்தும் வல்லவர்,* 
    கட்டு எழில் வானவர்*  போகம் உண்பாரே.  


    உண்ணும் சோறு பருகும்நீர்*  தின்னும் வெற்றிலையும் எல்லாம் 
    கண்ணன்,*  எம்பெருமான் என்று என்றே*  கண்கள் நீர்மல்கி,* 

    மண்ணினுள் அவன்சீர் வளம் மிக்கவன் ஊர் வினவி,* 
    திண்ணம் என் இளமான் புகும் ஊர்*  திருக்கோளூரே.  


    ஊரும் நாடும் உலகமும்*  தன்னைப்போல் அவனுடைய* 
    பேரும் தார்களுமே பிதற்ற*  கற்பு வான் இடறி,* 

    சேரும் நல் வளம்சேர்*  பழனத் திருக்கோளூர்க்கே,* 
    போரும் கொல் உரையீர்*  கொடியேன் கொடி பூவைகளே!    


    பூவை பைங்கிளிகள்*  பந்து தூதை பூம் புட்டில்கள்,* 
    யாவையும் திருமால்*  திருநாமங்களே கூவி எழும்,*  என் 

    பாவை போய் இனித்*  தண் பழனத் திருக்கோளூர்க்கே,* 
    கோவை வாய் துடிப்ப*  மழைக்கண்ணொடு என் செய்யும்கொலோ?  


    கொல்லை என்பர்கொலோ*  குணம் மிக்கனள் என்பர்கொலோ,* 
    சில்லை வாய்ப் பெண்டுகள்*  அயல் சேரி உள்ளாரும் எல்லே,*

    செல்வம் மல்கி அவன்கிடந்த*  திருக்கோளூர்க்கே,* 
    மேல் இடை நுடங்க*  இளமான் செல்ல மேவினளே.    


    மேவி நைந்து நைந்து விளையாடலுறாள்*  என் சிறுத்- 
    தேவிபோய்,*  இனித்தன் திருமால்*  திருக்கோளூரில்,*

    பூ இயல் பொழிலும்*  தடமும் அவன் கோயிலும் கண்டு,* 
    ஆவி உள் குளிர*  எங்ஙனே உகக்கும்கொல் இன்றே?   


    இன்று எனக்கு உதவாது அகன்ற*  இளமான் இனிப்போய்,* 
    தென் திசைத் திலதம் அனைய*  திருக்கோளூர்க்கே 

    சென்று,*  தன் திருமால் திருக்கண்ணும்*  செவ்வாயும் கண்டு,* 
    நின்று நின்று நையும்*  நெடும் கண்கள் பனி மல்கவே.


    மல்கு நீர்க் கண்ணொடு*  மையல் உற்ற மனத்தினளாய்,* 
    அல்லும் நன் பகலும்*  நெடுமால் என்று அழைத்து இனிப்போய்,* 

    செல்வம் மல்கி அவன் கிடந்த*  திருக்கோளுர்க்கே,* 
    ஒல்கி ஒல்கி நடந்து*  எங்ஙனே புகும்கொல் ஒசிந்தே?


    ஒசிந்த நுண் இடைமேல்*  கையை வைத்து நொந்து நொந்து,* 
    கசிந்த நெஞ்சினளாய்*  கண்ண நீர் துளும்பச் செல்லும்கொல்,* 

    ஒசிந்த ஒண் மலராள்*  கொழுநன் திருக்கோளூர்க்கே,* 
    கசிந்த நெஞ்சினளாய்*  எம்மை நீத்த எம் காரிகையே?         


    காரியம் நல்லனகள்*  அவை காணில் என் கண்ணனுக்கு என்று,* 
    ஈரியாய் இருப்பாள் இது எல்லாம்*  கிடக்க இனிப் போய்,* 

    சேரி பல் பழி தூஉய் இரைப்ப*  திருக்கோளூர்க்கே,* 
    நேரிழை நடந்தாள்*  எம்மை ஒன்றும் நினைந்திலளே.       


    நினைக்கிலேன் தெய்வங்காள்*  நெடும் கண் இளமான் இனிப்போய்* 
    அனைத்து உலகும் உடைய*  அரவிந்தலோசனனைத்,* 

    தினைத்தனையும் விடாள்*  அவன் சேர் திருக்கோளூர்க்கே,* 
    மனைக்கு வான் பழியும் நினையாள்*  செல்ல வைத்தனளே.


    வைத்த மா நிதியாம்*  மதுசூதனையே அலற்றி,* 
    கொத்து அலர் பொழில்சூழ்*  குருகூர்ச் சடகோபன் சொன்ன,* 

    பத்து நூற்றுள் இப்பத்து*  அவன்சேர் திருக்கோளூர்க்கே,* 
    சித்தம் வைத்து உரைப்பார்*  திகழ் பொன் உலகு ஆள்வாரே.    


