பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    வண்டு உணும் நறு மலர் இண்டை கொண்டு*  பண்டை நம் வினை கெட என்று*  அடிமேல் 
    தொண்டரும் அமரரும் பணிய நின்று*  அங்கு அண்டமொடு அகல்இடம் அளந்தவனே*

    ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்* 
    வேண்டேன் மனைவாழ்க்கையை*  விண்ணகர் மேயவனே.     


    அண்ணல் செய்து அலை கடல் கடைந்து*  அதனுள் கண்ணுதல் நஞ்சு உண்ணக்கண்டவனே!* 
    விண்ணவர் அமுது உண அமுதில் வரும்*  பெண் அமுது உண்ட எம் பெருமானே!* 

    ஆண்டாய்! உனைக் காண்பது ஓர்*  அருள் எனக்கு அருளுதியேல் 
    வேண்டேன் மனைவாழ்க்கையை*  விண்ணகர் மேயவனே.    


    குழல் நிற வண்ண நின்கூறு கொண்ட*  தழல் நிற வண்ணன் நண்ணார் நகரம் 
    விழ*  நனி மலை சிலை வளைவு செய்து*  அங்கு அழல் நிற அம்புஅதுஆனவனே!*

    ஆண்டாய் உனைக் காண்பது ஓர்*  அருள் எனக்கு அருளுதியேல்* 
    வேண்டேன் மனைவாழ்க்கையை*  விண்ணகர் மேயவனே.   


    நிலவொடு வெயில் நிலவு இரு சுடரும்*  உலகமும் உயிர்களும் உண்டு ஒருகால்* 
    கலை தரு குழவியின் உருவினை ஆய்*  அலை கடல் ஆல் இலை வளர்ந்தவனே!*

    ஆண்டாய் உனைக் காண்பது ஓர்*  அருள் எனக்கு அருளுதியேல்* 
    வேண்டேன் மனைவாழ்க்கையை*  விண்ணகர் மேயவனே.        


    பார் எழு கடல் எழு மலை எழும் ஆய்*  சீர் கெழும் இவ் உலகு ஏழும் எல்லாம்* 
    ஆர் கெழு வயிற்றினில் அடக்கி நின்று*  அங்கு ஓர் எழுத்து ஓர் உரு ஆனவனே!*

    ஆண்டாய்! உனைக் காண்பது ஓர்*  அருள் எனக்கு அருளுதியேல், 
    வேண்டேன் மனைவாழ்க்கையை*  விண்ணகர் மேயவனே.   


    கார் கெழு கடல்களும் மலைகளும் ஆய்*  ஏர் கெழும் உலகமும் ஆகி*   முத
    லார்களும் அறிவு அரும் நிலையினை ஆய்*  சீர் கெழு நான்மறை ஆனவனே!*

    ஆண்டாய் உனைக் காண்பது ஓர்*  அருள் எனக்கு அருளுதியேல்* 
    வேண்டேன் மனைவாழ்க்கையை*  விண்ணகர் மேயவனே.     


    உருக்கு உறு நறு நெய் கொண்டு ஆர் அழலில்*  இருக்கு உறும் அந்தணர் சந்தியின்வாய்* 
    பெருக்கமொடு அமரர்கள் அமர நல்கும்*  இருக்கினில் இன் இசை ஆனவனே!*

    ஆண்டாய்! உனைக் காண்பது ஓர்*  அருள் எனக்கு அருளுதியேல்* 
    வேண்டேன் மனைவாழ்க்கையை*  விண்ணகர் மேயவனே.    


    காதல் செய்து இளையவர் கலவி தரும்*  வேதனை வினை அது வெருவுதல் ஆம்* 
    ஆதலின் உனது அடி அணுகுவன் நான்!*  போது அலர் நெடுமுடிப் புண்ணியனே!*

    ஆண்டாய் உனைக் காண்பது ஓர்*  அருள் எனக்கு அருளுதியேல்* 
    வேண்டேன் மனைவாழ்க்கையை*  விண்ணகர் மேயவனே.    


    சாதலும் பிறத்தலும் என்று இவற்றைக்*  காதல் செய்யாது உன கழல் அடைந்தேன்* 
    ஓதல் செய் நான்மறை ஆகி*  உம்பர் ஆதல் செய் மூவுரு ஆனவனே!* 

    ஆண்டாய்! உனைக் காண்பது ஓர்*  அருள் எனக்கு அருளுதியேல்* 
    வேண்டேன் மனைவாழ்க்கையை*  விண்ணகர் மேயவனே!       


    பூ மரு பொழில் அணி*  விண்ணகர் மேல்* 
    காமரு சீர்க்*  கலிகன்றி சொன்ன* 

    பா மரு தமிழ்*  இவை பாட வல்லார்* 
    வாமனன் அடி*  இணை மருவுவரே* 


    பொறுத்தேன் புன்சொல் நெஞ்சில்*  பொருள் இன்பம் என இரண்டும் 
    இறுத்தேன்*  ஐம்புலன்கள் கடன் ஆயின*  வாயில் ஒட்டி

    அறுத்தேன்*  ஆர்வச் செற்றம் அவைதம்மை*  மனத்து அகற்றி 
    வெறுத்தேன்*  நின் அடைந்தேன்*  திருவிண்ணகர் மேயவனே.    


