உபதேசரத்தினமாலை


    எந்தை திருவாய்மொழிப்பிள்ளை இன்னருளால்
    வந்த உபதேச மார்க்கத்தைச் சிந்தை செய்து
    பின்னவரும் கற்க உபதேசமாய் பேசுகின்றேன்
    மன்னிய சீர் வெண்பாவில் வைத்து


    கற்றோர்கள் தாமுகப்பர் கல்விதன்னில் ஆசையுள்ளோர்
    பெற்றோமென உகந்து பின்பு கற்பர் – மற்றோர்கள்
    மாச்சரியத்தால் இகழில் வந்தென் நெஞ்சே இகழ்கை
    ஆச்சர்யமோ தானவர்க்கு


    ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி
    தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி – ஏழ்பாரும்
    உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி
    செய்யமறை தன்னுடனே சேர்ந்து


    பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ்மழிசை
    அய்யன் அருள்மாறன் சேரலர்கோன் – துய்யபட்ட
    நாதன் அன்பர் தாள் தூளி நற்பாணன் நற்கலியன்
    ஈதிவர் தோற்றத் தடைவாமிங்கு


    அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்துரைத்த வாழ்வார்கள்
    இந்தவுலகி லிருணீங்க- வந்துதித்த

    மாதங்கள் நாள்கள்தமை மண்ணுலகோர் தாமறிய
    ஈதென்று சொல்லுவோமி யாம்.


    ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை
    ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் – எப்புவியும்

    பேசுபுகழ் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்
    தேசுடனே தோன்று பிறப்பால்


    மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து
    நற்றமிழால் நூல்செய்து நாட்டை உய்த்த - பெற்றிமையோர்

    என்று முதலாழ்வார்களென்னும் பெயரிவர்க்கு
    நின்றது உலகத்தே நிகழ்ந்து


    பேதை நெஞ்சே இன்றை பெருமை அறிந்திலையோ
    ஏது பெருமை இன்றைக் கென்றியேல் - ஓதுகின்றேன்

    வாய்த்த புகழ் மங்கையர்கோன் மாநிலத்தில் வந்துதித்த
    கார்த்திகையில் கார்த்திகைநாள் காண்


    மாறன் பணிந்த தமிழ்மறைக்கு மங்கையர்கோன்
    ஆரங்கம் கூற அவதரித்த - வீறுடைய

    கார்த்திகையில் கார்த்திகைநாள் இன்றென்று காதலிப்பார்
    வாய்த்தமலர்த் தாள்கள் நெஞ்சே வாழ்த்து


    கார்த்திகையில் ரோகினி நாள் காண்மினின்று காசினியீர்
    வாய்த்த புகழ்பாணர் வந்துதிப்பால் - ஆத்தியர்கள்

    அன்புடனே தான் அமலனாதிபிரான் கற்றதர்பின்
    நன்குடனே கொண்டாடும் நாள்


    மன்னியசீர் மார்கழியில் கேட்டையின்று மாநிலத்தீர்
    என்னிதனுக் கேற்ற மெனில் உரைக்கேன் - தன்னுபுகழ்

    மாமறையோன் தொண்டரடிப்பொடி ஆழ்வார் பிறப்பால்
    நான்மறையோர் கொண்டாடும் நாள்


    தையில் மகம் இன்று தாரணியீர் ஏற்றம் இந்தத்
    தையில் மகத்துக்கு சாற்றுகின்றேன் - துய்யமதி

    பெற்ற மழிசை பிரான் பிறந்த நாளென்று
    நற்றவர்கள் கொண்டாடும் நாள்


    மாசிப் புனர்பூசங் காண்மினின்று மன்னுலகீர்
    தேசித் திவசத்துக் கேதென்னில் - பேசுகின்றேன்

    கொல்லி நகர்க்கோன் குலசேகரன் பிறப்பால்
    நல்லவர்கள் கொண்டாடும் நாள்


    ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தை
    பாரோர் அறிய பகர்கின்றேன் - சீராரும்

    வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை
    நாதன் அவதரித்த நாள்


    உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பொருநாள்
    உண்டோ சடகோபர்க்கு ஒப்போருவர் - உண்டோ

    திருவாய்மொழிக்கு ஒப்பு தென்குருகைக்குண்டோ
    ஒரு பார் தனில் ஒக்கு மூர்


    இன்றைப் பெருமை அறிந்திலையோ ஏழை நெஞ்சே
    இன்றைக்கென் ஏற்றமெனில் உரைக்கேன் - நன்றிபுனை

    பல்லாண்டு பாடிய நம் பட்டர்பிரான் வந்துதித்த
    நல்லானியில் சோதி நாள்


    மாநிலத்தில் முன்னம் பெரியாழ்வார் வந்துதித்த
    ஆனி தன்னில் சோதி நாள் என்றால் ஆதரிக்கும் - ஞானியருக்கு

    ஒப்பொருவர் இல்லை இவ்வுலகுதனில் என்று நெஞ்சே
    எப்பொழுதும் சிந்தித்திரு


    மங்களாசாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்கள்
    தங்கள் ஆர்வத்தளவு தானன்றி - பொங்கும்

    பிரிவாலே வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றான்
    பெரியாழ்வார் என்னும் பெயர்


    கோதிலவாம் ஆழ்வார்கள் கூறு கலைக்கெல்லாம்
    ஆதி திருப்பல்லாண்டு ஆனதுவும் - வேதத்துக்கு

    ஓம் என்னும் அது போல் உள்ளத்துக்கெல்லாம் சுருக்காய்த்
    தான் மங்களம் ஆதலால்


    உண்டோ திருப்பல்லாண்டுக்கு ஒப்பதோர் கலைதான்
    உண்டோ பெரியாழ்வாருக்கு ஒப்பொருவர் - தண்டமிழ்நூல்

    செய்தருளும் ஆழ்வார்கள் தம்மில் அவர் செய்கலையில்
    பைதல் நெஞ்சே நீ உணர்ந்து பார்


    ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் மதுரகவி
    வாழ்வார் எதிராசர் ஆமிவர்கள் - வாழ்வாக

    வந்துதித்த மாதங்கள் நாள்கள் தம்மின் வாசியையும்
    இந்த உலகோர்க்கு உரைப்போம் யாம்


    இன்றோ திருவாடிப்பூரம் எமக்காக
    அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் - குன்றாத

    வாழ்வாக வைகுந்த வான் போகம் தன்னை இகழ்ந்து
    ஆழ்வார் திருமகளாராய்


    பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த
    திருவாடிப் பூரத்தின் சீர்மை - ஒருநாளைக்

    குண்டோ மனமே உணர்ந்துப் பார் ஆண்டாளுக்
    உண்டாகில் ஒப்பு இதற்கும் உண்டு


    அஞ்சுக் குடிக்கொரு சந்ததியாய் ஆழ்வார்கள்
    தன் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் - பிஞ்சாய்ப்

    பழுத்தாளை ஆண்டாளைப் பத்தியுடன் நாளும்
    வழுத்தாய் மனமே மகிழ்ந்து


    ஏரார் மதுரகவி இவ்வுலகில் வந்துதித்த
    சீராரும் சித்திரையில் சித்திரைநாள் - பாருலகில்

    மற்றுள்ள ஆழ்வார்கள் வந்துதித்த நாள்களிலும்
    உற்றது எமக்கென்று நெஞ்சே ஓர்


    வாய்த்த திருமந்திரத்தின் மத்திமமாம் பதம்போல்
    சீர்த்த மதுரகவி செய்கலையை - ஆர்த்தபுகழ்