    பொன் உலகு ஆளீரோ?*  புவனி முழுது ஆளீரோ?,* 
    நல் நலப் புள்ளினங்காள்!*  வினையாட்டியேன் நான் இரந்தேன்,*

    முன் உலகங்கள் எல்லாம் படைத்த*  முகில்வண்ணன் கண்ணன்,* 
    என் நலம் கொண்ட பிரான் தனக்கு*  என் நிலைமை உரைத்தே?.


    மையமர் வாள் நெடும்கண்*  மங்கைமார் முன்பு என் கை இருந்து,* 
    நெய்யமர் இன் அடிசில்*  நிச்சல் பாலொடு மேவீரோ,* 

    கையமர் சக்கரத்து*  என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு* 
    மெய்யமர் காதல் சொல்லி*  கிளிகாள்! விரைந்து ஓடிவந்தே?


    ஓடிவந்து என் குழல்மேல்*  ஒளிமாமலர் ஊதீரோ,* 
    கூடிய வண்டினங்காள்!*  குருநாடு உடை ஐவர்கட்கு ஆய்* 

    ஆடிய மா நெடும் தேர்ப்படை*  நீறு எழச் செற்ற பிரான்,* 
    சூடிய தண் துளவம் உண்ட*  தூமது வாய்கள் கொண்டே?


    தூமதுவாய்கள் கொண்டுவந்து*  என் முல்லைகள்மேல் தும்பிகாள்,* 
    பூ மது உண்ணச் செல்லில்*  வினையேனைப் பொய்செய்து அகன்ற,*

    மாமதுவார் தண்துழாய்முடி*  வானவர் கோனைக் கண்டு,* 
    யாம் இதுவோ தக்கவாறு என்னவேண்டும்*  கண்டீர் நுங்கட்கே.


    நுங்கட்கு யான் உரைக்கேன் வம்மின்*  யான் வளர்த்த கிளிகாள்,* 
    வெம் கண் புள் ஊர்ந்து வந்து*  வினையேனை நெஞ்சம் கவர்ந்த* 

    செங்கண் கருமுகிலை*  செய்ய வாய்ச் செழுங் கற்பகத்தை,* 
    எங்குச் சென்றாகிலும் கண்டு*  இதுவோ தக்கவாறு என்மினே.   


    என் மின்னு நூல் மார்வன்*  என் கரும் பெருமான் என் கண்ணன்,* 
    தன் மன்னு நீள் கழல்மேல்*  தண் துழாய் நமக்கு அன்றி நல்கான்,* 

    கல்மின்கள் என்று உம்மையான்*  கற்பியாவைத்த மாற்றம்சொல்லி,* 
    செல்மின்கள் தீவினையேன்*  வளர்த்த சிறு பூவைகளே!          


    பூவைகள் போல் நிறத்தன்*  புண்டரீகங்கள் போலும் கண்ணன்,* 
    யாவையும் யாவரும் ஆய்*  நின்ற மாயன் என் ஆழிப் பிரான்,* 

    மாவை வல் வாய் பிளந்த*  மதுசூதற்கு என் மாற்றம் சொல்லி,* 
    பாவைகள்! தீர்க்கிற்றிரே*  வினையாட்டியேன் பாசறவே.  


    பாசறவு எய்தி இன்னே*  வினையேன் எனை ஊழி நைவேன்?* 
    ஆசு அறு தூவி வெள்ளைக் குருகே!*  அருள்செய்து ஒருநாள்,* 

    மாசு அறு நீலச்சுடர்முடி*  வானவர் கோனைக் கண்டு,* 
    ஏசு அறும் நும்மை அல்லால்*  மறுநோக்கு இலள் பேர்த்துமற்றே.            


    பேர்த்து மற்று ஓர் களைகண்*  வினையாட்டியேன் நான் ஒன்று இலேன்,* 
    நீர்த் திரைமேல் உலவி*  இரை தேரும் புதா இனங்காள்* 

    கார்த் திரள் மா முகில் போல் கண்ணன்*  விண்ணவர் கோனைக் கண்டு,* 
    வார்த்தைகள் கொண்டு அருளி உரையீர்*  வைகல் வந்திருந்தே.        


    வந்திருந்து உம்முடைய*  மணிச் சேவலும் நீரும் எல்லாம்,* 
    அந்தரம் ஒன்றும் இன்றி*  அலர்மேல் அசையும் அன்னங்காள்,* 

    என் திரு மார்வற்கு என்னை*  இன்னவாறு இவள் காண்மின் என்று,* 
    மந்திரத்து ஒன்று உணர்த்தி உரையீர்*  மறுமாற்றங்களே.