    மறந்தேன் உன்னை முன்னம்*  மறந்த மதி இல் மனத்தால்* 
    இறந்தேன் எத்தனையும்*  அதனால் இடும்பைக் குழியில்*

    பிறந்தே எய்த்து ஒழிந்தேன்*  பெருமான்! திரு மார்பா!* 
    சிறந்தேன் நின் அடிக்கே*  திருவிண்ணகர் மேயவனே


    மான் ஏய் நோக்கியர்தம்*  வயிற்றுக் குழியில் உழைக்கும்* 
    ஊன் ஏய் ஆக்கை தன்னை*  உதவாமை உணர்ந்து உணர்ந்து*

    வானே! மா நிலமே!*  வந்து வந்து என் மனத்து இருந்த 
    தேனே*  நின் அடைந்தேன்*  திருவிண்ணகர் மேயவனே.      


    பிறிந்தேன் பெற்ற மக்கள்*  பெண்டிர் என்று இவர் பின் உதவாது 
    அறிந்தேன்*  நீ பணித்த அருள் என்னும்*  ஒள் வாள் உருவி

    எறிந்தேன்*  ஐம்புலன்கள் இடர் தீர*  எறிந்து வந்து 
    செறிந்தேன்*  நின் அடிக்கே*  திருவிண்ணகர் மேயவனே.   


    பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள்*  பல்லாண்டு இசைப்ப* 
    ஆண்டார் வையம் எல்லாம்*  அரசு ஆகி*  முன் ஆண்டவரே-

    மாண்டார் என்று வந்தார்*  அந்தோ! மனைவாழ்க்கை-தன்னை* 
    வேண்டேன் நின் அடைந்தேன்*  திருவிண்ணகர் மேயவனே.   


    கல்லா ஐம்புலன்கள் அவை*  கண்டவாறு செய்யகில்லேன்* 
    மல்லா! மல் அமருள் மல்லர் மாள*  மல் அடர்த்த!*

    மல்லா மல்லல் அம் சீர்*  மதிள் நீர் இலங்கை அழித்த 
    வில்லா*  நின் அடைந்தேன்*  திருவிண்ணகர் மேயவனே.


    வேறா யான் இரந்தேன்*  வெகுளாது மனக்கொள் எந்தாய்!* 
    ஆறா வெம் நரகத்து*  அடியேனை இடக் கருதி* 

    கூற ஐவர் வந்து குமைக்கக்*  குடிவிட்டவரைத்* 
    தேறாது உன் அடைந்தேன்*  திருவிண்ணகர் மேயவனே.   


    தீ வாய் வல் வினையார்*  உடன் நின்று சிறந்தவர்போல்* 
    மேவா வெம் நரகத்து இட*  உற்று விரைந்து வந்தார்*

    மூவா வானவர்தம் முதல்வா!*  மதி கோள் விடுத்த 
    தேவா*  நின் அடைந்தேன்*  திருவிண்ணகர் மேயவனே 


    போது ஆர் தாமரையாள்*  புலவி குல வானவர்தம் 
    கோதா*  கோது இல் செங்கோல்*  குடை மன்னர் இடை நடந்த

    தூதாதூ*  மொழியாய் சுடர்போல்*  என் மனத்து இருந்த 
    வேதா*  நின் அடைந்தேன்*  திருவிண்ணகர் மேயவனே


    தேன் ஆர் பூம் புறவில்*  திருவிண்ணகர் மேயவனை* 
    வான் ஆரும் மதிள் சூழ்*  வயல் மங்கையர்கோன் மருவார்*

    ஊன் ஆர் வேல் கலியன்*  ஒலிசெய் தமிழ்மாலை வல்லார்* 
    கோன் ஆய் வானவர்தம்*  கொடி மா நகர் கூடுவரே.      


    துறப்பேன் அல்லேன்*  இன்பம் துறவாது*  நின் உருவம் 
    மறப்பேன் அல்லேன்*  என்றும் மறவாது*  யான் உலகில்

    பிறப்பேன் ஆக எண்ணேன்*  பிறவாமை பெற்றது*  நின் 
    திறத்தேன் ஆதன்மையால்*  திருவிண்ணகரானே. (2) 


    துறந்தேன் ஆர்வச் செற்றச்*  சுற்றம் துறந்தமையால்* 
    சிறந்தேன் நின் அடிக்கே*  அடிமை திருமாலே*

    அறம்தான் ஆய்த் திரிவாய்*  உன்னை என் மனத்து அகத்தே* 
    திறம்பாமல் கொண்டேன்*  திருவிண்ணகரானே.  


    மான் ஏய் நோக்கு நல்லார்*  மதிபோல் முகத்து உலவும்* 
    ஊன் ஏய் கண் வாளிக்கு*  உடைந்து ஓட்டந்து உன் அடைந்தேன்*

    கோனே! குறுங்குடியுள் குழகா!*  திருநறையூர்த் 
    தேனே*  வரு புனல் சூழ்*  திருவிண்ணகரானே      


    சாந்து ஏந்து மென் முலையார்*  தடந் தோள் புணர் இன்ப வெள்ளத்து 
    ஆழ்ந்தேன்*  அரு நரகத்து அழுந்தும்*  பயன் படைத்தேன்* 

    போந்தேன் புண்ணியனே!*  உன்னை எய்தி என் தீவினைகள் 
    தீர்ந்தேன்*  நின் அடைந்தேன்*  திருவிண்ணகரானே      


    மற்று ஓர் தெய்வம் எண்ணேன்*  உன்னை என் மனத்து வைத்துப் 
    பெற்றேன்*  பெற்றதுவும் பிறவாமை எம் பெருமான்*

    வற்றா நீள் கடல் சூழ்*  இலங்கை இராவணனைச் 
    செற்றாய்*  கொற்றவனே!*  திருவிண்ணகரானே. 