    ஆரியர்கள் தாங்கள் அருளிச்செயல் நடுவே
    சேர்வித்தார் தாற்பரியம் தேர்ந்து


    இன்றுலகீர் சித்திரையில் ஏய்ந்த திருவாதிரைநாள்
    என்றையினும் இதனுக்கு ஏற்றமென்றான் - என்றவர்க்குச்

    சாற்றுகின்றேன் கேண்மின் எதிராசர் தம்பிறப்பால்
    நாற்றிசையும் கொண்டாடும் நாள்


    ஆழ்வார்கள் தாங்கள் அவதரித்த நாள்களிலும்
    வாழ்வான நாள் நமக்கு மண்ணுலகீர் - ஏழ்பாரும்

    உய்ய எதிராசர் உதித்தருளும் சித்திரையில்
    செய்ய திருவாதிரை


    எந்தை எதிராசர் இவ்வுலகில் எந்தமக்கா
    வந்துதித்த நாள் என்னும் வாசியினால் - இந்தத்

    திருவாதிரை தன்னின் சீர்மை தன்னை நெஞ்சே
    ஒருவாமல் எப்பொழுதும் ஓர்


    எண்ண அரும் சீர் பொய்கை முன்னோர் இவ்வுலகில் தோன்றிய ஊர்
    வண்மை மிகு கச்சி மலை மா மயிலை - மண்ணியில் நீர்

    தேங்கும் குறையலூர் சீர்க்கலியன் தோன்றிய ஊர்
    ஓங்கும் உறையூர் பாணன் ஊர்


    தொண்டரடிப் பொடியார் தோன்றிய ஊர் தொல் புகழ் சேர்
    மண்டங்குடி என்பார் மண்ணுலகில் - எண்டிசையும்

    ஏத்தும் குலசேகரன் ஊர் என்று உரைப்பர்
    வாய்த்த திருவஞ்சிக்களம்


    மன்னு திருமழிசை மாடத் திருக்குருகூர்
    மின்னு புகழ் வில்லிபுத்தூர் மேதினியில் - நன்னெறியோர்

    ஏந்த பத்திசாரர் எழில் மாறன் பட்டர் பிரான்
    வாய்ந்துதித்த ஊர்கள் வகை


    சீர் ஆறும் வில்லிபுத்தூர் செல்வத் திருக்கோளூர்
    ஏரார் பெரும்புதூர் என்னும் இவை - பாரில்

    மதியாரும் ஆண்டாள் மதுரகவி ஆழ்வார்
    எதிராசர் தோன்றிய ஊர் இங்கு


    ஆழ்வார்கள் ஏற்றம் அருளிச்செயல் ஏற்றம்
    தாழ்வாதும் இன்றியவை தாம்வளர்த்தோர் - ஏழ்பாரும்

    உய்ய அவர்கள் செய் வ்யாக்கியைகள் உள்ளதெல்லாம்
    வையம் அறிய பகர்வோம் வாய்ந்து


    ஆழ்வார்களையும் அருளிச்செயல்களையும்
    தாழ்வா நினைப்பவர்கள் தாம் நரகில் - வீழ்வார்கள்

    என்று நினைத்து நெஞ்சே எப்பொழுதும் நீ அவர் பால்
    சென்றணுகக் கூசித் திரி


    தெருள் உற்ற ஆழ்வார்கள் சீர்மை அறிவாரார்
    அருளிச்செயலை அறிவாரார் - அருள் பெற்ற

    நாதமுனி முதலான நம் தேசிகரை அல்லால்
    பேதை மனமே உண்டோ பேசு


    ஓராண் வழியாய் உபதேசித்தார் முன்னோர்
    ஏரார் எதிராசர் இன்னருளால் - பாருலகில்

    ஆசை உடையோர்க்கு எல்லாம் ஆரியர்காள் கூருமென்று
    பேசி வரம்பறுத்தார் பின்


    எம்பெருமானார் தரிசனம் என்றே இதற்கு
    நம்பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்தார் - அம் புவியோர்