    மாற்றங்கள் ஆய்ந்துகொண்டு*  மதுசூத பிரான் அடிமேல்,* 
    நாற்றங்கொள் பூம்பொழில்சூழ்* குருகூர்ச் சடகோபன் சொன்ன,* 

    தோற்றங்கள் ஆயிரத்துள்*  இவையும் ஒருபத்தும் வல்லார்* 
    ஊற்றின்கண் நுண் மணல்போல்*  உருகாநிற்பர் நீராயே.     


    நீராய் நிலனாய்*  தீயாய் காலாய் நெடுவானாய்,* 
    சீரார் சுடர்கள் இரண்டாய்*  சிவனாய் அயனானாய்,* 

    கூரார் ஆழி வெண்சங்கு ஏந்தி*  கொடியேன்பால் 
    வாராய்,*  ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே. 


    மண்ணும் விண்ணும் மகிழ*  குறள் ஆய் வலம் காட்டி,* 
    மண்ணும் விண்ணும் கொண்ட*  மாய அம்மானே,* 

    நண்ணி உனை நான்*  கண்டு உகந்து கூத்தாட,* 
    நண்ணி ஒருநாள்*  ஞாலத்தூடே நடவாயே.    


    ஞாலத்தூடே நடந்தும் நின்றும்*  கிடந்து இருந்தும்,* 
    சாலப் பலநாள்*  உகம்தோறு உயிர்கள் காப்பானே,* 

    கோலத் திரு மா மகளோடு*  உன்னைக் கூடாதே,* 
    சாலப் பல நாள்*  அடியேன் இன்னும் தளர்வேனோ?   


    தளர்ந்தும் முறிந்தும்*  சகட அசுரர் உடல் வேறாப்,* 
    பிளந்து வீய*  திருக்கால் ஆண்ட பெருமானே,* 

    கிளர்ந்து பிரமன் சிவன்*  இந்திரன் விண்ணவர் சூழ,* 
    விளங்க ஒருநாள்*  காண வாராய் விண்மீதே.      


    விண்மீது இருப்பாய்! மலைமேல் நிற்பாய்!*  கடல் சேர்ப்பாய்,* 
    மண்மீது உழல்வாய்!*  இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய்,* 

    எண்மீது இயன்ற புற அண்டத்தாய்!*  எனது ஆவி,* 
    உண் மீது ஆடி*  உருக் காட்டாதே ஒளிப்பாயோ?    


    பாயோர் அடிவைத்து அதன்கீழ்ப்*  பரவை நிலம் எல்லாம்- 
    தாயோர்,*  ஓர் அடியால்*  எல்லா உலகும் தடவந்த- 

    மாயோன்,*  உன்னைக் காண்பான்*  வருந்தி எனைநாளும்,* 
    தீயோடு உடன்சேர் மெழுகாய்*  உலகில் திரிவேனோ?    


    உலகில் திரியும் கரும கதி ஆய்*  உலகம் ஆய்,* 
    உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய்*  புற அண்டத்து,* 

    அலகில் பொலிந்த*  திசை பத்து ஆய அருவேயோ,* 
    அலகில் பொலிந்த*  அறிவிலேனுக்கு அருளாயே.


    அறிவிலேனுக்கு அருளாய்*  அறிவார் உயிர் ஆனாய்,* 
    வெறி கொள் சோதி மூர்த்தி!*  அடியேன் நெடுமாலே,* 

    கிறிசெய்து என்னைப் புறத்திட்டு*  இன்னம் கெடுப்பாயோ,* 
    பிறிது ஒன்று அறியா அடியேன்*  ஆவி திகைக்கவே?


    ஆவி திகைக்க*  ஐவர் குமைக்கும் சிற்றின்பம்,* 
    பாவியேனைப்*  பல நீ காட்டிப் படுப்பாயோ,*

    தாவி வையம் கொண்ட*  தடம் தாமரை கட்கே,* 
    கூவிக் கொள்ளும் காலம்*  இன்னம் குறுகாதோ?


    குறுகா நீளா*  இறுதிகூடா எனை ஊழி,* 
    சிறுகா பெருகா*  அளவு இல் இன்பம் சேர்ந்தாலும்,* 

    மறு கால் இன்றி மாயோன்*  உனக்கே ஆளாகும்,* 
    சிறு காலத்தை உறுமோ*  அந்தோ தெரியிலே?


    தெரிதல் நினைதல்*  எண்ணல் ஆகாத் திருமாலுக்கு,* 
    உரிய தொண்டர் தொண்டர்*  தொண்டன் சடகோபன்,* 

    தெரியச் சொன்ன*  ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்* 
    உரிய தொண்டர் ஆக்கும்*  உலகம் உண்டாற்கே.       


    உலகம் உண்ட பெருவாயா!*  உலப்பு இல் கீர்த்தி அம்மானே,* 
    நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி!*  நெடியாய் அடியேன் ஆர் உயிரே,* 

    திலதம் உலகுக்கு ஆய் நின்ற*  திருவேங்கடத்து எம் பெருமானே,* 
    குல தொல் அடியேன் உன பாதம்* கூடும் ஆறு கூறாயே.