    மை ஒண் கருங் கடலும்*  நிலனும் மணி வரையும்* 
    செய்ய சுடர் இரண்டும்*  இவை ஆய நின்னை*  நெஞ்சில்

    உய்யும் வகை உணர்ந்தேன்*  உண்மையால் இனி *  யாதும் மற்று ஓர் 
    தெய்வம் பிறிது அறியேன்*  திருவிண்ணகரானே.    


    வேறே கூறுவது உண்டு*  அடியேன் விரித்து உரைக்கும் 
    ஆறே*  நீ பணியாது அடை*  நின் திருமனத்து* 

    கூறேன் நெஞ்சு தன்னால்*  குணம் கொண்டு*  மற்று ஓர் தெய்வம் 
    தேறேன் உன்னை அல்லால்*  திருவிண்ணகரானே.


    முளிந்தீந்த வெம் கடத்து*  மூரிப் பெருங் களிற்றால்* 
    விளிந்தீந்த மா மரம்போல்*  வீழ்ந்தாரை நினையாதே* 

    அளிந்து ஓர்ந்த சிந்தை*  நின்பால் அடியேற்கு*  வான் உலகம் 
    தெளிந்தே என்று எய்துவது?*  திருவிண்ணகரானே.     


    சொல்லாய் திரு மார்வா!*  உனக்கு ஆகித் தொண்டு பட்ட 
    நல்லேனை*  வினைகள் நலியாமை*  நம்புநம்பீ*

    மல்லா! குடம் ஆடீ!*  மதுசூதனே*  உலகில் 
    செல்லா நல் இசையாய்!*  திருவிண்ணகரானே.


    தார் ஆர் மலர்க் கமலத்*  தடம் சூழ்ந்த தண் புறவில்* 
    சீர் ஆர் நெடு மறுகின்*  திருவிண்ணகரானைக்* 

    கார் ஆர் புயல் தடக் கைக்*  கலியன் ஒலி மாலை* 
    ஆர் ஆர் இவை வல்லார்*  அவர்க்கு அல்லல் நில்லாவே.


    கண்ணும் சுழன்று பீளையோடு*  ஈளை வந்து ஏங்கினால்* 
    பண் இன் மொழியார்*  பைய நடமின் என்னாதமுன்*

    விண்ணும் மலையும்*  வேதமும் வேள்வியும் ஆயினான்* 
    நண்ணும் நறையூர்*  நாம் தொழுதும் எழு நெஞ்சமே. 


    கொங்கு உண் குழலார்*  கூடி இருந்து சிரித்து*  நீர் 
    இங்கு என் இருமி*  எம்பால் வந்தது? என்று இகழாதமுன்* 

    திங்கள் எரி கால்*  செஞ் சுடர் ஆயவன் தேசு உடை*  
    நங்கள் நறையூர்*  நாம் தொழுதும் எழு நெஞ்சமே.    


    கொங்கு ஆர் குழலார்*  கூடி இருந்து சிரித்து*  எம்மை 
    எம் கோலம் ஐயா!*  என் இனிக் காண்பது? என்னாதமுன்*

    செங்கோல் வலவன்*  தாள் பணிந்து ஏத்தித் திகழும் ஊர்*
    நம் கோன் நறையூர்*  நாம் தொழுதும் எழு நெஞ்சமே.    


    கொம்பும் அரவமும்*  வல்லியும் வென்ற நுண் ஏர் இடை* 
    வம்பு உண் குழலார்*  வாசல் அடைத்து இகழாதமுன்*

    செம் பொன் கமுகு இனம் தான்*  கனியும் செழும் சோலை சூழ்* 
    நம்பன் நறையூர்*  நாம் தொழுதும் எழு நெஞ்சமே.   


    விலங்கும் கயலும்*  வேலும் ஒண் காவியும் வென்ற கண்* 
    சலம் கொண்ட சொல்லார்*  தாங்கள் சிரித்து இகழாத முன்*

    மலங்கும் வராலும்*  வாளையும் பாய் வயல் சூழ்தரு* 
    நலம் கொள் நறையூர்*  நாம் தொழுதும் எழு நெஞ்சமே. 


    மின் நேர் இடையார்*  வேட்கையை மாற்றியிருந்து* 
    என் நீர் இருமி*  எம்பால் வந்தது என்று இகழாதமுன்*

    தொல் நீர் இலங்கை மலங்க*  விலங்கு எரி ஊட்டினான்* 
    நல் நீர் நறையூர்*  நாம் தொழுதும் எழு நெஞ்சமே. 


    வில் ஏர் நுதலார்*  வேட்கையை மாற்றி சிரித்து*  இவன் 
    பொல்லான் திரைந்தான் என்னும்*  புறன் உரை கேட்பதன்முன்*

    சொல் ஆர் மறை நான்கு ஓதி*  உலகில் நிலாயவர்* 
    நல்லார் நறையூர்*  நாம் தொழுதும் எழு நெஞ்சமே.   


    வாள் ஒண் கண் நல்லார் தாங்கள்*  மதனன் என்றார்தம்மைக்* 
    கேள்மின்கள் ஈளையோடு*  ஏங்கு கிழவன் என்னாதமுன்*

    வேள்வும் விழவும்*  வீதியில் என்றும் அறாத ஊர்* 
    நாளும் நறையூர்*  நாம் தொழுதும் எழு நெஞ்சமே. 