    இந்த தரிசனத்தை எம்பெருமானார் வளர்த்த
    அந்தச் செயல் அறிகைக்கா


    பிள்ளான் நஞ்சீயர் பெரியவாச்சான் பிள்ளை
    தெள்ளார் வடக்குத் திருவீதிப் பிள்ளை

    மணவாளயோகி திருவாய்மொழியை காத்த
    குணவாளரென்று நெஞ்சே கூறு


    முந்துறவே பிள்ளான் முதலானோர் செய்தருளும்
    அந்த வ்யாக்கியைகள் அன்றாகில் - அந்தோ

    திருவாய்மொழிப்பொருளைத் தேர்ந்துரைக்க வல்ல
    குருவார் இக்காலம் நெஞ்சே கூறு


    தெள்ளாரும் ஞானத் திருக்குருகைப் பிரான்
    பிள்ளான் எதிராசர் பேரருளால் - உள்ளாரும்

    அன்புடனே மாறன் மறைப்பொருளை அன்றுரைத்தது
    இன்பமிகும் ஆறாயிரம்


    தஞ்சீரை ஞானியர்கள் தாம்புகழும் வேதாந்தி
    நஞ்சீயர் தாம்பட்டர் நல்லருளால் - எஞ்சாத

    ஆர்வமுடன் மாறன் மறைப்பொருளை ஆய்ந்துரைத்ததே
    ஒன்பதினாயிரம்


    நம்பிள்ளை தம்முடைய நல்லருளாலே வியிடப்
    பின் பெரியவாச்சான் பிள்ளை அதனால் - இன்ப

    வருபத்தி மாறன் மறைப்பொருளைச் சொன்னது
    இருபத்தி நாலாயிரம்


    தெள்ளியதா நம்பிள்ளை செப்புநெறி தன்னை
    வள்ளல் வடக்குத் திருவீதிப் பிள்ளை இந்த

    நாடறிய மாறன் மறைப்பொருளை நன்குரைத்தது
    ஈடு முப்பத்தி ஆறாயிரம்


    அன்போடு அழகிய மனவாளச் சீயர்
    பின்போரும் கற்றறிந்து பேசுகைக்காத் - தம்பெரிய

    போதமுடன் மாறன் மறையின் பொருளை உரைத்த
    தேதமில் பன்னீராயிரம்

     


    பெரியவாச்சான்பிள்ளை பின்புள்ளவைக்கும்
    தெரிய வ்யாக்கியைகள் செய்வால் - அரிய

    அருளிச்செயல் பொருளை ஆரியர்கட்கிப்போது
    அருளிச்செயலாய் தறிந்து


    நஞ்சீயர் செய்த வ்யாக்கியைகள் நாலிரண்டுக்கு
    எஞ்சாமை யாவைக்கும் இல்லையே - தஞ்சீரால்

    வையகுருவின் தம்பி மன்னு மணவாளமுநி
    செய்யுமவை தாமும் சில


    சீரார் வடக்குத் திருவீதிப்பிள்ளை யெழு
    தேரார் தமிழ் வேதத் தீடுதன்னைத் - தாருமெனவாங்கி

    முன் நம்பிள்ளை ஈயுண்ணி மாதவர்க்குத்
    தாங் கொடுத்தார் பின்னதனைத் தான்

     


    ஆங்கவர்பால்பெற்ற சிரியாழ்வானப்பிள்ளை
    தாங்கொடுத்தார் தம்மகனார் தங்கையில் - பாங்குடனே

    நாலூர்பிள்ளைக்கவர் தாம் நல்லமகனார்க்கவர் தாம்
    மேலோர்க்கீந்தா ரவரே மிக்கு

     


    நம்பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை
    என்பர் அவர் தம் ஏற்றத்தால் - அன்புடையோர்

    சாற்று திருநாமங்கள் தான் என்று நன் நெஞ்சே
    ஏத்ததனைச் சொல்லி நீ இன்று


    தன்னுபுகழ்க் கந்தாடை தோழப்பர் தம் உகப்பால்
    என்ன உலகாரியரோ என்று உரைக்கப் - பின்னை