    கூறாய்  நீறு ஆய் நிலன் ஆகி*  கொடு வல் அசுரர் குலம் எல்லாம்,* 
    சீறா எரியும் திரு நேமி வலவா!*  தெய்வக் கோமானே,* 

    சேறார்  சுனைத் தாமரை செந்தீ மலரும்*  திருவேங்கடத்தானே,* 
    ஆறா அன்பில் அடியேன்*  உன் அடிசேர் வண்ணம் அருளாயே.


    வண்ணம் மருள் கொள் அணி மேக வண்ணா!*  மாய அம்மானே,*
    எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே!*  இமையோர் அதிபதியே,* 

    தெள் நல் அருவி மணி பொன் முத்து அலைக்கும்*  திருவேங்கடத்தானே,* 
    அண்ணலே! உன் அடிசேர*  அடியேற்கு ஆஆ என்னாயே!   


    ஆவா வென்னாது உலகத்தை அலைக்கும்*  அசுரர் வாழ் நாள்மேல்,* 
    தீ வாய் வாளி மழை பொழிந்த சிலையா!*  திரு மா மகள் கேள்வா-

    தேவா*  சுரர்கள் முனிக்கணங்கள் விரும்பும்*  திருவேங்கடத்தானே,* 
    பூ ஆர் கழல்கள் அருவினையேன்*  பொருந்துமாறு புணராயே.  


    புணரா நின்ற மரம் ஏழ்*  அன்று எய்த ஒரு வில் வலவா ஓ,* 
    புணர் ஏய் நின்ற மரம் இரண்டின்*  நடுவே போன முதல்வா ஓ,*

    திணர் ஆர் மேகம் எனக் களிறு சேரும்*  திருவேங்கடத்தானே,* 
    திணர் ஆர் சார்ங்கத்து உன பாதம்*  சேர்வது அடியேன் எந்நாளே?   


    ,எந்நாளே நாம் மண் அளந்த*  இணைத் தாமரைகள் காண்பதற்கு என்று,* 
    எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி*  இறைஞ்சி இனம் இனமாய்,*

    மெய்ந் நா மனத்தால் வழிபாடு செய்யும்*  திருவேங்கடத்தானே,* 
    மெய்ந் நான் எய்தி எந்நாள்*  உன் அடிக்கண் அடியேன் மேவுவதே?


    அடியேன் மேவி அமர்கின்ற அமுதே!*  இமையோர் அதிபதியே,* 
    கொடியா அடு புள் உடையானே!*  கோலக் கனிவாய்ப் பெருமானே,* 

    செடி ஆர் வினைகள் தீர் மருந்தே!*  திருவேங்கடத்து எம் பெருமானே,* 
    நொடி ஆர் பொழுதும் உன பாதம்*   காண நோலாது ஆற்றேனே


    நோலாது ஆற்றேன் உன பாதம்*  காண என்று நுண் உணர்வின்,* 
    நீல் ஆர் கண்டத்து அம்மானும்*  நிறை நான்முகனும் இந்திரனும்,* 

    சேல் ஏய் கண்ணார் பலர் சூழ விரும்பும்*  திருவேங்கடத்தானே,* 
    மாலாய் மயக்கி அடியேன்பால்*  வந்தாய் போலே வாராயே.         


    வந்தாய் போலே வாராதாய்!*  வாராதாய் போல் வருவானே,*
    செந்தாமரைக் கண் செங்கனிவாய்*  நால் தோள் அமுதே! எனது உயிரே,* 

    சிந்தாமணிகள் பகர் அல்லைப் பகல்செய்*  திருவேங்கடத்தானே,* 
    அந்தோ அடியேன் உன பாதம்*  அகலகில்லேன் இறையுமே.


    அகலகில்லேன் இறையும் என்று*  அலர்மேல் மங்கை உறை மார்பா,* 
    நிகர் இல் புகழாய் உலகம் மூன்று உடையாய்!*  என்னை ஆள்வானே,* 

    நிகர் இல் அமரர் முனிக்கணங்கள் விரும்பும்*  திருவேங்கடத்தானே,* 
    புகல் ஒன்று இல்லா அடியேன்*  உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.        


    அடிக்கீழ் அமர்ந்து புகுந்து*  அடியீர் வாழ்மின் என்று என்று அருள்கொடுக்கும்* 
    படிக் கேழ் இல்லாப் பெருமானைப்*  பழனக் குருகூர்ச் சடகோபன்,* 

    முடிப்பான் சொன்ன ஆயிரத்துத்*  திருவேங்கடத்துக்கு இவை பத்தும்,* 
    பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து*  பெரிய வானுள் நிலாவுவரே.