    கனி சேர்ந்து இலங்கு நல் வாயவர்*  காதன்மை விட்டிட* 
    குனி சேர்ந்து உடலம்*  கோலில் தளர்ந்து இளையாதமுன்*

    பனி சேர் விசும்பில்*  பால்மதி கோள் விடுத்தான் இடம்* 
    நனி சேர் நறையூர்*  நாம் தொழுதும் எழு நெஞ்சமே.      


    பிறை சேர் நுதலார்*  பேணுதல் நம்மை இலாதமுன்* 
    நறை சேர் பொழில் சூழ்*  நறையூர் தொழு நெஞ்சமே! என்ற*

    கறை ஆர் நெடு வேல் மங்கையர்கோன்*  கலிகன்றி சொல்* 
    மறவாது உரைப்பவர்*  வானவர்க்கு இன் அரசு ஆவரே.   (2)         


    கலங்க முந்நீர் கடைந்து*  அமுதம் கொண்டு*  இமையோர் 
    துளங்கல் தீர*  நல்கு சோதிச் சுடர் ஆய*

    வலங்கை ஆழி இடங்கைச் சங்கம்*  உடையான் ஊர்*
    நலம் கொள் வாய்மை*  அந்தணர் வாழும் நறையூரே.    


    முனை ஆர் சீயம் ஆகி*  அவுணன் முரண் மார்வம்* 
    புனை வாள் உகிரால்*  போழ்பட ஈர்ந்த புனிதன் ஊர்*

    சினை ஆர் தேமாஞ் செந் தளிர் கோதிக்*  குயில் கூவும்* 
    நனை ஆர் சோலை சூழ்ந்து*  அழகு ஆய நறையூரே.   


    ஆனை புரவி தேரொடு காலாள்* அணிகொண்ட* 
    சேனைத் தொகையைச் சாடி*  இலங்கை செற்றான் ஊர்*

    மீனைத் தழுவி வீழ்ந்து எழும்*  மள்ளர்க்கு அலமந்து* 
    நானப் புதலில்*  ஆமை ஒளிக்கும்நறையூரே.             


    உறி ஆர் வெண்ணெய் உண்டு*  உரலோடும் கட்டுண்டு* 
    வெறி ஆர் கூந்தல்*  பின்னைபொருட்டு ஆன் வென்றான் ஊர்*

    பொறி ஆர் மஞ்ஞை*  பூம் பொழில்தோறும் நடம் ஆட* 
    நறு நாள்மலர்மேல்*  வண்டு இசை பாடும் நறையூரே.  


    விடை ஏழ் வென்று*  மென் தோள் ஆய்ச்சிக்கு அன்பன் ஆய்* 
    நடையால் நின்ற*  மருதம் சாய்த்த நாதன் ஊர்* 

    பெடையோடு அன்னம்*  பெய்வளையார் தம்பின்சென்று* 
    நடையோடு இயலி*  நாணி ஒளிக்கும் நறையூரே.


    பகு வாய் வன் பேய்*  கொங்கை சுவைத்து ஆர் உயிர் உண்டு* 
    புகு வாய் நின்ற*  போதகம் வீழப் பொருதான் ஊர்*

    நெகு வாய் நெய்தல்*  பூ மது மாந்தி கமலத்தின்* 
    நகு வாய் மலர்மேல்*  அன்னம் உறங்கும் நறையூரே*    


    முந்து நூலும் முப்புரி நூலும்*  முன் ஈந்த* 
    அந்தணாளன் பிள்ளையை*  அஞ்ஞான்று அளித்தான் ஊர்*

    பொந்தில் வாழும் பிள்ளைக்கு ஆகி*  புள் ஓடி* 
    நந்து வாரும்*  பைம் புனல் வாவி நறையூரே.     


    வெள்ளைப் புரவித் தேர் விசயற்கு ஆய்*  விறல் வியூகம்* 
    விள்ள சிந்துக்கோன் விழ*  ஊர்ந்த விமலன் ஊர்*

    கொள்ளைக் கொழு மீன்*  உண் குருகு ஓடி பெடையோடும்* 
    நள்ளக் கமலத்*  தேறல் உகுக்கும் நறையூரே.


    பாரை ஊரும் பாரம் தீரப்*  பார்த்தன்தன்* 
    தேரை ஊரும்*  தேவதேவன் சேறும் ஊர்*

    தாரை ஊரும்*  தண் தளிர் வேலி புடை சூழ* 
    நாரை ஊரும்*  நல் வயல் சூழ்ந்த*  நறையூரே. 


    தாமத் துளப*  நீள் முடி மாயன் தான் நின்ற* 
    நாமத் திரள் மா மாளிகை சூழ்ந்த*  நறையூர்மேல்* 

    காமக் கதிர் வேல் வல்லான்*  கலியன் ஒலி மாலை* 
    சேமத் துணை ஆம்*  செப்பும் அவர்க்கு திருமாலே.      


    அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும்*  அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன்* 
    கொம்பு அமரும் வட மரத்தின் இலைமேல்*  பள்ளி கூடினான் திருவடியே கூடகிற்பீர்*

    வம்பு அவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு*  மணி வண்டு வகுளத்தின் மலர்மேல் வைகும்* 
    செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில்*  திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.