    உலகாரியன் என்னும் பெயர் நம்பிள்ளைக்கு ஓங்கி
    விலகாமல் நின்றது என்று மேல்


    பின்னை வடக்குத் திருவீதிப்பிள்ளை அன்பால்
    அன்ன திருநாமத்தை ஆதரித்து - மன்னுபுகழ்

    மைந்தர்க்குச் சாத்துகையால் வந்து பரந்தது எங்கும்
    இந்தத் திருநாமம் இங்கு


    அன்னபுகழ் முடும்பை யண்ணல் உலகாசிரியன்
    இன்னருளால் செய்தகலை யாவையிலும் - உன்னில்

    திகழ் வசநபூடணத்தின் சீர்மை யொன்றுகில்லை
    புகழலவிவ் வார்த்தை மெய்யிப்போது

     


    முன்னங்குரவோர் மொழிந்த வசநங்கள்
    தன்னைமிகக் கொண்டுகற்றோர் தம்முயிர்க்கு - மின்னணியாச்

    சேரச்சமைத்தவரே சீர் வசநபூடணமென்
    பேரிக்கலைக்கிட்டார் பின்

     


    ஆர்வசந பூடணத்தி னாழ்பொரு ளெல்லாமறிவார்
    ஆரதுசொன்னேரி லநுட்டிப்பார் - ஓரொருவர்

    உண்டாகி லத்தனைகா ணுள்ளமே யெல்லார்க்கும்
    அண்டாத தன்றோ வது


    உய்ய நினைவுடையீ ருங்களுக்குச் சொல்லுகின்றேன்
    வையகுரு முன்னம்வாய்மொழிந்த - செய்யகலை

    யாம்வசந பூடணத்தி னாழ்பொருளைக் கற்றதனுக்
    காம்நிலையில் நில்லுமறிந்து

     


    தேசிகர்பால் கேட்ட செழும் பொருளைச் சிந்தைதன்னில்
    மாசறவே யூன்றிமனனஞ்செய் - தாசரிக்க

    வல்லார்கள் தாம்வசந பூடணத்தின் வான்பொருளைக்
    கல்லாத தென்னோ கவர்ந்து

     


    சச்சம்பிரதாயந் தாமுடையோர் கேட்டக்கால்
    மெச்சும் வியாக்கியைதா னுண்டாகில் - நச்சி

    அதிகரியு நீர் வசந பூடணத்துக் கற்ற
    மதியுடையீர் மத்தியத்தராய்

     


    சீர்வசநபூடணத்தின் செம்பொருளைச் சிந்தைதன்னால்
    தேறிலுமாம் வாய்கொண்டு செப்பிலுமாம் - ஆரியர்காள்

    என்றனக்கு நாளு மினிதாகா நின்றதையோ
    உந்தமக்கெவ்வின்ப முளதாம்.

     


    தம் குருவின் தாளிணைகள் தன்னில் அன்பொன்றில்லாதார்
    அன்பு தன் பால் செய்தாலும் அம்புயை கோன் இன்ப மிகு

    விண்ணாடு தானளிக்க வேண்டியிரான் ஆதலால்
    நண்ணாரவர்கள் திருநாடு

     


    ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே உடையன்
    ஆன குருவை அடைந்தக்கால் மாநிலத்தீர்!