    கொழுங் கயல் ஆய் நெடு வெள்ளம் கொண்ட காலம்*  குல வரையின் மீது ஓடி அண்டத்து அப்பால்* 
    எழுந்து இனிது விளையாடும் ஈசன் எந்தை*  இணைஅடிக்கீழ் இனிது இருப்பீர்! இன வண்டு ஆலும்*

    உழும் செறுவில் மணி கொணர்ந்து கரைமேல் சிந்தி*  உலகு எல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள* 
    செழும் பொன்னி வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த*  திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.


    பவ்வ நீர் உடை ஆடை ஆகச் சுற்றி*  பார் அகலம் திருவடியா பவனம் மெய்யா* 
    செவ்வி மாதிரம் எட்டும் தோளா*  அண்டம் திரு முடியா நின்றான்பால் செல்லகிற்பீர்*

    கவ்வை மா களிறு உந்தி வெண்ணி ஏற்ற*  கழல் மன்னர் மணி முடிமேல் காகம் ஏறத்* 
    தெய்வ வாள் வலம் கொண்ட சோழன் சேர்ந்த*  திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.  


    பைங் கண் ஆள்அரி உரு ஆய் வெருவ நோக்கி*  பரு வரத் தோள் இரணியனைப் பற்றி வாங்கி* 
    அம் கை வாள் உகிர் நுதியால் அவனது ஆகம்*  அம் குருதி பொங்குவித்தான் அடிக்கீழ் நிற்பீர்*

    வெம் கண் மா களிறு உந்தி வெண்ணி ஏற்ற*  விறல் மன்னர் திறல் அழிய வெம் மா உய்த்த* 
    செங்கணான் கோச் சோழன் சேர்ந்த கோயில்*  திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.


    அன்று உலகம் மூன்றினையும் அளந்து*  வேறு ஓர் அரி உரு ஆய் இரணியனது ஆகம் கீண்டு* 
    வென்று அவனை விண் உலகில் செல உய்த்தாற்கு*  விருந்து ஆவீர் மேல் எழுந்து விலங்கல் பாய்ந்து* 

    பொன் சிதறி மணி கொணர்ந்து கரைமேல் சிந்திப்*  புலம் பரந்து நிலம் பரக்கும் பொன்னி நாடன்*
    தென் தமிழன் வட புலக்கோன் சோழன் சேர்ந்த*  திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.


    தன்னாலே தன் உருவம் பயந்த தான் ஆய்*  தயங்கு ஒளி சேர் மூவுலகும் தான் ஆய் வான் ஆய்* 
    தன்னாலே தன் உருவின் மூர்த்தி மூன்று ஆய்*  தான் ஆயன் ஆயினான் சரண் என்று உய்வீர்* 

    மின் ஆடு வேல் ஏந்து விளைந்த வேளை*  விண் ஏறத் தனி வேல் உய்த்து உலகம் ஆண்ட* 
    தென் நாடன் குட கொங்கன் சோழன் சேர்ந்த*  திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே. 


    முலைத் தடத்த நஞ்சு உண்டு துஞ்சப் பேய்ச்சி*  முது துவரைக் குலபதி ஆய் காலிப்பின்னே* 
    இலைத் தடத்த குழல் ஊதி ஆயர் மாதர்*  இன வளை கொண்டான் அடிக்கீழ் எய்தகிற்பீர்*

    மலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய*  வளம் கொடுக்கும் வரு புனல் அம் பொன்னிநாடன்* 
    சிலைத் தடக் கைக் குலச் சோழன் சேர்ந்த கோயில்*  திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.


    முருக்கு இலங்கு கனித் துவர் வாய்ப் பின்னை கேள்வன்*  மன் எல்லாம் முன் அவியச் சென்று*  வென்றிச் 
    செருக்களத்துத் திறல் அழியச் செற்ற வேந்தன்*  சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர்*

    இருக்கு இலங்கு திருமொழி வாய் எண் தோள் ஈசற்கு*  எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட* 
    திருக் குலத்து வளச் சோழன் சேர்ந்த கோயில்*  திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே. 


    தார் ஆளன் தண் அரங்க ஆளன்*  பூமேல் தனியாளன் முனியாளர் ஏத்த நின்ற 
    பேர் ஆளன்*  ஆயிரம் பேர் உடைய ஆளன்*  பின்னைக்கு மணவாளன் பெருமைகேட்பீர்*

    பார் ஆளர் அவர் இவர் என்று அழுந்தை ஏற்ற*  படை மன்னர் உடல் துணியப் பரிமா உய்த்த* 
    தேர் ஆளன் கோச் சோழன் சேர்ந்த கோயில்*  திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.


    செம்மொழிவாய் நால்வேத வாணர்வாழும்*  திருநறையூர்மணிமாடச் செங்கண்மாலைப்* 
    பொய்ம்மொழி ஒன்று இல்லாதமெய்ம்மையாளன்*  புல மங்கைக் குல வேந்தன் புலமை ஆர்ந்த*

    அம் மொழி வாய்க் கலிகன்றி இன்பப் பாடல்*  பாடுவார் வியன் உலகில் நமனார் பாடி* 
    வெம் மொழி கேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில்*  விண்ணவர்க்கு விருந்து ஆகும் பெருந் தக்கோரே.


    ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான்*  விண்ட நிசாசரரைத்* 
    தோளும் தலையும் துணிவு எய்தச்*  சுடு வெம் சிலைவாய்ச் சரம் துரந்தான்*

    வேளும் சேயும் அனையாரும்*  வேல்கணாரும் பயில் வீதி* 
    நாளும் விழவின் ஒலி ஓவா*  நறையூர் நின்ற நம்பியே.    


    முனி ஆய் வந்து மூவெழுகால்*  முடி சேர் மன்னர் உடல் துணிய* 
    தனி வாய் மழுவின் படை ஆண்ட*  தார் ஆர் தோளான் வார் புறவில்*

    பனி சேர் முல்லை பல் அரும்ப*  பானல் ஒருபால் கண் காட்ட* 
    நனி சேர் கமலம் முகங்காட்டும்*  நறையூர் நின்ற நம்பியே.


    தெள் ஆர் கடல்வாய் விட வாயச்*  சின வாள் அரவில் துயில் அமர்ந்து* 
    துள்ளா வரு மான் விழ வாளி துரந்தான்*  இரந்தான் மாவலி மண்*

    புள் ஆர் புறவில் பூங் காவி*  பொலன் கொள் மாதர் கண் காட்ட* 
    நள் ஆர் கமலம் முகம் காட்டும்*  நறையூர் நின்ற நம்பியே.            


    ஒளியா வெண்ணெய் உண்டான் என்று*  உரலோடு ஆய்ச்சி ஒண் கயிற்றால்* 
    விளியா ஆர்க்க ஆப்புண்டு*  விம்மி அழுதான் மென் மலர்மேல்*

    களியா வண்டு கள் உண்ண*  காமர் தென்றல் அலர் தூற்ற* 
    நளிர்வாய் முல்லை முறுவலிக்கும்*  நறையூர் நின்ற நம்பியே. 


    வில் ஆர் விழவில் வட மதுரை*  விரும்பி விரும்பா மல் அடர்த்து* 
    கல் ஆர் திரள் தோள் கஞ்சனைக்காய்ந்தான்*  பாய்ந்தான் காளியன்மேல்*

    சொல் ஆர் சுருதி முறை ஓதிச்*  சோமுச் செய்யும் தொழிலினோர்* 
    நல்லார் மறையோர் பலர் வாழும்*  நறையூர் நின்ற நம்பியே.      


    வள்ளி கொழுநன் முதலாய*  மக்களோடு முக்கணான் 
    வெள்கி ஓட*  விறல் வாணன் வியன் தோள் வனத்தைத் துணித்து உகந்தான்*

    பள்ளி கமலத்திடைப் பட்ட*  பகு வாய் அலவன் முகம் நோக்கி* 
    நள்ளி ஊடும் வயல் சூழ்ந்த*  நறையூர் நின்ற நம்பியே.


    மிடையா வந்த வேல் மன்னர் வீய*  விசயன் தேர் கடவி* 
    குடையா வரை ஒன்று எடுத்து*  ஆயர்கோ ஆய் நின்றான் கூர் ஆழிப்

    படையான்*  வேதம் நான்கு ஐந்து வேள்வி*  அங்கம் ஆறு இசை ஏழ்* 
    நடையா வல்ல அந்தணர் வாழ்*  நறையூர் நின்ற நம்பியே.  


    பந்து ஆர் விரலாள் பாஞ்சாலி*  கூந்தல் முடிக்க பாரதத்து* 
    கந்து ஆர் களிற்றுக் கழல் மன்னர் கலங்க*  சங்கம் வாய் வைத்தான்*

    செந்தாமரைமேல் அயனோடு*  சிவனும் அனைய பெருமையோர்* 
    நந்தா வண் கை மறையோர் வாழ்*  நறையூர் நின்ற நம்பியே.      


    ஆறும் பிறையும் அரவமும்*  அடம்பும் சடைமேல் அணிந்து*  உடலம் 
    நீறும் பூசி ஏறு ஊரும்*  இறையோன் சென்று குறை இரப்ப*

    மாறு ஒன்று இல்லா வாச நீர்*  வரை மார்வு அகலத்து அளித்து உகந்தான்* 
    நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆய*  நறையூர் நின்ற நம்பியே 


    நன்மை உடைய மறையோர் வாழ்*  நறையூர் நின்ற நம்பியைக்* 
    கன்னி மதிள் சூழ் வயல் மங்கைக்*  கலியன் ஒலிசெய் தமிழ்மாலை*

    பன்னி உலகில் பாடுவார்*  பாடு சாரா பழ வினைகள்* 
    மன்னி உலகம் ஆண்டு போய்*  வானோர் வணங்க வாழ்வாரே.       


    மான் கொண்ட தோல்*  மார்வின் மாணி ஆய்*  மாவலி மண் 
    தான் கொண்டு*  தாளால் அளந்த பெருமானை*

    தேன் கொண்ட சாரல்*  திருவேங்கடத்தானை* 
    நான் சென்று நாடி*  நறையூரில் கண்டேனே. (2)     


    முந்நீரை முன் நாள்*  கடைந்தானை*  மூழ்த்த நாள் 
    அந்நீரை மீன் ஆய்*  அமைத்த பெருமானை* 

    தென் ஆலி மேய*  திருமாலை எம்மானை* 
    நல்நீர் சூழ்*  நறையூரில் கண்டேனே.


    தூ வாய புள் ஊர்ந்து வந்து*  துறை வேழம்* 
    மூவாமை நல்கி*  முதலை துணித்தானை* 

    தேவாதிதேவனை*  செங் கமலக் கண்ணானை*
    நாவாய் உளானை*  நறையூரில் கண்டேனே.    


    ஓடா அரி ஆய்*  இரணியனை ஊன் இடந்த* 
    சேடு ஆர் பொழில் சூழ்*  திருநீர்மலையானை

    வாடா மலர்த் துழாய்*  மாலை முடியானை* 
    நாள்தோறும் நாடி*  நறையூரில் கண்டேனே.   