    தேனார் கமலத் திரு மாமகள் கொழுநன்
    தானே வைகுந்தம் தரும்


    உய்ய நினையுண்டாகில் உன் குருக்கள் தம் பதத்தே
    வையும் அன்புதன்னை இந்த மாநிலத்தீர்! மெய் உரைக்கேன்

    பை அரவில் மாயன் பரம பதம் உங்களுக்காம்
    கையிலங்கு நெல்லிக்கனி

     


    ஆசாரியன் செய்த உபகாரம் ஆனவது
    தூய்தாக நெஞ்சு தன்னில் தோன்றுமேல் தேசாந்

    தரத்தில் இருக்க மனம் தான் பொருந்தமாட்டாது
    இருத்தல் இனி ஏதறியோம் யாம்

     


    தன் ஆரியனுக்குத் தான் அடிமை செய்வது அவன்
    இந்நாடு தன்னில் இருக்கும் நாள் அந்நேர்

    அறிந்தும் அதில் ஆசை இன்றி ஆசாரியனைப்
    பிரிந்திருப்பார் ஆர் மனமே! பேசு

     


    ஆசாரியன் சிச்சன் ஆருயிரைப் பேணும் அவன்
    தேசாரும் சிச்சன் அவன் சீர் வடிவை ஆசையுடன்

    நோக்கும் அவன் என்னும் நுண்ணறிவைக் கேட்டு வைத்தும்
    ஆர்க்கும் அந்நேர் நிற்கை அரிதாம்

     


    பின்பழகராம் பெருமாள் சீயர் பெருந்திவத்தில்
    அன்பதுவும் அற்று மிக்க வாசையினால் நம்பிள்ளைக்

    கான அடிமைகள் செய் அந்நிலையை நல் நெஞ்சே
    ஊனமற எப்பொழுதும் ஓர்

     


    ஆசாரியர்கள் அனைவரும் முன் ஆசரித்த
    ஆசாரந் தன்னை அறியாதார் பேசுகின்ற

    வார்த்தைகளைக் கேட்டு மருளாதே பூருவர்கள்
    சீர்த்தநிலை தன்னை நெஞ்சே! சேர்

     


    நாத்திகரும் நல் கலையின் நன் நெறிசேர் ஆத்திகரும்
    ஆத்திக நாத்திகருமாம் இவரை ஓர்த்து நெஞ்சே!

    முன்னவரும் பின்னவரும் மூர்க்கர் என் விட்டு நடுச்
    சொன்னவரை நாளும் தொடர்

     


    நல்ல மணம் உள்ளதொன்றை நண்ணி இருப்பதற்கு
    நல்ல மணம் உண்டாம் நயமது போல் நல்ல

    குணம் உடையோர் தங்கள் உடன் கூடி இருப்பார்க்கு
    குணம் அதுவே யாம் சேர்த்தி கொண்டு


    தீய கந்தம் உள்ளததொன்றைச் சேர்ந்திருப்பதொன்றுக்கு
    தீய கந்தம் ஏறும் திறமது போல் தீய

    குணம் உடையோர் தங்கள் உடன் கூடி இருப்பார்க்கு
    குணம் அதுவே யாம் செறிவு கொண்டு


    முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு
    பின்னோர்ந்து தாம் அதனைப் பேசாதே தம் நெஞ்சில்

    தோற்றினதே சொல்லி இதுசுத்த உபதேசவர
    வாற்றதென்பர் மூர்க்கர் ஆவார்

     


    பூருவாசாரியர்கள் போதம் அனுட்டானங்கள்
    கூறுவார் வார்த்தைகளைக் கொண்டு நீர் தேறி

    இருள் தருமா ஞாலத்தே இன்பம் உற்று வாழும்
    தெருள் தருமா தேசிகனைச் சேர்ந்து

     


    இந்த உபதேச ரத்தினமாலை தன்னைச்
    சிந்தை தன்னில் நாளும் சிந்திப்பார் எந்தை

    எதிராசர் இன் அருளுக்கென்றும் இலக்காகி
    சதிராக வாழ்ந்திடுவார் தாம்

     


    [ மணவாளமாமுனிகள் பெருமை ]

    மன்னுயிர்காள் இங்கே மணவாள மாமுனிவன்
    பொன்னடியாம் செங் கமலப் போதுகளை உன்னிச்

    சிரத்தாலே தீண்டில் அமான் அவனும் நம்மை
    கரத்தாலே தீண்டல் கடன்