    கல் ஆர் மதிள் சூழ்*  கதி இலங்கைக் கார் அரக்கன்* 
    வல் ஆகம் கீள*  வரி வெம் சரம் துரந்த

    வில்லானை*  செல்வ விபீடணற்கு வேறாக* 
    நல்லானை நாடி*  நறையூரில் கண்டேனே .    


    உம்பர் உலகோடு*  உயிர் எல்லாம் உந்தியில்* 
    வம்பு மலர்மேல்*  படைத்தானை மாயோனை*

    அம்பு அன்ன கண்ணாள்* அசோதை தன் சிங்கத்தை* 
    நம்பனை நாடி*  நறையூரில் கண்டேனே.     


    கட்டு ஏறு நீள் சோலைக்*  காண்டவத்தைத் தீ மூட்டி 
    விட்டானை*  மெய்யம் அமர்ந்த பெருமானை*

    மட்டு ஏறு கற்பகத்தை*  மாதர்க்கு ஆய்* வண் துவரை 
    நட்டானை நாடி*  நறையூரில் கண்டேனே.


    மண்ணின் மீ பாரம் கெடுப்பான்*  மற மன்னர்* 
    பண்ணின்மேல் வந்த*  படை எல்லாம் பாரதத்து*

    விண்ணின் மீது ஏற* விசயன் தேர் ஊர்ந்தானை* 
    நண்ணி நான் நாடி*  நறையூரில் கண்டேனே.      


    பொங்கு ஏறு நீள் சோதிப்*  பொன் ஆழி தன்னோடும்* 
    சங்கு ஏறு கோலத்*  தடக் கைப் பெருமானை*

    கொங்கு ஏறு சோலைக்*  குடந்தைக் கிடந்தானை* 
    நம் கோனை நாடி*  நறையூரில் கண்டேனே.  (2)


    மன்னும் மதுரை*  வசுதேவர் வாழ் முதலை* 
    நல் நறையூர்*  நின்ற நம்பியை*  வம்பு அவிழ் தார்

    கல் நவிலும் தோளான்*  கலியன் ஒலி வல்லார்* 
    பொன்உலகில் வானவர்க்குப்*  புத்தேளிர் ஆகுவரே. (2)  


    பெடை அடர்த்த மட அன்னம்*  பிரியாது*  மலர்க் கமல 
    மடல் எடுத்து மது நுகரும்*  வயல் உடுத்த திருநறையூர்*

    முடை அடர்த்த சிரம் ஏந்தி*  மூவுலகும் பலி திரிவோன்* 
    இடர் கெடுத்த திருவாளன்*  இணைஅடியே அடை நெஞ்சே! 


    கழி ஆரும் கன சங்கம்*  கலந்து எங்கும் நிறைந்து ஏறி*
    வழி ஆர முத்து ஈன்று* வளம் கொடுக்கும் திருநறையூர்*

    பழி ஆரும் விறல் அரக்கன்*  பரு முடிகள்அவை சிதற* 
    அழல் ஆரும் சரம் துரந்தான்*  அடிஇணையே அடை நெஞ்சே!     


    சுளை கொண்ட பலங்கனிகள்*  தேன் பாய*  கதலிகளின் 
    திளை கொண்ட பழம் கெழுமித்*  திகழ் சோலைத் திருநறையூர்*

    வளை கொண்ட வண்ணத்தன்*  பின் தோன்றல்*  மூவுலகோடு 
    அளை வெண்ணெய் உண்டான் தன்*  அடிஇணையே அடை நெஞ்சே!


    துன்று ஒளித் துகில் படலம்*  துன்னி எங்கும் மாளிகைமேல்* 
    நின்று ஆர வான் மூடும்*  நீள் செல்வத் திருநறையூர்*

    மன்று ஆரக் குடம் ஆடி*  வரை எடுத்து மழை தடுத்த* 
    குன்று ஆரும் திரள் தோளன்*  குரை கழலே அடை நெஞ்சே!    


    அகில் குறடும் சந்தனமும்*  அம் பொன்னும் அணி முத்தும்* 
    மிகக் கொணர்ந்து திரை உந்தும்*  வியன் பொன்னித் திருநறையூர்*

    பகல் கரந்த சுடர் ஆழிப்*  படையான் இவ் உலகு ஏழும்* 
    புகக் கரந்த திரு வயிற்றன்*  பொன்அடியே அடை நெஞ்சே !            


    பொன் முத்தும் அரி உகிரும்*  புழைக் கை மா கரிக் கோடும்* 
    மின்னத் தண் திரை உந்தும்*  வியன் பொன்னித் திருநறையூர்* 

    மின் ஒத்த நுண் மருங்குல்*  மெல்இயலைத்*  திரு மார்வில் 
    மன்ன தான் வைத்து உகந்தான்*  மலர் அடியே அடை நெஞ்சே!    


    சீர் தழைத்த கதிர்ச் செந்நெல்*  செங் கமலத்து இடை இடையில்*
    பார் தழைத்துக் கரும்பு ஓங்கிப்*  பயன் விளைக்கும் திருநறையூர்*

    கார் தழைத்த திரு உருவன்*  கண்ணபிரான் விண்ணவர்கோன்* 
    தார் தழைத்த துழாய் முடியன்*  தளிர் அடியே அடை நெஞ்சே!      


    குலை ஆர்ந்த பழுக் காயும்*  பசுங் காயும் பாளை முத்தும்* 
    தலை ஆர்ந்த இளங் கமுகின்*  தடஞ் சோலைத் திருநறையூர்*

    மலை ஆர்ந்த கோலம் சேர்*  மணி மாடம் மிக மன்னி* 
    நிலை ஆர நின்றான்*  தன் நீள் கழலே அடை நெஞ்சே!         


    மறை ஆரும் பெரு வேள்விக்*  கொழும் புகை போய் வளர்ந்து எங்கும்* 
    நிறை ஆர வான் மூடும்*  நீள் செல்வத் திருநறையூர்* 

    பிறை ஆரும் சடையானும்*  பிரமனும் முன் தொழுது ஏத்த* 
    இறை ஆகி நின்றான் தன்*  இணைஅடியே அடை நெஞ்சே!         


    திண் களக மதிள் புடை சூழ்*  திருநறையூர் நின்றானை* 
    வண் களகம் நிலவு எறிக்கும்*  வயல் மங்கை நகராளன்*

    பண்கள் அகம் பயின்ற சீர்ப்*  பாடல்இவை பத்தும் வல்லார்* 
    விண்கள் அகத்து இமையவர் ஆய்*  வீற்றிருந்து வாழ்வாரே.      


    கிடந்த நம்பி குடந்தை மேவி*  கேழல் ஆய் உலகை 
    இடந்த நம்பி*  எங்கள் நம்பி எறிஞர் அரண் அழியக்*

    கடந்த நம்பி கடி ஆர் இலங்கை*  உலகை ஈர் அடியால்* 
    நடந்த நம்பி நாமம் சொல்லில்*  நமோ நாராயணமே.  


    விடம்தான் உடைய அரவம் வெருவ*  செருவில் முன நாள்*  முன் 
    தடந் தாமரை நீர்ப் பொய்கை புக்கு*  மிக்க தாள் ஆளன்*

    இடந்தான் வையம் கேழல் ஆகி*  உலகை ஈர் அடியால்* 
    நடந்தானுடைய நாமம் சொல்லில்*  நமோ நாராயணமே. 


    பூணாது அனலும்*  தறுகண் வேழம் மறுக*  வளை மருப்பைப் 
    பேணான் வாங்கி*  அமுதம் கொண்ட பெருமான் திரு மார்வன்*

    பாணா வண்டு முரலும் கூந்தல்*  ஆய்ச்சி தயிர் வெண்ணெய்* 
    நாணாது உண்டான் நாமம் சொல்லில்*  நமோ நாராயணமே.  


    கல் ஆர் மதிள் சூழ்*  கச்சி நகருள் நச்சி*  பாடகத்துள் 
    எல்லா உலகும் வணங்க*  இருந்த அம்மான்*  இலங்கைக்கோன்

    வல் ஆள் ஆகம் வில்லால்*  முனிந்த எந்தை*  விபீடணற்கு 
    நல்லானுடைய நாமம் சொல்லில்*  நமோ நாராயணமே.  


    குடையா வரையால்*  நிரை முன் காத்த பெருமான்*  மருவாத 
    விடைதான் ஏழும் வென்றான்*  கோவல் நின்றான்*  தென் இலங்கை

    அடையா அரக்கர் வீயப்*  பொருது மேவி வெம் கூற்றம்* 
    நடையா உண்ணக் கண்டான் நாமம்*  நமோ நாராயணமே.


    கான எண்கும் குரங்கும்*  முசுவும் படையா*  அடல் அரக்கர் 
    மானம் அழித்து நின்ற*  வென்றி அம்மான்*  எனக்கு என்றும்

    தேனும் பாலும் அமுதும் ஆய*  திருமால் திருநாமம்*
    நானும் சொன்னேன் நமரும் உரைமின்*  நமோ நாராயணமே.   


    நின்ற வரையும் கிடந்த கடலும்*  திசையும் இரு நிலனும்* 
    ஒன்றும் ஒழியா வண்ணம் எண்ணி*  நின்ற அம்மானார்*

    குன்று குடையா எடுத்த*  அடிகளுடைய திருநாமம்* 
    நன்று காண்மின் தொண்டீர்! சொன்னேன்*  நமோ நாராயணமே.


    கடுங் கால் மாரி கல்லே பொழிய*  அல்லே எமக்கு என்று 
    படுங்கால்*  நீயே சரண் என்று ஆயர் அஞ்ச அஞ்சாமுன்*

    நெடுங்கால் குன்றம் குடை ஒன்று ஏந்தி*  நிரையைச் சிரமத்தால்* 
    நடுங்கா வண்ணம் காத்தான் நாமம்*  நமோ நாராயணமே.       


    பொங்கு புணரிக் கடல் சூழ் ஆடை*  நில மா மகள் மலர் மா 
    மங்கை*  பிரமன் சிவன் இந்திரன்*  வானவர் நாயகர் ஆய*

    எங்கள் அடிகள் இமையோர்*  தலைவருடைய திருநாமம்*
    நங்கள் வினைகள் தவிர உரைமின்*  நமோ நாராயணமே.        


    வாவித் தடம் சூழ் மணி முத்தாற்று*  நறையூர் நெடுமாலை* 
    நாவில் பரவி நெஞ்சில் கொண்டு*  நம்பி நாமத்தை*

    காவித் தடங் கண் மடவார் கேள்வன்*  கலியன் ஒலி மாலை* 
    மேவிச் சொல்ல வல்லார் பாவம்*  நில்லா வீயுமே.